Published:Updated:

`ஸ்ரீநகருக்குள் நுழைய அனுமதியில்லை!'- ஏர்போர்ட்டில் தடுக்கப்பட்ட யெச்சூரி, டி.ராஜா

ஆ.பழனியப்பன்

ஜம்மு - காஷ்மீரில் தங்கள் கட்சியினரை சந்திப்பதற்காகச் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

யெச்சூரி
யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்குக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு வலுவான இயக்கம். கலைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினரான முகமது யூசுப் தாரிகாமி எங்கள் கட்சியைச் சேர்ந்தவர். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமியையும், கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் சந்திக்க விரும்புகிறேன். ஸ்ரீநகருக்கு 9-ம் தேதி காலை 9 மணியளவில் சென்றடையத் திட்டமிட்டுள்ளேன். கட்சித் தலைவர் என்ற முறையில் என் பொறுப்புகளை ஆற்ற எவ்விதத் தடையையும் உங்கள் நிர்வாகம் உருவாக்காது என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவும், ஜம்மு - காஷ்மீர் ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், “கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற முறையில், என் கட்சியினரை சந்திப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பட்டிருந்தார்.

டி.ராஜா
டி.ராஜா

திட்டமிட்டபடி, இன்று காலை சீதாராம் யெச்சூரியும் டி.ராஜாவும் ஸ்ரீநகருக்குச் சென்றுளனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய யெச்சூரி, “ஸ்ரீநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்கிற உத்தரவை என்னிடம் அதிகாரிகள் காண்பித்தனர். அவர்களுடன் பேசுவதற்கு முயற்சி செய்துவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.