Published:Updated:

`மும்பை டு ஆந்திரா; ராஜ்யசபா எம்.பி சீட்?' - ஜெகன்மோகன் ரெட்டி - அம்பானி சந்திப்பின் பின்னணி

முகேஷ் அம்பானி - ஜெகன்
முகேஷ் அம்பானி - ஜெகன்

முகேஷ் அம்பானி எதாவது ஒரு மாநிலத்துக்குச் செல்லும்போது அந்த மாநிலத்தின் முதல்வர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்று. அப்படியிருக்கையில் முகேஷ் - ஜெகன் சந்திப்பு மட்டும் விவாதமாக மாறியுள்ளது.

ரிலையன்ஸ் குரூப்பின் சேர்மன் முகேஷ் அம்பானி சில தினங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைத் திடீரெனச் சந்தித்தார். பூட்டப்பட்ட அறையில் சில மணிநேரங்கள் நடந்த இந்தச் சந்திப்பு குறித்து தற்போது பல்வேறு விவாதங்கள் நடந்துவருகின்றன.

முகேஷ் அம்பானி எதாவது ஒரு மாநிலத்துக்குச் செல்லும்போது அந்த மாநிலத்தின் முதல்வர், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களைச் சந்திப்பது வழக்கமான ஒன்று. அப்படியிருக்கையில் முகேஷ் - ஜெகன் சந்திப்பு மட்டும் விவாதமாக மாறியுள்ளது. அதற்குக் காரணங்களும் இருக்கின்றன. அன்றைய தினத்தின் ஜெகனைச் சந்திப்பதற்காகவே மும்பையிலிருந்து ஆந்திரா வந்தார் முகேஷ்.

முகேஷ் அம்பானி - ஜெகன்
முகேஷ் அம்பானி - ஜெகன்

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திராவில் பிசினெஸ் தொடங்குவதற்கான ஆர்வத்தை 2018ம் ஆண்டே வெளிப்படுத்தியது. அப்போது, திருப்பதியில் 150 ஏக்கர் பரப்பளவில் எலக்ட்ரானிக்ஸ் பூங்கா தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் முகேஷ் அம்பானி. இந்தப் பூங்கா மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்க இருந்தது.

ஆனால், சந்திரபாபு ஆட்சியில் போடப்பட்ட இந்தத் திட்டத்தை ஜெகன் ஆட்சிக்கு வந்தபிறகு அதை ரிலையன்ஸ் நிறுவனமே கைவிட்டது. இதனால், இந்த எலக்ட்ரானிக்ஸ் பூங்கா திட்டத்தை மீண்டும் தொடங்கும் விதமாகவும் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் எதிர்கால முதலீடுகள் குறித்து விவாதிக்கவுமே அம்பானி ஆந்திரா வந்தார் என்கிறது ஒருதரப்பு.

`என் உறவினர்கள் மீதே சந்தேகமாக உள்ளது!’ - ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தைச் சுற்றும் கொலை வழக்கு

இன்னொரு தரப்போ மற்றொரு காரணத்தைச் சொல்கிறது. 29ம் தேதி நடந்த சந்திப்பில் அம்பானியுடன் இருந்தவர்கள் அவருடைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ஜார்கண்டிலிருந்து இரண்டு முறை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிமல் நாத்வானி ஆகியோர்தான். இந்தப் பரிமல் நாத்வானி ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல; ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கியக் கூட்டாளியாகவும், முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படுகிறார். மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கார்ப்பரேட் விவகார குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

முகேஷ் அம்பானி - ஜெகன்
முகேஷ் அம்பானி - ஜெகன்

இவருடைய எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக ஷிபு சோரன் ஆட்சிக்கு வந்துள்ளதால், நாத்வானி ஜார்க்கண்டிலிருந்து மீண்டும் எம்.பியாவது கடினம். அதனால், அவரை இந்த முறை ஆந்திராவிலிருந்து எம்.பியாகத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தும் விதமாகவே நாத்வானி தரப்பில் அவருடைய நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானி நேரில் வந்து கோரிக்கை விடுத்துள்ளார் எனக் கூறப்பட்டது. சனிக்கிழமை மீட்டிங்கில் அம்பானியே நேரடியாக நாத்வானிக்கு எம்.பி சீட் கேட்டதாவும் கூறப்பட்டது.

`ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் ஏன்?!' - 6 மாத கால மௌனத்தைக் கலைத்த ஜெகன்மோகன் ரெட்டி

வெறும் யூகங்களாக விவாதிக்கப்பட்ட இந்த விஷயத்தை நாத்வானி தற்போது உறுதியும்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. `இந்த விஷயத்தில் ஜெகன் உடனடியாக அம்பானிக்கு உறுதியான உத்தரவாதம் அளிக்கவில்லை. முடிவை எடுக்க ஜெகன் மூன்று நாள்கள் அவகாசம் கோரினார். ஆந்திராவிலிருந்து சீட் கிட்டத்தட்ட உறுதி என்றாலும் ஒருவேளை சீட் மறுக்கப்படும்பட்சத்தில் பீகார் மற்றும் ஒடிசாவிலிருந்து முயற்சி செய்வார்' என்று நாத்வானி கூறியதாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானி - நாத்வானி
முகேஷ் அம்பானி - நாத்வானி

இதில், இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. எம்.பியாக நாத்வானியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பா.ஜ.கதான் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியை வற்புறுத்தியது என்றும், அதற்கு ஜெகன் சம்மதித்த பிறகே ஜெகனை அம்பானி சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது. ஆந்திராவிலிருந்து நான்கு ராஜ்ய சபா சீட்டுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒ.ய்.எஸ்.ஆர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இந்த சீட்டுக்காகப் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜெகனின் சகோதரியும் இந்த ரேஸில் இருக்கிறார். இந்நிலையில் நாத்வானிக்கு ஜெகன் சீட் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

`ஜெகன்மோகன் - சந்திரபாபு மோதல்!'- இரண்டே மாதத்தில் தமிழகத்துக்குத் தாவும் கியா நிறுவனம்?
அடுத்த கட்டுரைக்கு