Published:Updated:

``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை

கு.ஆனந்தராஜ்

``என் மனதிலும் சில வருத்தங்கள் இருக்கின்றன. அவை என்னுடன் போகட்டுமே!"

``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை
``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை

வெற்றி தோல்வியைத் தாண்டி, எல்லாச் சூழல்களிலும் உற்சாகத்துடன் செயல்படுவது தமிழிசையின் பிளஸ். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன், எந்தக் கேள்வியை முன்வைத்தாலும் அசராமல் பதிலளிக்கக்கூடியவர். தேர்தல் ஆரவாரங்கள் அரங்கேறி முடிந்துள்ள நிலையில், பர்சனல் விஷயங்கள் குறித்து தமிழிசையிடம் உரையாடினோம். அவரிடமிருந்து உற்சாகமாகப் பதில்கள் வருகின்றன.

``தேர்தல் தோல்விக்குப் பிறகு உங்கள் உற்சாகம் குறைந்ததுபோல இருக்கிறதே..."

(சிரிக்கிறார்) ``அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! மாதக்கணக்கில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். நிறைய மேடைகளில் பேசினேன். ஓய்வின்றி தொடர்ந்து வேலை செய்ததால் ஏற்பட்டிருக்கும் சின்ன சோர்வுதானே தவிர, என் உற்சாகம் குறையவில்லை." 

``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை

`` முழுநேர அரசியல் பணிக்கு வந்த பிறகு, மருத்துவர் பணியிலேயே இருந்திருக்கலாமோ என நினைத்ததுண்டா?"

`` `எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு'

- இந்தக் குறள்தான் என் செயல்பாடுகளுக்கான தூண்டுகோல். எந்த நிலையிலும் என் பயணத்தை முடக்கிவிட முடியாது. எல்லாச் சூழலும் நமக்குச் சாதகமாகவே இருக்காது. நம் திறமைக்கான வாய்ப்புகள் நிச்சயம் நம்மைத் தேடிவரும். எந்த இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவரக்கூடிய ஆற்றல் எனக்குண்டு. நான் குறுக்கு வழியில் பயணிக்க விரும்பமாட்டேன். பதவிகளுக்காக யாரிடமும் கோரிக்கை வைப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. என் திறமையை நம்பித்தான் எங்கள் கட்சித் தலைமை எனக்கு மாநிலத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறது. அந்தப் பணியை உற்சாகம் குறையாமல் செய்துவருகிறேன். ஒவ்வொருவரும் அவரவர் மனதிலுள்ள வீரியங்களையும், சுக துக்கங்களையும் பொது வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என் மனதிலும் சில வருத்தங்கள் இருக்கின்றன. அவை என்னுடன் போகட்டுமே! இப்போது முழுநேர மருத்துவர் பணியை என்னால் செய்ய முடியவில்லையே தவிர, மருத்துவ முகாம்களை நடத்துகிறேன். அரசியலுக்கு வந்ததால் ஒருநாளும் வருத்தப்படவில்லை."

``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை

``தேர்தலில் போட்டியிடாமல் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனையும் உங்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் மற்றும் பதிவுகள் வெளியானதே. இது குறித்து உங்கள் கருத்து?"

``இதுபோன்ற பதிவுகளை எந்த நோக்கத்தில் வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. யாருடனும் என்னை ஒப்பிடமாட்டேன். எங்கள் கட்சித் தலைமை ஒவ்வொருவருக்கும் ஓர் அளவுகோலை வைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதுதான் சரி. தற்போதைய என் மாநிலத் தலைவர் பொறுப்பும் உயர்ந்ததுதான். இதையும் கட்சித் தலைமைதான் எனக்குக் கொடுத்தது. எனவே, என் பணியைச் சரியாகவே செய்துவருகிறேன். அதனால்தான், தலைவர் பதவியிலிருந்து என்னை மாற்றிவிடுவார்கள் எனத் தொடர்ந்து சிலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதையெல்லாம் நான் கண்டுகொள்ளமாட்டேன்."

``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை

``இன்னும் மக்கள் பிரதிநிதியாக முடியவில்லையே என உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா?" 

``கிடைக்க வேண்டிய நேரத்தில்தானே வெற்றி கிடைக்கும். அதற்காக வருத்தப்பட்டால் உற்சாகமாக வேலை செய்ய முடியுமா? `என்னைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் நலனுக்காகப் பணியாற்றும் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருப்பேன்' என்றுதான் தூத்துக்குடி மக்களிடம் வாக்கு கேட்டேன். ஆனால், மக்கள் என்னைத் தோற்கடித்தார்கள். `சரியான நபரைத் தேர்ந்தெடுக்காமல் விட்டதால், தூத்துக்குடி மக்கள் தங்களின் தவற்றை உணர்வார்கள்' என்றேன். அதையேதான் இப்போதுதான் சொல்கிறேன். தேர்தல்களில் மக்கள்தான் என்னை நிராகரிக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் மக்களை நிராகரிப்பதில்லை. அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிறேன்." 

``என் மனதில் வருத்தங்கள் இருக்கின்றன; அவை என்னுடன் போகட்டுமே!" - தமிழிசை

``அரசியல் பணிகளால் குடும்பத்துக்கான நேரத்தைச் செலவிடுவதில் சிரமம் ஏற்படுகிறதா?"

``இளமைக் காலத்தில் என் அப்பாவுடன் அதிக நேரம் செலவிட்டேன். அவர் அரசியல் பணிகளுக்கு அதிக நேரம் செலவிட்டு உழைத்தார். அதையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வளர்ந்ததால், அரசியல் மற்றும் நிஜ வாழ்க்கைக்கான யதார்த்தம் எனக்குச் சுலபமாகப் புரிகிறது. கட்சி, குடும்பம், வாசிப்பு, பயணம் என எல்லாவற்றுக்கும் உரிய நேரத்தைச் செலவிடுவது என் வழக்கம். ஆனால், நம்மை அறியாமல் குடும்பப் பணிகளுக்குச் சிலநேரங்களில் கவனம் செலுத்த நேரமில்லாமல் போகிறது. பல தளங்களிலும் இயங்கும் பெண் அரசியல்வாதிகளுக்கு அன்றாடப் பணிகள் என்பது பெரிய சவால்தான். அதையெல்லாம் என் கணவர் நன்கு உணர்ந்து, எனக்கு உதவுகிறார். அவரிடம் என் எல்லாப் பணிகள் குறித்தும் விவாதிப்பேன்."

Vikatan