Published:Updated:

லேடீஸ் ஸ்பெஷல்

அனுசுயா
பிரீமியம் ஸ்டோரி
News
அனுசுயா

ஓட்டு வாங்குறதுக்கு வியூகமெல்லாம் வகுக்கலைங்க. வாக்காளர்கள் ஒவ்வொருத்தரோட வீட்டுக்குப் போறேன். அவங்களை என் ரிலேஷனா நினைச்சு ஓட்டுக் கேக்குறேன்

தன்னம்பிக்கை திலகபாமா!

லேடீஸ் ஸ்பெஷல்

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வின் ஸ்டார் வேட்பாளர் ஐ.பெரியசாமியை எதிர்த்து, பா.ம.க-வின் மாநிலப் பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். தென்மாவட்டங்களில் பா.ம.க போட்டியிடும் ஒரே தொகுதியும் இதுதான். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் போதிய ஒத்துழைப்பு இல்லை என்றாலும், தன்னம்பிக்கையுடன் தொகுதிக்குள் சுற்றிவருகிறார் திலகபாமா. ஒருபக்கம், ``குடகனாறு பிரச்னை பற்றி ஐ.பெரியசாமி என்னுடன் விவாதிக்கத் தயாரா?” என்றெல்லாம் அனல் தெறிக்கவிடும் திலகபாமா, இன்னொரு பக்கம், பெண்களுடன் வீட்டு வாசலில் அமர்ந்தபடியே, ``இன்னிக்கு என்ன சமையல்... புள்ளைங்க ஸ்கூலுக்குக் கிளம்பியாச்சா?” என்று சகஜமாகப் பேசியபடி சைக்கிள் கேப்பில் கேன்வாஸ் செய்துவிடுகிறார்.

லேடீஸ் ஸ்பெஷல்

“நான் உங்க வீட்டுப் பிள்ளை!”

சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அனுசுயாவுக்கு வயது 25. சேலம் மாவட்டத்தின் ஒரே இளம் வேட்பாளர் இவர்தான் என்கிறார்கள். டிப்ளோமா நர்ஸிங் முடித்திருப்பவர், தன்னோடு இளம் பட்டாளங்களைக் கூட்டிக்கொண்டு சுறுசுறுப்பாகப் பிரசாரத்துக்குக் கிளம்பிவிடுகிறார். “ஓட்டு வாங்குறதுக்கு வியூகமெல்லாம் வகுக்கலைங்க. வாக்காளர்கள் ஒவ்வொருத்தரோட வீட்டுக்குப் போறேன். அவங்களை என் ரிலேஷனா நினைச்சு ஓட்டுக் கேக்குறேன். ஜெயிச்சா உங்க வீட்டுப் பிள்ளையா இருந்து, உங்களுக்காக உழைப்பேன்’’ என்று சென்டிமென்ட் பிட் போடுகிறார்.

சுபாதேவி - லாவண்யா - ரஞ்சிதா - சசிகலா
சுபாதேவி - லாவண்யா - ரஞ்சிதா - சசிகலா

நோட்டீஸ் ஒரு ரூபா!

நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரி பாதி பெண்கள். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் பிரசாரம் களைகட்டுகிறது. தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் சுபாதேவி, பாலர் பள்ளியில் படிக்கும் தன் இரண்டு மகன்களையும் கையோடு பிரசாரத்துக்கு அழைத்துவந்துவிடுகிறார். கேட்டால், “வீட்டுக்காரர் வேலைக்குப் போயிடுவார். குழந்தைகளைப் பார்த்துக்க ஆளில்லைங்க” என்கிறார்.

குன்னூர் தொகுதியில் போட்டியிடும் லாவண்யா, நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளரும்கூட. “நீலகிரியிலிருந்து இதுவரை ஒரு பெண்கூட எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டதில்லை. நீலகிரியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க வாய்ப்பு கொடுங்கள்” என்று டச்சிங்காகப் பேசிவருகிறார் லாவண்யா.

ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்துள்ள கட்சிகளுக்கு மத்தியில், தனது பிரசார நோட்டீஸைக்கூட இலவசமாகக் கொடுக்காமல் ‘ஒரு நோட்டீஸ் ஒரு ரூபாய்’ என வசூலித்துவருகிறார் தாராபுரம் வேட்பாளர் ரஞ்சிதா. ‘இந்த நோட்டீஸை என் கைக்காசைப் போட்டுத்தான் அடிச்சிருக்கேன். இலவசமாக இந்த நோட்டீஸைக்கூட நான் கொடுக்க விரும்பலை. ஒரு ரூபாய் கொடுத்து இந்த நோட்டீஸை நீங்க வாங்கிக்கிட்டா மகிழ்ச்சியடைவேன்” என விவரமாகவே பிரசாரம் செய்துவருகிறார். இப்படியே 3,000 ரூபாயை வசூல் செய்திருப்பவர், அதை வைத்து மேலும் ஐந்தாயிரம் நோட்டீஸ் அடிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறாராம்.

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளரான சசிகலா, வேலை செய்யும் பெண்களிடம் துண்டுப்பிரசுரம் கொடுத்துவிட்டு, “நீங்க எங்க கொள்கையைப் படிங்க... அதுவரைக்கும் இந்த வேலையை நான் செய்யறேன்” என்று சொல்லிவிட்டு, கூடை பின்னுவது, பூ கட்டுவது என்று அசத்துகிறார்!

பரிதா - அமலு - கலையேந்திரி - ஜெயந்தி
பரிதா - அமலு - கலையேந்திரி - ஜெயந்தி

‘மகளிர் மட்டும்’ குடியாத்தம்!

1954-ல் காமராஜரை முதலமைச்சராக்கிய குடியாத்தம் தொகுதியில், இந்தமுறை பெண் வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்கியுள்ளார்கள்! அ.தி.மு.க-வில் பரிதா, தி.மு.க-வில் அமலு, அ.ம.மு.க-வில் ஜெயந்தி, நாம் தமிழர் கட்சியில் கலையேந்திரி எனத் திரும்பும் திசைகளிலெல்லாம் நால்வரும் நட்சத்திரங்களாகத் தொகுதிக்குள் ஜொலிப்பது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களில் தேர்தல் களத்துக்குப் புதுமுகமான பரிதா, நுனிநாக்கில் ஸ்டைலாக ஆங்கிலம் பேசுகிறார்.

கடந்த தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போன அமலு, தொகுதியில் நன்கு பரிச்சயமானவர். கிராமத்துப் பெண் தோற்றத்தில், “நான் ஒண்ணும் உங்களுக்குத் தெரியாத ஆளில்லை... ஒண்ணு மண்ணா பழகியிருக்கோம். இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்க” என்கிறார் சென்டிமென்ட்டாக. கடந்த முறை குடியாத்தம் தொகுதியிலேயே போட்டியிட்டு மண்ணைக் கவ்விய கலையேந்திரி, இந்த முறையும் தம்பிகளை நம்பியே வீரவசனம் பேசிவருகிறார். 2016 தேர்தலில் அ.தி.மு.க-வில் நின்று வெற்றிபெற்ற ஜெயந்தி, டி.டி.வி.தினகரனால் பதவியை இழந்தார். தொடர்ந்து 2019 இடைத்தேர்தலிலும் களம்கண்ட அவருக்கு வாக்குகள் அறுவடையாகவில்லை. எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் தொகுதிக்குள் சுழன்று வருபவர், “எனக்காக ஒரேயொரு முறை தொகுதிப் பக்கம் வந்து தலைகாட்டுங்க சின்னம்மா... ஹெலிகாப்டர் வாடகைகூட கொடுத்துடுறேன்” என்று சசிகலாவுக்கு தூதுவிட்டுள்ளாராம்!