Published:Updated:

`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி

ஆ.விஜயானந்த்

கடந்த சில நாள்களாக தினகரனை பலவீனப்படுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த ஆயுதங்கள் பலன் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கான பொறுப்பை டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி
`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி

தினகரனுக்கும் தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் நடந்து வரும் மோதலை ரசித்துக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை. ``அரசியல் ரீதியாக தினகரனை வீழ்த்துவதற்கான வேலைகளைச் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 10 நாள்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பட்டியல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் சசிகலாவுக்கு நெருக்கமான தோழி ஒருவர்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

போயஸ் கார்டனில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் கோலோச்சுவது வழக்கம். அந்த வகையில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். பையனூர் பங்களா நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். தற்போது சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசியல் ரீதியாக இந்தப் பெண்மணியிடம் சசிகலா மனம் திறந்து பேசியதாகவும் தகவல் வலம் வந்தது. இவர் தினகரனின் மனைவி அனுராதாவுக்கும் நெருக்கமானவர். அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்தப் பெண்மணி சந்தித்துப் பேசியதையும் தங்க.தமிழ்ச்செல்வன் ஆடியோவையும் முடிச்சுப் போட்டுப் பேசுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி

``தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் இடையிலான மோதல் என்பது நேற்று தொடங்கியதல்ல. இதன் பின்னணியில் பத்தாண்டுக் கால பகைமை இருக்கிறது. அ.தி.மு.க-வில் தினகரன் கோலோச்சிய காலத்தில் அவரது பயண நிகழ்வுகளில் நடக்கும் சில விஷயங்களை ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு சென்றார் தங்க.தமிழ்ச்செல்வன். இதையடுத்து, தினகரனை நேரடியாக எச்சரித்து அனுப்பினார் ஜெயலலிதா. இதுதான் தினகரனுக்கு நேர்ந்த முதல் எச்சரிக்கை. இதன்பிறகு ஜெயலலிதா வழக்குகளைக் கவனித்து வந்த மூத்த வழக்கறிஞர் ஜோதியோடு முரண்பட்டார் தினகரன். அவரைக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்ததை ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதன்பிறகு அ.தி.மு.க-வில் இருந்து தினகரனைக் கட்டம் கட்டும் வேலைகள் நடந்தன. தினகரனைப் பகைத்துக் கொண்டாலும் சசிகலாவோடு பகைமையைத் தொடர தங்க.தமிழ்ச்செல்வன் விரும்பியதில்லை. `சமூகரீதியாக சின்னம்மாவின் தயவு தேவை' என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தார். இந்தக் காலகட்டங்களில் தினகரனோடு அதீத நெருக்கத்தில் இருந்தார் பன்னீர்செல்வம்" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், 

`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி

``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு தினகரன் வளர்வதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. அ.தி.மு.க-வின் அடிப்படை வாக்குகளை அவர் கவர்ந்து செல்வதால், அரசியல்ரீதியாக அவரை ஒடுக்கும் வேலைகளைத் தொடர்ந்தார். அதேநேரம், சசிகலாவோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணத்திலும் அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் இல்லை. `தினகரனை மட்டும் ஓரம்கட்டிவிட்டால் போதும்' என்ற மனநிலையில்தான் பலரும் உள்ளனர். கடந்த சில நாள்களாக தினகரனை பலவீனப்படுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த ஆயுதங்கள் பலன் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கான பொறுப்பை டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் ஒப்படைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்திலிருந்து இன்பத்தமிழன் வந்தது, தங்க.தமிழ்ச்செல்வன் மோதல், நெல்லை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் வருகை போன்றவை தளவாயின் கைங்கரியம்தான். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது சசிகலாவின் நெருங்கிய தோழியான அந்தப் பெண்மணிதான்!" என ஆச்சர்யத்தோடு விவரித்தவர்கள், 

`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி

``கடந்த 10 நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அந்தப் பெண்மணி. திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காகத்தான் வந்தார் எனக் கூறினாலும், இந்தச் சந்திப்பில் எடப்பாடியிடம் நீண்ட பட்டியல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் அவர். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர், கட்சி நிர்வாகிகளின் மனவருத்தம், தேர்தல் செலவுக்காகப் பணம் வந்த வழி எனப் பல தகவல்களை விவரித்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது தளவாய் சுந்தரம். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் காய்களை நகர்த்தத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. இதன் தொடர்ச்சியாகத் தினகரன் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அ.தி.மு.க பக்கம் கொண்டு வரும் வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கின. 

`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை?!' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி

தினகரனைத் தவிர, அ.ம.மு.க-வில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் அ.தி.மு.க பக்கம் வரவைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி எப்படிப்பட்டவர் என்பதை இனிமேல்தான் தினகரன் அறிந்து கொள்ளப் போகிறார். முதல்வர் கொடுத்த அசைன்மென்டுகளை முடித்துக் கொடுப்பதால், அவரிடம் ராஜ்ய சபா எம்.பி சீட்டுக்காகத் துண்டைப் போட்டிருக்கிறார் தளவாய் சுந்தரம். இதற்குப் பதில் கொடுத்த முதல்வர், `எல்லாவற்றையும் முடித்துக் கொடு. பார்த்துக் கொள்ளலாம்' என உறுதி கொடுத்திருக்கிறார். அடுத்து வரும் நாள்களில் அ.ம.மு.க-வில் இருந்து எதிர்பாராத நபர்கள் எல்லாம் அ.தி.மு.க-வில் இணைவார்கள்!" என நம்பிக்கையோடு விவரித்தனர். 

Vikatan