Published:Updated:

“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ?” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்!

அ.சையது அபுதாஹிர்

அமைச்சர் கனவில் இருந்த தமிழக பி.ஜே.பி தலைவர்கள், இப்போது ஏதாவது பதவி கிடைக்காதா என்ற ஏக்கப் பெரும்மூச்சுடன் காத்திருக்கிறார்கள்.

“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ?” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்!
“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ?” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்!

பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற மோடியுடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. மக்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்ட எம்.பி-க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு நாள்களாகக் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பி.ஜே.பி தொண்டர்களும் நிர்வாகிகளும் கொண்டாட்டத்தோடு இதை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி-யினர் இந்த நிகழ்வுகளை எல்லாம் கொஞ்சம் வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்தியில் ஆட்சியைப்பிடித்தபோதிலும், தங்களால் பதவியை அனுபவிக்க முடியாத மனநிலையில் உழன்று கொண்டிருக்கிறார்கள் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள். 

“அ.தி.மு.க கூட்டணியில் தமிழகத்தில் பி.ஜே.பி சார்பில் 5 தொகுதிகளில் வேட்பாளர்கள் களம் இறங்கினார்கள். 2014-ம் ஆண்டு மூன்றாவது அணியாக பி.ஜே.பி தலைமையில் தனி அணி அமைத்துப் போட்டியிட்டபோதே அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதனால் 'இந்த முறை குறைந்தது மூன்று தொகுதிகளிலாவது பி.ஜே.பி வெற்றிபெறும்' என்று தமிழக பி.ஜே.பி-யினர் கணக்குப் போட்டனர். 'தேர்தல் முடிவுக்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெற்றிபெறப்போகும் மூவரில் யாருக்கு கேபினட் அந்தஸ்து, யாருக்கு இணையமைச்சர் அந்தஸ்து கிடைக்கும்' என்றெல்லாம் பி.ஜே.பி-க்குள் போட்டி நடந்தது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி வேட்பாளர்களின் கணக்குகளைத் தவிடுபொடியாக்கியது.

“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ?” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்!

'வெற்றி பெறுவார்கள்' என்று எதிர்பார்க்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களே பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்கள். மாநிலத் தலைவராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன், தி.மு.க வேட்பாளர் கனிமொழியைவிட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால், தமிழக பி.ஜே.பி மீது அகில இந்தியத் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. 

தேர்தல் முடிந்து மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்ததால், மிகவும் அப்செட்டாகிவிட்டார்கள், தமிழகத்தில் போட்டியிட்ட பி.ஜே.பி வேட்பாளர்கள். இருப்பினும் 'மத்திய அமைச்சர் பதவியை எப்படியும் பெற்றுவிட வேண்டும்' என்று டெல்லிக்குச் சிலர் படையெடுத்தனர். “அ.தி.மு.க-விடம் பேசி, எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட் வாங்கி, எங்களை அமைச்சராக்குங்கள்" என்று பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் கோரிக்கை மனுவோடு காத்திருந்தனர் சில தமிழக நிர்வாகிகள். ஆனால், "கொடுத்த வாய்ப்பையே பயன்படுத்திக்கொள்ளவில்லை; இனி குறுக்குவழியில் மத்திய அமைச்சராக முயல வேண்டாம்” என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிவிட்டது பி.ஜே.பி தலைமை. பதவியேற்றுக்கொள்ளும் ஆசையில் டெல்லி சென்ற தலைவர்களால், பதவியேற்பு விழாவில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் 'வெற்றி பெற்றுவிடுவார்' என்று சொன்னதால், தேர்தல் செலவுக்காக தன்னுடைய சில சொத்துகளை அடமானம் வைத்துச் செலவு செய்துள்ளார். அதேபோல், நயினார் நாகேந்திரனும் அவரின் சேமிப்பைத் தேர்தல் களத்தில் கரைத்துவிட்டார். பொன்னாரோ 'மீண்டும் தான் அமைச்சராகிவிடுவோம்' என்ற அசாத்திய நம்பிக்கையில் இருந்தார். ஆனால், தேர்தல் முடிவால் துவண்டுபோனார் அவர். தோல்வியைச் சந்தித்த இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் மத்திய ஆட்சியில் தாங்கள் அங்கம்பெற எடுத்த அனைத்து முயற்சிகளுமே வெறும் முயற்சியாகவே போய்விட்டது. இதனால், இப்போது புதிய திட்டத்தோடு டெல்லிக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் தமிழக தலைவர்கள்.

“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ?” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்!

கடந்த சில நாள்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற மாநில பி.ஜே.பி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய தமிழிசை, “எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள்” என்று ஓப்பனாகவே அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் தனக்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் புள்ளிகள் மூலம் டெல்லி பி.ஜே.பி தலைமையிடம், “மத்திய ஆட்சியில்தான் பங்கு தரவில்லை. வேறு ஏதாவது வாரியம் போன்ற பதவியை வாங்கித் தாருங்கள். நான் ஏற்கெனவே கயிறு வாரியத்தில் பொறுப்பிலிருந்தேன். தேர்தலுக்காக அதை ராஜினாமா செய்தேன். இந்த முறை ஏதாவது நல்ல பொறுப்பை எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லியுள்ளார். ஹெச்.ராஜாவும், “அமைச்சர் வாய்ப்பு இல்லையென்றால் என்ன, மத்தியில் எவ்வளவோ வாரியங்கள் இருக்கிறதே... தேசியச் செயலாளராக இருக்கும் எனக்கு அவற்றில் ஏதாவதொரு வாய்ப்பு வேண்டும். எந்தப் பொறுப்பும் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்வது கடினம்” என்று சொல்லியுள்ளார்.

தமிழிசை தரப்போ, “மாநிலத் தலைவராக நான் இருப்பதால் மத்திய அரசுத் துறைகளில் எந்தப் பொறுப்பும் நான் கேட்கவில்லை. ஆனால், அடுத்த ஆறுமாதம் கழித்து, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து என்னை எடுக்க நினைத்தால் அதற்குப் பதிலாக எனக்கு வேறு நிறுவனங்களில் பதவி அளித்துவிடுங்கள்” என்று சொல்லியுள்ளார். அதேநேரம் டெல்லி பி.ஜே.பி தரப்பு, இவர்கள் தரும் அழுத்தம் காரணமாக, சில முடிவுகளை விரைவில் எடுக்க உள்ளது. ஏற்கெனவே மத்திய அமைச்சர் பதவி, தமிழகத்தில் இல்லாமல் இருப்பதால் பி.ஜே.பி-யில் உள்ள நிர்வாகிகள் இருவருக்கு முக்கிய துறைகளில் போர்டு தலைவர் பதவியை வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளது.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத் தமிழக பி.ஜே.பி தலைவர் பதவியைக் கொடுத்து அவரைச் சரிக்கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். 'எந்தப் பதவி கிடைத்தாலும் அது அமைச்சர் பதவிக்கு ஈடாகாது' என்கிற வருத்தம் இன்னும் பி.ஜே.பி தலைவர்களிடம் இருப்பதால், தனி ரூட்டில் அ.தி.மு.க-விடம் பேசி ராஜ்யசபா பதவியைப் பெற முடியுமா என்கிற ஏக்கம் இப்போதும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகள் மத்தியில் நம் கட்சி ஆட்சியிலிருந்தது. நாம் சொல்வதைக் கேட்கும் மாநில அரசு இருந்தும் ஒரு இடங்களில்கூட வெற்றி பெறமுடியாத அளவுக்குக் கட்சியை வைத்திருக்கிறீர்கள். இதில் ராஜ்யசபா மூலம் பதவியைப் பெறமட்டும் துடிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கொட்டு வைத்துள்ளது பி.ஜே.பி தலைமை. அமைச்சர் கனவில் இருந்த தமிழக பி.ஜே.பி தலைவர்கள், இப்போது ஏதாவது பதவி கிடைக்காதா என்ற ஏக்கப் பெரும்மூச்சுடன் காத்திருக்கிறார்கள்.

Vikatan