Published:Updated:

"ஸ்டாலினை அச்சுறுத்தவே இசட் பிரிவு பாதுகாப்பு ரத்து!"- கொதிக்கும் கனிமொழி

“கண்துடைப்புக்காகத்தான் துணை முதல்வர் ஓ.பி.எஸுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

தி.மு.க மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக சென்னையிலிருந்து விமானம்மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

கனிமொழி
கனிமொழி

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எந்த அளவுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது எனத் தெரிந்தபிறகும், அ.தி.மு.க அரசு, இம்மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளது. இது, இங்குள்ள சிறுபான்மை மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். மாநிலங்களவையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க வாக்களித்திருந்தால், மத்திய அரசால் இந்த சட்டத் திருத்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றியிருக்க முடியாது.

இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சூழலை உருவாக்கியதற்கு முழுக் காரணமாக அ.தி.மு.க-வினர் இருக்கிறார்கள். சென்னையில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த இசட் பிரிவு பாதுகாப்பு, அவரை அச்சுறுத்துவதற்காகவே ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கனிமொழி
கனிமொழி

இதில், கண்துடைப்புக்காகத்தான் துணை முதல்வர் ஓ.பி.எஸுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள் பாதுகாப்பே அரணாக இருக்கும்போது, மற்ற எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. ஆட்சியில் உள்ளவர்கள், மக்கள் விரோத நடவடிக்கை செய்து வருகின்றனர். எனவே, அவர்களைக் காத்துக்கொள்வதற்குத்தான் பாதுகாப்பு தேவை” என்றார்.