Published:Updated:

`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்!'-ம.நீ.ம வேட்பாளரால் குமுறும் நிர்வாகிகள்

கே.குணசீலன்
`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்!'-ம.நீ.ம வேட்பாளரால் குமுறும் நிர்வாகிகள்
`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்!'-ம.நீ.ம வேட்பாளரால் குமுறும் நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் சம்பத் ராம்தாஸ், பிரசாரத்தில் ஈடுபட்டபோது தங்கிய ரூம் வாடகை, போஸ்டர் அடித்த பிரஸ், கார் வாடகை உள்ளிட்டவற்றுக்கு பாக்கிப் பணம் தரவேண்டியுள்ளதாம். லோக்கல் நிர்வாகிகளிடம் பணம் பெற வேண்டியவர்கள் அலைந்துகொண்டிருக்கும் நிலையில், வேட்பாளர் இதைக் கண்டுகொள்ளாமலும், முறையான பதில் எதுவும் சொல்லாமலும் இருப்பது நிர்வாகிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்!'-ம.நீ.ம வேட்பாளரால் குமுறும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சார்பில்  வேட்பாளராகப் போட்டியிட்டவர், சம்பத் ராம்தாஸ். இவர், முத்துப்பேட்டை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் சென்னையிலேயே செட்டில் ஆனவர். நடிகர் கமல்ஹாசன் வேட்பாளாரை அறிவிப்பதற்கு முன் சில நிர்வாகிகளை அழைத்து, இவர்தான் தஞ்சைத் தொகுதி வேட்பாளார். இவருக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என அறிவுறுத்தினார். சம்பத் ராம்தாஸ், தேர்தல் நேரத்தில் தஞ்சையில் தங்கியிருந்தபடியே பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நடிகர் கமல்ஹாசன், இவரை ஆதரித்து தஞ்சை சிவகங்கைப் பூங்கா பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, வேட்பாளர் சம்பத் ராம்தாஸ் சம்பாதித்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். சம்பாதிப்பதற்காக வரவில்லை. யார் காசுக்கும் ஆசைப்படாதவர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை ஜெயிக்கவைக்க வேண்டும் என்றார். இதையடுத்து, தேர்தல் முடிவில் சுமார் 24,000 வாக்குகள் பெற்றார்.

இந்த நிலையில், சம்பத் ராம்தாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தஞ்சையில் தங்கியிருந்த ரூம் வாடகை மற்றும் சில நிர்வாகிகள் தங்கியிருந்த ரூம் வாடகை, போஸ்டர் அடித்த செலவு, பயன்படுத்திய கார் வாடகை எனப் பலவற்றிற்கு பணம் பாக்கி தர வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. பணம் பெறவேண்டியவர்கள், லோக்கலில் உள்ள நிர்வாகிகளைப் பணம் கேட்டு தொந்தரவு செய்துவருவதாகவும், ஆனால் வேட்பாளர் தேர்தல் முடிந்த உடனேயே சென்னைக்குச் சென்றுவிட்டதாகவும், பணம் கேட்டால், முறையான பதில் சொல்லவில்லை என்றும் புலம்பிவருகின்றனர்.

`தேர்தல் முடிந்துவிட்டது, ரூம், கார் வாடகை கொடுங்கள்!'-ம.நீ.ம வேட்பாளரால் குமுறும் நிர்வாகிகள்

இதுகுறித்து நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``நம்மவர் கமல்ஹாசன், சம்பத் ராம்தாஸை வேட்பாளாராக அறிவித்த உடன் நாங்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டோம். அவர் சென்னையிலேயே செட்டில் ஆனவர் என்பதால், நிர்வாகிகள்தான் அவரை வழி நடத்தினோம். பிரசாரத்திற்காக வேன், கார் உள்ளிட்டவற்றை வாடகைக்கு எடுத்தோம். அதற்கு இன்னும் முழுமையாகப் பணம் செட்டில் செய்யவில்லை. இதேபோல், தங்கியிருந்த ரூம் வாடகை, பிரசாரத்திற்கான போஸ்டர் அடித்த பிரஸ், செய்தித்தாள்களில் கொடுக்கப்பட்ட விளம்பரம் எனப் பலருக்கு மொத்தம் சுமார்  ரூ.5 லட்சம் வரை பணம் பாக்கிஉள்ளது. சம்பத் ராம்தாஸ் வெளியூர்காரர் என்பதால் உள்ளூரில் உள்ளவர்கள் பழக்கத்தின் அடிப்படையிலேயே இவை அனைத்தையும் கடனுக்கு செய்துகொடுத்தனர். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, அவர் இதை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. நாங்க, சார் பாக்கி பணம் தர வேண்டியவர்கள் பணம் கேட்டு வருகின்றனர். எப்போது பணம் கொடுப்பீர்கள் என கேட்டும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதோடு, பணம் இருக்கும் நேரத்தில் தருகிறேன் என்கிறார் . இதை நாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னால், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இனிமேல் பொறுத்திருக்க முடியாது. உடனே பணத்தைத் தர வேண்டும் எனக் கூறுகின்றனர்.

தரவேண்டிய பணத்திற்காக சம்பத் ராம்தாஸ் கொடுத்த காசோலையும் பவுன்ஸ் ஆகிவிட்டது. இப்போது போன் செய்தால், அவர் போனை எடுப்பதில்லை. கமல் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என நினைத்து, ஆரம்ப காலத்தில் இருந்து செயல்படுபவர்கள் நாங்கள். ஆனால், சம்பத் ராம்தாஸ் போன்ற ஆட்கள் அதைப் பற்றி கவலைப்படாமல், கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், இதுபோன்று நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. இதில், தலைமை தலையிட்டு உடனே பணத்தைக் கொடுக்கவேண்டியவர்களிடம் கொடுக்க வேண்டும்'' என்றனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் ஊடகத் தொடர்பாளரான மகாலெக்ஷ்மியிடம் பேசினோம். `உடனே இதைத் தலைமையின் கவனத்திற்குக் கொண்டுசெல்கிறேன்' எனத் தெரிவித்தார். இந்த புகார் குறித்து ராம்தாஸிடம் கேட்டபோது, "எனக்கு வேண்டாதவர்கள் இப்படி அவதூறு பரப்புகிறார்கள்" என்று முடித்துக்கொண்டார்.

Vikatan