Published:Updated:

`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?

ந.பொன்குமரகுருபரன்

தங்கத் தமிழ்ச்செல்வன் ஆத்திரப்பட்டதன் பின்னணியில் 'மணி'யான அமைச்சரின் தூண்டுதல் இருப்பதாக கூறப்படுகிறது.

`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?
`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனைக் கடுமையாக விமர்சித்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில், ``இந்த மாதிரி ........... அரசியல் செய்யுறத உங்க அண்ணன நிறுத்தச் சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா எல்லாரும் அழிஞ்சுபோய்டுவீங்க!” என தங்க தமிழ்ச்செல்வன் பொங்குகிறார்.

`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?

நீறுபூத்த நெருப்பாக இருவருக்குமிடையே கணன்று வந்த தீப்பொறி, இப்போது பற்றி எரிகிறது. இதன் பின்னணியில், ‘மணி’யான அமைச்சரின் தூபம் இருப்பதாகக் கொதிக்கிறது அ.ம.மு.க வட்டாரம். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க இரண்டாம்கட்டத் தலைவர் ஒருவர், ``கடந்த வாரம் `மணி’யான அமைச்சர் ஒருவரை, தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை எழும்பூரிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அ.தி.மு.க-வில் தங்கத்தை இணைத்துக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

`உங்களைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக்க முடிவு செய்திருந்தோம். லிஸ்ட்லகூட உங்க பெயர் இருந்தது. ஆனா, டி.டி.வி.தான் வேண்டாம் என்று சொல்லிட்டார்'.

தேனி மாவட்டச் செயலாளர் பொறுப்போடு, மாநிலங்களவை எம்.பி. பதவியும் வேண்டுமென்று தங்கம் ‘டிமாண்ட்’ செய்துள்ளார். தன் சொந்த மாவட்டத்தை ஓ.பி.எஸ். விட்டுத் தரமாட்டார் என்பதால், மாநிலங்களவை வேண்டுமானால் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆகியோரிடம் பேசிப் பார்க்கிறேன் என அந்த `மணி’ அமைச்சர் கூறியுள்ளார். பேச்சின் இடையே, `ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோதே, உங்களைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக்க முடிவு செய்திருந்தோம். லிஸ்ட்லகூட உங்க பெயர் இருந்தது. ஆனா, டி.டி.வி.தான் வேண்டாம் என்று சொல்லிட்டார். அவர் மட்டும் ஒப்புக்கொண்டிருந்தால் இன்றைக்கு நீங்கள்தான் அமைச்சர்'' என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இதைக் கேட்டதும் தங்கத்தின் முகம் இருண்டுவிட்டது.

`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?

ஏற்கெனவே, அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததில், தங்கத்துக்கு உடன்பாடு இல்லை. தகுதிநீ்க்க வழக்கில் உச்ச நீதிமன்றம் செல்லலாம் எனத் தங்கம் வழங்கிய ஆலோசனையை டி.டி.வி. ஏற்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தலைமையை விமர்சித்து தொலைக்காட்சிகளில் தங்கம் பேட்டிகொடுத்ததை, டி.டி.வி. ரசிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான், தேனியில் டேவிட் அண்ணாதுரை தலைமையில் கூட்டம் போடப்பட்டது. தனக்கெதிராகக் கட்சி திரும்பியதையடுத்து, தங்கம் வெடித்துத் தீர்த்துவிட்டார்” என்றனர்.

`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?

தங்க தமிழ்ச்செல்வன் மீது கட்சிரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு, தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் தனது அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,`அவர் என்னிடம் நேராக எதையும் பேசமாட்டார். ஆனால் தொலைக்காட்சி, கட்சி நிர்வாகிகள் என அனைவரிடமும் ஆவேசமாகப் பேசுவார். அவர் சுபாவமே அதுதான். தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார். இனிமேல் தங்க தமிழ்ச்செல்வனிடம் விளக்கம் கேட்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

`கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன்!' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்?

அவர் மனதில் எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறார் என அனைவருக்கும் தெரியும். அவர் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். அது யார் என விரைவில் நீங்கள் அனைவரும் பார்க்கப் போகிறீர்கள். விரைவில் அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார்” எனப் பேசினார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய, தங்க தமிழ்ச்செல்வன், ``நான் தவறு செய்திருந்தேன் என்றால், கட்சி என்னை நீக்கட்டும். எதையும் சந்திக்க நான் தயார்” எனக் கொதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vikatan