Published:Updated:

தானா ஜெயிச்ச கூட்டம்!

‘உயிர்’ அமைப்பினர்
பிரீமியம் ஸ்டோரி
‘உயிர்’ அமைப்பினர்

தேர்தல் அரசியல் எல்லாம் 5 வருஷத்துக்கு ஒரு தடவை வர்றது சார். நாங்க மக்களோட குடும்ப உறுப்பினர்களா தொடர்புல இருக்கோம்

தானா ஜெயிச்ச கூட்டம்!

தேர்தல் அரசியல் எல்லாம் 5 வருஷத்துக்கு ஒரு தடவை வர்றது சார். நாங்க மக்களோட குடும்ப உறுப்பினர்களா தொடர்புல இருக்கோம்

Published:Updated:
‘உயிர்’ அமைப்பினர்
பிரீமியம் ஸ்டோரி
‘உயிர்’ அமைப்பினர்

தேர்தல்களில் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தைக் கைவிட்டுப் பணநாயகத்தைக் கையில் எடுத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட பணமும் பரிசுப் பொருள்களும் தாரளமாக விளையாடியது கோவை மாவட்டத்தில்தான். கழகங்கள் கரன்சி மழையைப் பொழிந்த அதே கோவையில்தான், சத்தமே இல்லாமல் ஒரு பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர். மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் ஏராளமான சமூக சேவைகளைச் செய்த, ‘உயிர்’ அமைப்பினர் தான் அவர்கள்.

தானா ஜெயிச்ச கூட்டம்!

அந்தப் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேச்சைகளாக தண்ணீர்க்குழாய்ச் சின்னத்தில் இந்த அமைப்பினர் போட்டியிட்டனர். அதில் 9 வார்டுகளில் வெற்றி பெற்று பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளனர். கோவையின் மற்ற இடங்களில் அசுரத்தனமான வெற்றியைப் பெற்ற தி.மு.க இங்கு 4 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது. அ.தி.மு.க ஒரு வார்டில்கூட வெல்லவில்லை.

மோப்பிரிபாளையம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவரும், உயிர் சமூக அமைப்பின் நிறுவனருமான சசிக்குமார், “கரிச்சி பாளையம்தான் எங்க சொந்த ஊர். பி.சி.எஸ் டிகிரி முடிச்சேன். விவசாயக் குடும்பம்ங்கறதால, கொஞ்ச நாள் விவசாயம் பண்ணிட்டு இருந்தேன். படிக்கறப்ப இருந்து எனக்கு கிரிக்கெட் மேல ஆர்வம் அதிகம். அதனால சின்னச் சின்னதா விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். அப்படியே முடிஞ்ச சமூகப் பணிகளைச் செஞ்சோம். 2006 உள்ளாட்சித் தேர்தல்ல என்னைய வார்டு மெம்பரா போட்டியே இல்லாமத் தேர்ந்தெடுத்தாங்க. அப்ப எனக்கு 25 வயசுதான் ஆகியிருந்துச்சு. அந்தத் தேர்தல்ல அ.தி.மு.க 7 வார்டுலயும், மற்றவங்க எல்லாம் சேர்ந்து 7 வார்டுலயும் ஜெயிச்சிருந்தாங்க.மெஜாரிட்டிக்கு நான் யாருக்கு ஆதரவு தரனோ அவங்கதான் தலைவராக முடியும். அப்ப என்னையவே தலைவரா இருந்துக்கோங்கன்னு ரெண்டு பேரும் சொன்னாங்க. அந்த நேரத்துல நான் அ.தி.மு.கவுக்கு சப்போர்ட் பண்ணினேன். அனுபவம் இல்லைங்கறதால தலைவர் பதவி வேண்டாம்னு சொல்லி, துணைத் தலைவரா பதவியேத்தேன்.அப்பறம் அ.தி.மு.கவுல சேர்ந்தேன். 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல்ல திருப்பியும் வார்டுல ஜெயிச்சு மோப்பிரிபாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் ஆனேன். என்னோட வளர்ச்சி, தலைவரா இருந்தவருக்குப் பிடிக்கல. எனக்கு அரசியல் செட் ஆகாதுன்னு அ.தி.மு.கவுல இருந்து விலகிட்டேன்.

`உயிர்’னு ஒரு அமைப்பைத் தொடங்கினோம். 1,000 டேபிள், சேர்களை வாங்கினோம். இதுவரை சுமார் 1,000 நிகழ்ச்சிகளுக்கு அந்த டேபிள், சேர்களைக் கொடுத்திருக்கோம். சுத்து வட்டாரத்துல 10 கி.மீ தொலைவுல எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நம்ம டேபிள், சேர்களை இலவசமா கொடுத்துட்டு வரோம். அதேமாதிரி இறப்பு நடக்கறப்ப ப்ரீஸர் பாக்ஸ், அமரர் ஊர்தி இலவசமா கொடுப்போம். பூங்கா கட்டிக் கொடுத்திருக்கோம். சின்ன வயசுல இருந்தே மரக்கன்று நட்டு பராமரிச்சுட்டு வரோம். கரிச்சிபாளையம் பகுதில ‘கரிசை வனம்’ பெயர்ல ஒரு குறுங்காடு உருவாக்கியிருக்கோம். 15 வருஷமா ரத்த தானம் பண்ணிட்டிருக்கோம்.

தானா ஜெயிச்ச கூட்டம்!

‘மாற்றம்’னு ஒரு அணியைத் தொடங்கி நான், என் அம்மா, அமைப்புல இருக்கற சில முக்கிய நிர்வாகிகள் போட்டியிட்டோம். அதிர்ஷ்டவசமா எல்லாருக்குமே தண்ணீர்க்குழாய்ச் சின்னம் கிடைச்சுது. மக்களோட மக்களா இருக்கறதால, பிரசாரம் பண்றப்பவே நாமதான் ஜெயிக்கப் போறோம்னு எங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு” என்றார்.

6-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள தீபா, “பி.சி.ஏ, பி.எட் படிச்சிருக்கேன். கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என் அப்பா, கணவர் எல்லாருமே அண்ணாகூட சேர்ந்து முடிஞ்ச உதவிகளைப் பண்ணுவாங்க. அதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்து அவங்களோட சேர்ந்து என்னால முடிஞ்ச பணிகளைச் செஞ்சேன். தேர்தல்ல நாங்க ஜெயிச்சுட்டு ஊர்ல வந்ததும் மக்கள் கைகொடுத்தெல்லாம் வாழ்த்து சொல்லலை; கட்டிப்பிடிச்சு அழுதாங்க. இதுதான் எங்க சமூகப் பணிக்குக் கிடைச்ச அங்கீகாரம்” என்கிறார்.

அவரைத் தொடர்ந்த சசிக்குமார், “தேர்தல் அரசியல் எல்லாம் 5 வருஷத்துக்கு ஒரு தடவை வர்றது சார். நாங்க மக்களோட குடும்ப உறுப்பினர்களா தொடர்புல இருக்கோம். கொரோனா காலகட்டத்துல இங்க இருக்கற அரசியல் கட்சிகள் வீட்டை விட்டு வெளியவே வரல. ஆனா, எங்க அமைப்புல யாருமே வீட்டுக்கே போகல. ரெண்டாவது அலைல நிலைமை ரொம்ப மோசமா இருந்துச்சு. எங்க ஊர்ல சுமார் 400-க்கும் மேற்பட்டவங்களுக்கு பாசிட்டிவ் ஆச்சு. அவங்களுக்கு பாதிப்பு எவ்ளோ சதவிகிதம்னு பார்த்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கிட்ட பேசி, அலைஞ்சு திரிஞ்சு அட்மிட் பண்ற வேலைகளைச் செஞ்சோம். மருத்துவமனைகள்ல பெட் கிடைக்கறவரை ஆம்புலன்ஸ்ல ஆக்சிஜன் வசதி வெச்சு, சுமார் 200 பேரோட உயிர்களைக் காப்பாத்தியிருக்கோம். சீக்கிரமே மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவரா பதவியேற்கப் போறேன். 24 மணி நேரம் குடிநீர், அடிப்படைத் தேவைகள் மக்களைத் தேடிப் போறதுன்னு நிறைய திட்டங்கள் இருக்கு. மோப்பிரிபாளையத்தை முன்மாதிரி பேரூராட்சியா கொண்டு வரதுதான் லட்சியம்” என்றார் உறுதியான குரலில்.