Published:Updated:

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

ஆ.விஜயானந்த்

` சார்..தயவு செய்து இனியொருமுறை ஓட்டிங் மெஷினால் பிரச்னை என்று சொல்லாதீர்கள். ஓட்டிங் மிஷினில் பிரச்னை என்றால் தி.மு.க எப்படி ஜெயித்திருக்கும். இன்னொரு விஷயம், 200 ரூபாய் காசு போய்ச் சேராததுதான் பிரச்னை எனச் சொல்கிறீர்கள். அந்தப் பணம் போய்ச் சேர்ந்ததுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்.

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!'  - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி
` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் மோதல் ஆடியோ வடிவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ` தினகரன் வீட்டில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா தொடர்பாகப் பேசப்பட்ட விஷயங்கள்தான், தங்கத்தின் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் அவர் இணைவதும் உறுதியாகிவிட்டது' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார் தினகரன். கூட்டத்தின் முடிவில் தினகரனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் தங்கம். அப்போதே சில நிர்வாகிகள், ` அ.ம.மு.க-வில் நீண்டநாள்களுக்குத் தங்கம் நீடிப்பதற்கு வாய்ப்பில்லை; மோதல் முற்றி வருகிறது' எனத் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. ` நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள். எனக்குத் தெரியாமல் என்னுடைய மாவட்டத்திலேயே கூட்டம் போடுகிறீர்கள். நான் மதுரையில் கூட்டம் போடட்டுமா?' எனக் கூறிவிட்டு, தினகரனைக் கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்ச்செல்வன். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலைக்குள் அ.ம.மு.க-வில் இருந்து தங்கம் நீக்கப்படுவார் என்ற தகவல்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!'  - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

தங்க தமிழ்ச்செல்வன் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

சென்னை அடையாற்றில் உள்ள தினகரனின் வீட்டில் அண்மையில் ஐவர் அணியின் கூட்டம் ஒன்று நடந்தது. `நாம் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்வதில்லை எனக் கோபப்படுகிறார் தினகரன்' என்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார் தங்க  தமிழ்ச்செல்வன். கூட்டத்தில் தினகரன், பழனியப்பன், வெற்றிவேல், மாணிக்கராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தேர்தல் தோல்வி குறித்து விவாதித்துள்ளனர். அப்போது இடைமறித்த தங்கம், ` சார்.. தயவுசெய்து இனியொருமுறை ஓட்டிங் மெஷினால் பிரச்னை என்று சொல்லாதீர்கள். ஓட்டிங் மிஷினில் பிரச்னை என்றால் தி.மு.க எப்படி ஜெயித்திருக்கும். இன்னொரு விஷயம், 200 ரூபாய் காசு போய்ச் சேராததுதான் பிரச்னை எனச் சொல்கிறீர்கள். அந்தப் பணம் போய்ச் சேர்ந்ததுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். இந்தப் பணத்தை வாங்கியவர்கள், அம்மாவோட காசை இவங்கதான் வச்சிருக்காங்க எனப் பேசத் தொடங்கிவிட்டனர். சொல்லப் போனால், பணத்தைக் கொடுத்துக் கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டோம். அது தெரியாமல் பணம் எங்கே போச்சு எனக் கேட்டுக் கொண்டிருந்தால் இருக்கும் நிர்வாகிகளும் கட்சியைவிட்டு ஓடிப் போய்விடுவார்கள். பணத்தைப் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதுவேறு விஷயம். அதுதான் காரணம் எனச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உண்மையில், அ.தி.மு.க-வைத் தோற்கடிப்போம் என எப்போது நாம் பேச ஆரம்பித்தோமோ, அப்போதே நம்முடைய தோல்வி தொடங்கிவிட்டது. 

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!'  - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவோம் என நீங்கள் கூறிய வரையில் மக்கள் மத்தியில் நமக்கு ஒரு வேல்யூ இருந்தது. இன்னொரு கட்சியைத் தொடங்குவோம், அ.தி.மு.க-வை தோற்கடிப்போம் எனப் பேசியபோது, மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை' என விவரித்திருக்கிறார். இந்தக் கருத்தில் உடன்படாத வெற்றிவேல், ` நீங்கள் அமைதியாக இருங்கள். ஓட்டிங் மிஷினில் விளையாட்டைக் காட்டிவிட்டார்கள். பெரம்பூரில் எனக்கு இவ்வளவு ஓட்டுகள்தான் வந்திருக்குமா?' எனக் கோபப்பட்டிருக்கிறார். ` நான் உங்களிடம் பேசவில்லை. என் மனதில்பட்டதை அவரோடு பேசிக்கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க-வே நம்பக்கம்தான் இருக்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், அம்மா உருவாக்கிய ஒன்றரை கோடித் தொண்டர்கள் எங்கே போய்விட்டார்கள்' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

இந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்த டி.டி.வி. தினகரன், ` ஒன்றரை கோடி உறுப்பினர்கள் நமக்கு எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது. அப்படியொரு தவறான புள்ளிவிவரத்தை அம்மாவே பொய்யாகச் சொல்லியிருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரப்பட்ட தங்கம், ` சார்..தப்பா எடுத்துக்காதீங்க. அம்மாதான் எங்களுக்குக் கடவுள். அவரே பொய் சொன்னார் என நீங்கள் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியமைத்தவர் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் நான் நிற்பதையே அவமானமாக நினைக்கிறேன்' எனக் கோபப்பட, அவரைச் சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்துள்ளன. இருப்பினும், ` எனக்குப் பல் வலி அதிகமாக இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கப் போகிறேன்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். 

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!'  - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

தினகரன் வீட்டில் இருந்து வெளியே வந்தவர், ` என்ன கருமத்தை வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொள்ளட்டும். அம்மா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம். நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்தது அம்மாதான்' என ஆதரவாளர்களிடம் பொங்கியிருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில், `வேலுமணியைச் சந்திக்கக் கிளம்பிவிட்டார் தங்கம்' எனத் தகவல் பரவியுள்ளது. இந்தத் தகவலால் மேலும் டென்ஷன் ஆகிவிட்டார் தங்கம். `ஆன்லைன் டீம்தான் இப்படிச் செய்கிறது' என ஆத்திரப்பட்டிருக்கிறார். 

- ஐவர் அணிக் கூட்டத்தில் நடந்ததை நம்மிடம் விவரித்து முடித்த தங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர், `` சசிகலா சிறைக்குச் சென்ற நாளில் இருந்தே அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் முடிவில் இருந்தார் தங்கம். அதற்கான வாய்ப்பைத் தினகரன் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தஞ்சாவூருக்குப் பரோலில் வந்தபோது, சசிகலாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் என்ன பேசுகிறார் என்பதைக் கண்காணிக்க கோவை நாகராஜை உடன் அனுப்பிவைத்தார் தினகரன். சிறையில் சந்தித்தபோதும், தினகரன் தரப்பினர் உடன் இருந்தனர். `உங்களோடு மனம் திறந்து ஒரு மணி நேரம் பேச வேண்டும்' என சசிகலாவிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார். அதற்கான அனுமதியைத் தினகரன் தரப்பினர் அளிக்கவில்லை. அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குச் செந்தில்பாலாஜி போனபோது, ` தங்கம் வந்தாலும் மாவட்டப் பொறுப்பு உறுதியாகக் கிடைக்கும்' எனத் தி.மு.க தரப்பில் இருந்து சிக்னல் வந்திருக்கிறது.

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!'  - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

காரணம், தேனியில் மூக்கையாவைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு ஆட்கள் கிடையாது என்பதுதான். கட்சியில் சீனியரான மூக்கையாவும் தங்கம் வருகைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், இந்தக் கோரிக்கையை தங்கம் நிராகரித்துவிட்டார். ` அ.ம.மு.க-வில் இருப்பதைத்தான் விரும்புகிறேன். ஆனால், என்னை விரட்டியே ஆக வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார்' என வேதனைப்பட்டார். தங்கம் அணி மாறும் தகவலை அறிந்த தினகரனும்,  ` போவதாக இருந்தால் போகட்டும். கட்சியில் இருந்துகொண்டு நம்மைத் திட்டிக்கொண்டே இருந்தால் சரியாக இருக்காது. பதிலுக்கு நான் திட்டினால் தங்கம் தாங்க மாட்டார்' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது ஆடியோவும் வெளியானதால் தாய்க்கட்சியில் இணையும் முடிவில் உறுதியாக இருக்கிறார் தங்கம்" என நடந்த சம்பவத்தை விவரித்தனர். 

` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்?!'  - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி

அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். `` அ.தி.மு.க-வுக்குத் தங்க தமிழ்ச்செல்வன் வருவது உறுதியாகிவிட்டது. ஆனால், மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுமா என்பதற்குத் தலைமைதான் பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமியோடு நல்ல அணுகுமுறையில் இருக்கிறார் தங்கம். அவர் வருவதன் மூலம் தினகரனின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியும் என நினைக்கிறார். கூடவே, தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்க முடியும் எனவும் கணக்குப் போடுகிறார். தன்னுடைய மகனை வெற்றி பெற வைத்துவிட்டு ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் பன்னீர்செல்வத்தால் தோல்வி ஏற்பட்டதை எடப்பாடியால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தால் தி.மு.க-வுக்கு மரண அடியைக் கொடுத்திருக்க முடியும். அப்படியொரு வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் பன்னீர்செல்வம் என ஆதங்கப்படுகிறார் எடப்பாடி. தங்கம் வருகையின் மூலம் தேனி மாவட்டத்தில் தன்னுடைய கரம் ஓங்கும் என உறுதியாக நம்புகிறார் முதல்வர்" என அமைதியாக விவரித்து முடித்தனர். 

பொதுவாக, செல்போனுக்கு வரும் அழைப்புகளை ரெக்கார்டு செய்யும் வழக்கம் தங்கத்துக்குக் கிடையாது. வாட்ஸ்அப் காலில் பேசுவதையும் விரும்ப மாட்டார். `நமக்கு எல்லாம் ஆன் ரெக்கார்டுதான்' எனச் சிரித்தபடியே கூறுவார். ` அப்படியொரு ஆன் ரெக்கார்டே அவரை அ.தி.மு.க-வை நோக்கி நகர்த்திவிட்டது' எனச் சொல்லிச் சிரிக்கின்றனர் தேனி மாவட்ட அ.ம.மு.க-வினர். 
 

Vikatan