Published:Updated:

ஒரத்தநாடு: தோல்வியில் கற்ற பாடம்; தவறுகளைச் சரிசெய்து கரை சேர்வாரா வைத்திலிங்கம்? - கள நிலவரம்

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம் ( ம.அரவிந்த் )

தோல்விக்குப் பிறகு, `இனி தன் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான்’ என வைத்திலிங்கம் நினைத்திருந்தபோது மீண்டும் அரசியல் வாழ்வுக்கான விளக்கை ஜெயலலிதா ஏற்றிவைத்தார்.

ஒரத்தநாடு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய வைத்திலிங்கம், இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், தன் அரசியல் எதிர்காலத்தை நிலைநிறுத்தப் போகும் தேர்தலான இதில், சில கணக்குகளைப் போட்டு களம் காணும் வைத்திலிங்கத்தின் முன் ஏகப்பட்ட சவால்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அவற்றைச் சமாளித்து கரை சேர்வாரா என்பதுதான் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஹாட் டாப்பிக்காகப் பேசப்பட்டுவருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைத்திலிங்கம், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் மீண்டும் களம் காண்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக வலம்வந்தவர், ஜெயலலிதாவின் கண்ணசைவைவைத்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அதைக் கச்சிதமாக செய்து முடித்ததால் ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார்.

டெல்டா மாவட்ட கட்சியினரால் `சோழமண்டலத் தளபதி’ என அன்பாக அழைக்கப்பட்டார். இந்தநிலையில் 2016 சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தி.மு.க வேட்பாளரான ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். இது வைத்திலிங்கத்தை மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரையும் அதிர்ச்சிகொள்ள வைத்தது. `ஒரத்தநாட்டுக்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்களைச் செய்து கொடுத்தேன். ஆனாலும் மக்கள் எனக்குத் தோல்வியைத் தந்துவிட்டனர்’ எனப் புலம்பிய வைத்திலிங்கம், அப்போது இரண்டு நாள்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தார். அதுவரை வைத்திலிங்கத்தின் காலையே சுற்றிவந்த முக்கிய நிர்வாகிகள் சிலரும் இனி வைத்திலிங்கம் கதை முடிஞ்சு போச்சு என அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தனர்.

ஒரத்தநாடு தொகுதி
ஒரத்தநாடு தொகுதி

அப்போது ஜெயலலிதாவிடமிருந்து போன் வர என்னமோ, ஏதோவென பதறியடித்துக்கொண்டு சென்னை சென்றவரை, `கவலைப்படாதீங்க வைத்தி. நான் இருக்குற வரை உங்களைக் கைவிட மாட்டேன்’ எனக் கூறி உடனடியாக ராஜ்யசபா எம்.பி பதவியைக் கொடுத்தார். வைத்தி மீது ஜெயலலிதா காட்டிய அக்கறையைக் கண்டு அவரைத் தவிர்த்தவர்களெல்லாம் மீண்டும் அவர் பின்னால் படையெடுக்கத் தொடங்கினர். தோல்விக்குப் பிறகு இனி தன் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என வைத்திலிங்கம் நினைத்திருந்தபோது மீண்டும் அரசியல் வாழ்வுக்கான விளக்கை ஜெயலலிதா ஏற்றி வைத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க-வின் முதற்கட்ட தலைவர்கள் பட்டியலில் வைத்திலிங்கம் இருக்கிறார். தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிபெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தேர்தலில் பல சவால்கள் முஷ்டியை முறுக்கிக்கொண்டு அவர் முன்னே நிற்கின்றன. ஒருவேளை, தோல்வியைத் தழுவினால் இந்த முறை கைதூக்கிவிட ஜெயலலிதாவும் இல்லை. மாறாக, அரசியலில் வைத்திலிங்கம் கதையை முடிக்க ஒரு குள்ளநரிக் கூட்டமே அவரைக்ஷ் சுற்றிக்கொண்டிருப்பதாக அ.தி.மு.க-வினரே பேசிவருகின்றனர். தனக்கு எதிராக வரும் பந்துகளைத் தடுத்து சமாளித்து, வைத்தி கரைசேருவாரா என்பதை அறிய ஒரத்தநாடு தொகுதிக்குள் வலம் வந்தோம்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசியதிலிருந்து,``ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராக இருந்த வைத்திலிங்கத்துக்கு சசிகலா குடும்பத்தின் ஆசியும் இருந்ததால் ஜெயலலிதாவால் 2001 தேர்தலில் முதன்முறை வாய்ப்பு வழங்க்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெற்றியும் பெற, அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதன் பின்னர் 2006, 2011 என ஹாட்ரிக் வெற்றி, அரசியலில் அவருக்கு ஏறுமுகத்தைப் பெற்றுத்தந்தது.

இந்தநிலையில், 2016 தேர்தலில், தான் தோல்வியடைவோம் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் மக்களிடையே எளிமையாகப் பழகிய தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வியடைந்தார். பணபலம் மக்கள் பலத்துக்கு முன் எடுபடவில்லை என தி.மு.க-வினர் கமென்ட் அடித்தனர். இதையடுத்து வைத்திலிங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் எதையும் சட்டை செய்யாமல் வழக்கம்போல் கட்சிப் பணியை மேற்கொண்டுவந்தார்.

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

இதையடுத்து ஐந்தாவது முறையாக சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளார். கடந்த முறை அடைந்த தோல்வி கற்றுக் கொடுத்த பாடத்தின் மூலம் ஏன் தோற்றோம் என்பதைக் கள ஆய்வு செய்து அதை களைந்து உற்சாகமாகக் களத்தில் சுழன்று வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பே ஏன் தோற்றோம் என்பதை அறிய தனியாக டீம் அமைத்து ஆய்வு செய்தார். அத்துடன் தனக்கு எதிராக உள்ளடி வேலை செய்த கட்சி நிர்வாகிகள் பற்றியும் விசாரணை மேற்கொண்டு பட்டியல் தயார் செய்துவைத்திருக்கிறார்.

தொகுதி முழுவதும் மக்களிடம் கருத்து கேட்டத்தில், அவர்கள் ஒரு சேர சொன்னது, ` நீங்க ஒன்றிய செயலாளராக இருக்கும்போது மக்களோடு மக்களாக இருந்தீங்க ஆனால் இப்போது மக்களிடமிருந்து விலகி நிக்கிறீங்க. உங்களைப் பார்க்க வேண்டும் என்றால்கூட எளிதாகப் பார்த்துவிட முடியாது. ஒரு சில நிர்வாகிகளைச் சந்தித்த பிறகே உங்களைப் பார்க்க முடியும் என்ற நிலை இருக்குது. இவையெல்லாம் உங்களுக்கு எதிரான மன நிலையை உண்டாக்கிவிட்டது. கட்சியின் கிளைச் செயலாளர்களை நீங்கள் சந்திக்கத் தவறிவிட்டீர்கள்’ என வரிசையாகப் பட்டியலிட்டுள்ளனர் மக்கள். தனி டீம் ஒன்று இதை வைத்தியின் கவனத்துக்கு கொண்டு சென்றது. `கடந்த தேர்தலின்போது அம்மா எனக்கு நிறைய பொறுப்புகளை கொடுத்திருந்தார் அதனால் நான் என் தொகுதியை கவனிக்கத் தவறிவிட்டேன்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஆனால் இந்த முறை அது போன்று நடக்காது’ என தொகுதி முழுவதும் உருக்கமாகப் பேசிவருகிறார். இதேபோல் கட்சியின் கிளைச் செயலாளர்கள் அனைவரையும் சந்தித்து `நீங்க எனக்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஆணி வேர்’ என சென்டிமென்ட்டாகப் பேசி அனைவரது செல் நம்பர்களையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அதைத் தன் பி.ஏ-விடம் கொடுத்து இந்த டைரி எப்போதும் கையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். திடீரென கிளைச் செயலாளர்களுக்கு போன் செய்து `நான் வைத்தி பேசுறேன்...’ என இன்ப அதிர்ச்சி கொடுப்பதுடன், கள நிலவரத்தை அறிந்துகொள்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக கிளைச் செயலாளர் தொடங்கி நிர்வாகிகள் வரை வைட்டமின் `ப’-வை வாரி இரைத்து உற்சாகமாக வைத்திருக்கிறார். தனக்கான தேர்தல் பணி செய்யும் குழுவிடம் சில நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியலை கொடுத்து, `இவங்களை நம்பாதீங்க. நமக்கு எதிரா உள்ளடி வேலை செய்வாங்க’ என்றும் எச்சரித்துள்ளார்.

ஒரத்தநாடு ஒன்றியத்திலுள்ள 58 பஞ்சாயத்துகளில் உள்ள முத்தரையர் சமூக மக்களை தனியாளாகச் சந்தித்து `உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன்’ என கையைப் பற்றிக்கொண்டு பேசியிருக்கிறார். தனக்கு எதிராக நின்ற அதிருப்தியாளர்களைச் சரிக்கட்டிவிட்டார். கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் மாவட்ட மாணவரணிச் செயலாளரான காந்தியிடம்,` எல்லோரும் சேர்ந்து என்னை அழிச்சது பத்தாதா’ என வெளிப்படையாகக் கத்தியிருக்கிறார். தான் தனி நபருக்கான ஆள் கிடையாது. கட்சியினர் எல்லோருக்கும் பொதுவானவன் என்பதை உணர்த்தவே பொதுவெளியில் அவர் அப்படிப் பேசியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் `நான் நெனச்சா, எட்டு தொகுதியில எந்தத் தொகுதியில வேணுமானாலும் போட்டியிடலாம். ஆனா என் சொந்த ஊர், சொந்தத் தொகுதியான இங்கே போட்டியிடத்தான் நான் விரும்புறேன்.

ஒரத்தநாடு
ஒரத்தநாடு

நீங்க கடந்த முறை எனக்குக் கொடுத்த தண்டனையை முழுசா அனுபவிச்சுட்டேன். 20 வருசத்துக்கு பிறகு செய்ய வேண்டியதை இப்பவே தொகுதிக்கு செய்து கொடுத்திருக்கேன். தமிழ்நாட்டிலேயே பேரூராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது இங்கே மட்டும்தான். வேற எங்கயும் இல்ல. தொகுதிக்கு இன்னும் செய்ய காத்திருக்கேன். எல்லோரும் `அண்ணே நாம வேறு தொகுதியில் போட்டியிடலாம்’னு சொன்னாங்க. நான் என்னோட தொகுதியிலிருந்தே எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்படனும்னு சொல்லி தவிர்த்துட்டேன். எல்லாம் உங்க கையிலதான் இருக்கு’ எனக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியிருக்கிறார். தேர்தல் பணிகளை மூத்த மகன் பிரபு, சம்பந்தி தவமணி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு அ.ம.மு.க பெரிய மைனஸாக இருக்கும் எனக் கள நிலவரத்தை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்டா மாவட்டத்திலேயே அ.ம.மு.க பெரும் பலத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பது ஒரத்தநாட்டில். அதனால்தான் தினகரன் இந்தத் தொகுதி மீதும் ஒரு கண் வைத்திருந்தார். மாவட்டச் செயலாளரான மா.சேகர் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெருமளவிலான இளைஞர்களை ஈர்த்துள்ள சேகர், தனிப்பட்ட முறையில் மக்கள் செல்வாக்குடன் வலம்வருபவர். சமீபத்தில் மா.சேகர் மகள் திருமணம் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் நடைபெற்றது. இதை ஒரு மாநாட்டைப்போல் நடத்தியதைப் பார்த்து தினகரன் மட்டுமல்ல, அ.தி.மு.க-வினரும் மெர்சல் ஆனார்கள். அ.தி.மு.க-வில் இருந்தபோதே மா.சேகர் வளர்ந்துவிடக் கூடாது என வைத்திலிங்கம் செயல்பட்டதால் இருவருக்கும் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் இருந்தன.

தினகரன் உடன் மா.சேகர்
தினகரன் உடன் மா.சேகர்

அதை மனதில்வைத்திருந்த சேகர் கடந்த முறை வைத்திலிங்கம் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எப்படியும் எம்.எல்.ஏ ஆகிவிட வேண்டும் என சேகர் தன் சக்தி முழுவதையும் தொகுதிக்குள் கொட்டி சில ஆண்டுகளாக உழைத்துக்கொண்டிருப்பதும் வைத்திக்கு பின்னடைவை உண்டாக்கும். தி.மு.க-வைச் சேர்ந்த புல்லட் ராமச்சந்திரன் என அழைக்கப்படும் எம்.ராமச்சந்திரன் வைத்திலிங்கத்தைத் தோற்கடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரே இந்த முறை களத்தில் போட்டியிடுகிறார். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொகுதி மக்களுடன் நெருங்கியிருக்கக்கூடியவர், எளிமையானவர் எனப் பெயரெடுத்த புல்லட், நேர்காணலின்போது, `எனக்கு சீட் கொடுங்க. ஒரத்தநாடு நமக்குத்தான்’ எனச் சொல்ல ஸ்டாலின் கலகலப்பாகிவிட்டாராம்.

வைத்திலிங்கத்தைத் தோற்கடித்த அதே அடையாளத்தோடு எம்.ராமச்சந்திரன் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள புல்லட்டில் புழுதி பறக்கக் கிளம்பிவிட்டார். இத்தனை சவால்களையும் சமாளித்து கரை சேருவாரா வைத்திலிங்கம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

வைத்திலிங்கம் தரப்பிலோ, ``இதுவரை இருந்த மைனஸ்கள் அனைத்தையும் ப்ளஸ் ஆக்கிவிட்டோம். இப்போது வைத்திலிங்கம் பொறுப்பிலுள்ள தொகுதிகளில் வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து அவர்களின் வெற்றிக்காக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். அதன் பிறகு ஒரத்தநாட்டில் முழு வீச்சில் கவனம் செலுத்துவார். பல திட்டமிடல்கள், சில கணக்குகள் இந்த முறை அண்ணனுக்கு ஜே போடவைக்கும்” என நம்பிக்கையுடன் கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு