Published:Updated:

ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 41 பேருக்கும் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு - அணி மாறுவதைத் தடுக்கும் யுக்தியா?!

மனைவியுடன் ஷிண்டேவைச் சந்தித்த பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 41 பேருக்கும் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு - அணி மாறுவதைத் தடுக்கும் யுக்தியா?!

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மனைவியுடன் ஷிண்டேவைச் சந்தித்த பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துவருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பாதுகாப்பை அரசு முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. ஒருசில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டுவருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் தோரட், ``அரசு இப்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குத்தான் முழுப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த அடுத்த நாளே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இருக்கும் 41 எம்.எல்.ஏ-க்கள், 10 மக்களவை எம்.பி-க்களுக்கு ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ், கவர்னர் கொஷாரியாவுக்கு வழங்கப்படும் இஸட் ப்ளஸ் பிரிவு தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. உத்தவ் தாக்கரே, சரத் பவார், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுவருகிறது.

ஷிண்டே
ஷிண்டே

இது தவிர உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி தாக்கரே, தாக்கரேயின் மகன் தேஜஸ் ஆகியோருக்கும் இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதாவின் பாதுகாப்பு ஒய்-ப்ளஸ்ஸிலிருந்து எக்ஸுக்குத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பவராகக் கூறிக்கொள்ளும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்குத் தொடர்ந்து எக்ஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, நடிகர் சல்மான் கான், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சமீபகாலமாக உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங்களைச் செய்துவருகின்றனர். இதனால் அவர்கள் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களால் தாக்கப்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் கூறப்படுகிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பாதுகாப்பைக் குறைப்பதும், கூட்டுவதுமாக இருக்கும் மாநில அரசு மேலும் ஒரு தொழில் முதலீட்டை இழந்திருக்கிறது. பிரான்ஸின் விமானம் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனத்தை மகாராஷ்டிராவின் நாக்பூரில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சரியான நிலத்தைத் தேர்வுசெய்ய முடியாததால் அந்தத் திட்டம் தெலங்கானாவுக்குச் சென்றுவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.