Published:Updated:

உதயநிதி கோரிக்கை... துரைமுருகன் அக்கறை... ஸ்டாலின் சூளுரை... திருச்சி மாநாட்டுத் துளிகள்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் 23 நாள்களே உள்ளன. உங்கள் உழைப்புதான் என்னை முதல்வராக்கும். அதற்காக உழையுங்கள் என்றார் மு.க ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க பிரதிநிதிகள் மாநாடு திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரான கே.என்.நேரு, அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது மேற்பார்வையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் ஆரம்பம் முதலே ஏக எதிர்பார்ப்பு நிலவியது. அதற்குக் குறையில்லாமல், மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் விருந்து உபசரிப்பில் கே.என்.நேரு பிரமாண்டப்படுத்தியிருந்தார்.

திருச்சி பிராட்டியூரிலிருந்து, மாநாடு நடந்த கேர் பொறியியல் கல்லூரி வரை, திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு பக்கமும் தி.மு.க கொடிகள் நடப்பட்டிருந்தன.

மாநாட்டில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட சேர்மன்கள், ஒன்றிய சேர்மன்கள் மற்றும் மாவட்ட- ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் என சுமார் 6,000-த்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் குவிந்ததால், காலையிலிருந்தே மாநாட்டுப் பந்தல் நிரம்பிருந்தது.

`இனி கிராமசபையில் கேள்வி கேட்பாயா?' -திருச்சி நாம் தமிழர் நிர்வாகியைப் பதறவைத்த மர்ம நபர்கள்

சரியாக 10 மணி அளவில், டி.கே.எஸ். இளங்கோவன், துரைமுருகன், எ.வ.வேலு,கே.என்.நேரு சகிதமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மேடையேறினார். குத்துவிளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கிவைத்தவர், அறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதால், தி.மு.க எம்.பி-க்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட யாரும் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

மாநாடு
மாநாடு

முதலில் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் கே. என். நேரு,

``தி.மு.க தேர்தலைப் பார்த்து பயப்படுகிறது என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்றுதான் தி.மு.க நீதிமன்றப்படிகளில் ஏறியதே தவிர, தேர்தலுக்குப் பயந்து அல்ல. தி.மு.க தலைவர் ஸ்டாலினால் மட்டுமே இத்தனை இடங்களில் தி.மு.க வெற்றிபெற முடிந்தது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளே, நீங்கள் நேர்மையாகப் பணியாற்றி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கிளைச் செயலாளராகத் தொடங்கிய எனது அரசியல் பயணத்தைத் தற்போது முதன்மைச் செயலாளராகப் பணியாற்ற வாய்ப்பு தந்திருக்கிறீர்கள்.

தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருப்பேன் என்பதோடு, உங்களை நாங்கள் முதல்வராக்கியே தீருவோம்.

திருச்சி என்றாலே தி.மு.க-விற்கு திருப்புமுனைதான். திருச்சியில் தி.மு.க மாநாடு நடத்திய போதெல்லாம் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இப்போது, தலைவர் திருச்சியில் உள்ளாட்சி மாநாடு நடத்த உத்தரவிட்டார். அதற்காக, திருச்சி தி.மு.க சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து, முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் வெற்றி மாநாடு திருச்சியில் நிச்சயம் நடக்கும்" என்று கூறி கைதட்டல் வாங்கினார்.

அடுத்து பேசிய தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ``நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், எங்களது இளைஞர் அணிக்கு குறைவான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் நிறைவாக வெற்றிபெற்றுள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் அணியினருக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்து முடித்தார்.

மாநாட்டில் ஸ்டாலின்
மாநாட்டில் ஸ்டாலின்

அடுத்து பேசிய துரைமுருகன், ``பணபலம், அரசியல் பலம் என ஆளுங்கட்சியின் அராஜகத்தைக் கடந்து பெறப்பட்ட வெற்றி இது. அதி.மு.க அமைச்சர் ஒருவர், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற இடங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம் என வெளிப்படையாகக் கூறுகிறார். இது உங்க அப்பன் வீட்டுப் பணமல்ல. மக்கள் பணம்.

இப்படி ஒரு அமைச்சரை நான் கேள்விப்பட்டது இல்லை. ஒரு வருடம் அமைதியாகக் காத்திருங்கள், அடுத்து தி.மு.க ஆட்சிதான். அதுவரை உள்ளாட்சிக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு வழங்கவில்லை என்றால், நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டங்களில் கேள்வி எழுப்பி ஒரு வழி செய்வோம்.

மாநாட்டில் துரைமுருகன்
மாநாட்டில் துரைமுருகன்

தலைவர் கலைஞர், ராஜதந்திரம் மிக்க மகனை நமக்கு வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார். அவர், இரவு பகல் பாராமல் கண்விழித்ததால்தான் உங்கள் வெற்றி சாத்தியமானது. அவரைப்போல் இந்திய அரசியலில் ஒருவருமில்லை. இந்தியாவில் யார் பதவி ஏற்றாலும் அந்த விழாவில் தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அந்த அளவிற்கு அகில இந்திய அளவில் எழுச்சி பெற்றிருக்கிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தல் வரை நீங்கள் ஜாக்கிரதையாகப் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு உண்மையாகப் பணியாற்ற வேண்டும்” என்று கோபாவேசத்தோடும் அக்கறையோடும் பேசினார் துரைமுருகன்.

`ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட்ட யாகம்!'- கும்பகோணத்தில் தி.மு.க, அ.தி.முக இடையே கடும் மோதல்

கடைசியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``12 மாவட்ட சேர்மன்கள், 243 மாவட்ட கவுன்சிலர்கள், 122 ஒன்றிய சேர்மன்கள், 2113 ஒன்றிய கவுன்சிலர்கள் 4032 பஞ்சாயத்துத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் உள்ளனர். மேலும், சுயேச்சையாகப் போட்டியிட்டாலும் நாங்களும் தி.மு.க காரர்கள்தான் எனச் சுமார் 6670 உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக ஆளுங்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று முதல் முறையாக சாதனை படைத்துள்ளது.

நீங்கள், உங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தவர்களைவிட, உங்களுக்கு வாக்களிக்காமல் போனவர்களும் வாழ்த்தும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. இந்த வெற்றியானது, வாக்களித்த மக்கள் நம் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. அந்த நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும்.

உங்கள் பகுதி மக்களுக்குத் தொடர்ந்து பணிகளைச் செய்து, அந்தந்தப் பகுதிகளை தி.மு.க-வின் கோட்டையாக மாற்ற வேண்டும். கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும். தி.மு.க வெற்றிபெற்ற பகுதிகளுக்கு நிதி வழங்க மாட்டோம் என அதி.மு.க. அமைச்சர் கூறியுள்ளார். அப்படிச் செயல்பட்டால் நீதிமன்றத்துக்கும் மக்கள் மன்றத்துக்கும் கொண்டு செல்வோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகள், பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், ஆறு, கண்மாய், நீர்நிலைகள் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்கு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தெருவிளக்கு, கழிவறை, கண்காணிப்பு உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பெரும்பாலும் டெண்டர் விடுவதில்தான் பிரச்னை ஏற்படும். அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சட்டவிரோத செயல் மற்றும் ஊழல்களுக்குத் துளியும் இடம் கொடுக்காமல், நாம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் முதல்வராக முடியும். அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் 23 நாள்களே உள்ளன. களப்பணியாற்றத் தயாராக இருங்கள். உங்கள் களப்பணி பலமாக இருக்கும் பட்சத்தில், அடுத்த ஆட்சி நமதுதான்” என்று சூளுரைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு