Published:Updated:

”பெண்களின் கர்வமும் திமிரும்தான் அவர்களைப் போராட வைக்கிறது!’’ வளர்மதி

”பெண்களின் கர்வமும் திமிரும்தான் அவர்களைப் போராட வைக்கிறது!’’ வளர்மதி
”பெண்களின் கர்வமும் திமிரும்தான் அவர்களைப் போராட வைக்கிறது!’’ வளர்மதி

”பெண்களின் கர்வமும் திமிரும்தான் அவர்களைப் போராட வைக்கிறது!’’ வளர்மதி

''இந்தச் சமூகம் பொதுவாவே பொண்ணுங்களை அடிமையா வெச்சிருக்கும் ஆணாதிக்க சமூகம்தான். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர்றாங்க; படிக்கிறாங்க; நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்புக்கும் வந்திருக்காங்க. ஜனாதிபதியிலிருந்து, பிரதமர் பதவி வரை பெண்கள் வந்துட்டாங்க என்பதெல்லாம் வெறும் கண்கட்டி வித்தைதான். இப்பவும் பெண்களை அடிமையாகவே வெச்சிருக்காங்க” என்கிறார் வளர்மதி. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, விடுதலையான புரட்சி மாணவி. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற 'பெண் போராளிகள் அறைகூவல்' மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவரிடம் பேசினோம்.

''சமூகத்துக்காகப் போராட விரும்பும் பெண், அந்தச் சமூகத்திலும் வீட்டிலும் சந்திக்கும் பிரச்னைகள் என்னவாக இருக்கின்றன?'' 

''இன்றைக்கும் ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே வருவதற்குச் சுதந்திரம் இல்லை. தன் நண்பர்களிடம் பேசுவதற்கும் சுதந்திரம் இல்லை. 'படிதாண்டா பத்தினி' கதைதான் இப்பவும் கொண்டாடப்படுது. சொந்தமாக செல்போன் வைத்திருந்தாலும் எத்தனை வீடுகளில் பெண்களுக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறார்கள்? அப்படி இருக்கும்போது, ஒரு பெண் சமூக அக்கறையோடு போராட்டக் களங்களுக்கு வருவது சாதாரணமாக நடந்துடுமா? அடக்குமுறையை இரண்டு வழிகளில் செலுத்துகிறது. ஒன்று, வன்முறை. மற்றொன்று, ஒழுக்கம். வன்முறை அரசுமூலமாக வரும். போராட்டக் களங்களுக்கு வருபவர்களுக்கு அடிதடியோ, வழக்குகளோ அரசுமூலமாக வருகிறது. ஆனால், இந்த ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் இந்தச் சமூகம் கொடூரமாகத் தருபவை. ஒரு பெண் போராட்டக் களத்துக்கு வந்து தன்னுடைய உரிமையைப் பேசினால் முதலில் கிடைக்கும் பட்டம், ரவுடி. நான் கல்லூரியில் படிக்கும்போது என் ஆசிரியர்கள் என்னிடம் கேட்டது, ’நீ என்ன பெரிய ரவுடியா?’ என்பதுதான். கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள், சீனியர்கள் மத்தியில் ’அவள் ரவுடி’ என்பதுதான் என் அடையாளமாக இருந்தது. 

ரவுடி, நடத்தை கெட்டவள், அடங்காப்பிடாரி, பஜாரி எனப் பட்டங்களையே சமூகம் நமக்குக் கொடுக்கும். நான் இருப்பது கிராமம் என்பதால், உச்சபட்ச பெண் அடக்குமுறை உண்டு. எங்கள் ஊரில் 19 வயது வரை எதற்குப் பெண்களை வைத்திருக்கிறார்கள் என்றால், 18 வயதுக்குள் திருமணம் செய்துவிட்டால், சட்டத்திடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயம்தான். பெண்ணைப் பெற்றுவிட்டோமா... குறைந்தபட்சம் எழுத்தறிவுக்காவது படிக்கவைப்போம். பிறகு, கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோம் என்றுதான் சமூகம் இருக்கிறது. இன்றைக்கு வெளியே வரும் சில பெண்கள் விதிவிலக்குகளே. மார்க்ஸ் சொல்வதுபோல, விதிவிலக்குகள் எல்லாமே விதிகள் ஆகாது. விதிகளில் பெண்கள் இன்றைக்கும் அடிமையாகவே இருக்கிறார்கள். போராட்டக் களத்துக்குப் பெண் வரும்போது, சேற்றை அல்ல... சாக்கடையை வாரி வீசுகிறார்கள்.. அதையும் தாண்டி அவர்கள் வரும்போதுதான் நிற்க முடிகிறது. இது, ஒரு திமிருதான். ஒரு கர்வம்ன்னு வெச்சுகோங்களேன். இந்தக் கர்வமும் திமிரும் இருந்தால்தான் வெளியே இருக்க முடியும்.'' 

''சமீப வருடங்களில் பெண்களால் முன்னின்று நடத்தப்படும் மாநாடு... எதைக் குறிக்கிறது?'' 

''இப்படிப்பட்ட கேடுகெட்ட சமூகம் எங்களை என்னதான் அடக்குமுறை செய்தாலும், நாங்கள் வெளியே வருவோம். ஒரு பெண், ஓர் ஆணை காதலிக்காவிட்டால், வெட்டிக் கொல்வீர்கள்; காதலித்தாலும் பெற்ற பெண்ணைத் தந்தையே வெட்டிக் கொல்வார். பெற்ற பெண்ணையே பாலியல் வன்புணர்ந்து கொல்வார்கள். இதெல்லாம் அன்றாடம் கடந்துவரும் செய்தியாகிவிட்டது. பிஞ்சு குழந்தையிலிருந்து கல்லூரி மாணவி வரை ஆசிட் ஊற்றப்படும் கதைகளும், வன்புணரப்படும் கதைகளும் இயல்பாகிவிட்டது. அதையும் மீறி ஜல்லிக்கட்டு போன்று வந்தால், ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தினார்கள். ஆண்களை அடித்தார்கள்; பெண்களை ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்தினார்கள். இப்படியெல்லாம் செய்தாலும், கைது செய்து சிறையில் அடித்தாலும், தூக்கிப் போட்டுவிட்டு நாங்கள் நிற்போம். ஆணாதிக்க சமூகத்துக்கு, பயங்கரவாத அரசுக்கு ஒரு பெரிய சவாலாக, கண்கள் உறுத்தும்படி நாங்கள் நிற்போம் என்பதற்கான மாநாடாக இதைப் பார்க்கிறேன்.'' 

''பெண் விடுதலை எதிலிருந்து தொடங்குவதாக நினைக்கிறீர்கள்?''

''எப்போது ஒரு பெண், இது என் வாழ்க்கை என்று யோசிக்கிறாளோ, முடிவெடுக்க வேண்டியது நானே என்கிறாளோ அப்போது

தொடங்குகிறது. பள்ளி நாள்களில், நான் என் நண்பர்களிடம் பேசலாமா, அவர்கள் வீட்டுக்குச் செல்லலாமா, கல்லூரியில் நான் இதைப் படிக்கலாமா என்றெல்லாம் யாரையும் சார்ந்து இல்லாமல், சுயமாக முடிவெடுக்கிறோமோ அங்குதான் பெண் விடுதலை தொடங்குகிறது.'' 

''ஒரு பெண்ணின் விடுதலை, சமூக விடுதலையில் எந்த அளவு அவசியாக நிற்கிறது?''

''பெண் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை இருக்கவே முடியாது. தமிழ்த் தேசியாமானலும் சரி; காஷ்மீரானாலும் சரி, பெண் தன் உரிமையைப் பெற்றவளாக, சுதந்திரம் பெற்றவளாக இல்லை. எதுவுமே சாத்தியப்படாது. சாதி ஒழிப்பும் சாத்தியம் கிடையாது; சமூக விடுதலையும் சாத்தியம் கிடையாது. மாவோ சொல்வார். ‘ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெண்கள் அணிதிரண்டு போராடாமல், விடுதலை சாத்தியமில்லை’. இன்றைக்குத் தலித்துகளுக்குள் ஒரு தலித்தாக பெண்கள் இருக்கிறார்கள். அப்படி ஒடுக்கப்பட்டுள்ள பெண்களின் விடுதலை இல்லாமல், சமூகத்தில் ஒரு துரும்பையும் நகர்த்த முடியாது.'' 

''சாதி ஒழிப்பு பெண் விடுதலையிலிருந்து தொடங்குகிறது என்று சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெண்களிடமும் அதுபோன்ற கருத்துகள் இருக்கிறதே...'' 

''அன்றைக்கும் சரி; இன்றைக்கும் சரி, பெரியார் அளவுக்குப் பெண் விடுதலை குறித்துப் பேசியவர்கள் இல்லை. ஆனால், அன்றைக்கும் பெரியாரைத் திட்டியவர்கள், பெரியாரை மிக அதிகமாக வெறுத்தவர்கள் பெண்கள்தான். இன்றைக்குப் பெரியாரை உணர்ந்த பெண்கள் இருந்தாலும், பெண்களால்தான் பெரியார் அதிகமாக இகழப்படுகிறார். அதற்குக் காரணம் பெண்கள் இல்லை. பெண்களுடைய மனதில் ஊற்றி வளர்க்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனை? மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்போது, 'ஆயிரம் இருந்தாலும் என் மகன் ஆம்பளை' என்கிறார். இது, பெண்களுக்கு எதிரானதுதான். ஓர் ஆணாதிக்கக் கருத்து, ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படுகிறது. அப்படித்தானே இந்தச் சமூகம் எங்களை வளர்த்து வைத்துள்ளது. சர்க்கரை கசக்கிறது என்றால், கசக்கிறது என்றுதான் சொல்வார்கள். அதை மீறி வெளியே வருவதற்குப் பெரியார்போல தலைவர்கள் தேவை.'' 

''பெரியாருக்குப் பிறகு இயக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு தேக்கம் பெற்றுள்ளதா?'' 

''இயக்கமாக இணைந்து போராடுவதைக் காட்டிலும், தனி நபர்களாகப் பெண்ணுரிமைகள் பேசும் பெண்கள் அதிகம். அதற்கே இப்படிப்பட்ட பெண்ணுரிமை கருத்துகள்தான் காரணம். ஆனால், இயக்கமாகப் போராடாமல் விடுதலை சாத்தியமில்லை. உதிரிகளாக இருந்து எதையும் செய்ய முடியாது. இயக்கம் என்கிற ஒரு விஷயத்துக்கு அடிப்படை, தனிநபர் உணர்வுதான். இன்றைக்கு ’எனக்கு முடி வெட்டிக்கணும், பேன்ட் சட்டைப் போட்டுக்கணும். எனக்குப் புடிச்சவனை கல்யாணம் செஞ்சுக்கணும்மெனப் பேசும் பெண்களைப் பார்க்கமுடிகிறது. இதுவே பல்வேறு போராட்டங்களின் விளைவாக வந்தது. எந்த வருடத்தைக் காட்டிலும், இந்த வருடம் பெரியாரின் பிறந்தநாள் வெகுவாகக் கொண்டாடப்பட்டது. பெரியார் என்ற தனிநபரைத் தூக்கிப் பிடிக்கவில்லை. அவர் பேசிய அரசியலையே தூக்கிப் பிடித்தார்கள். அவர் பேசிய உரிமைகளைத் தூக்கிப் பிடித்தார்கள். அதுதான் பாராட்ட வேண்டிய விஷயம். வெறும் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்காமல் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதை ஒரு நல்ல முன்னேற்றமாகவே நான் பார்க்கிறேன். அன்றைக்குவிட இன்றைக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது.'' 

''எங்கிருந்து இந்தத் தைரியத்தை வளர்த்துகொள்கிறீர்கள்? புத்தக வாசிப்பா?'' 

''வாசிப்பு இல்லாமல் யாருமே போராட்டக் களத்தில் நிற்க முடியாது. மார்க்ஸ் சொல்வதுபோல, களப்பணிக்குச் சமமான புத்தக அறிவு இல்லையென்றால், போராட்டக் களங்களில் நிற்க முடியாது. மார்க்ஸியமும் அதுதான். என் பலம் என்று நான் நினைப்பது, நான் ஓர் அமைப்பாக போராட்டத்தில் இருக்கிறேன். நான் ஒரு தனி நபராக இல்லை. அதைத் தாண்டி எங்களிடம் இருக்கும் உறுதி. நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம். சரியான விஷயங்களைச் செய்கிறோம் என்ற உறுதி எங்களிடம் இருக்கிறது. பெண் விடுதலைக்குப் புத்தக வாசிப்பு முக்கியம். பெரியாரைப் பற்றி பேச, 'பெண் ஏன் அடிமையானால்?' புத்தகத்தையாவது வாசித்திருக்க வேண்டும்.'' 

''பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக மட்டும் உழைத்தவர் என்ற தகவல் பரப்பப்படுகிறதே?''

''இப்படிப்பட்ட தவறான கருத்துகளை மக்களிடம் பரப்புவதன் வழியே, பல தலைவர்களின் உண்மையை மறைத்துவைத்துள்ளார்கள். பெரியார் அப்படிப்பட்டவர் கிடையாது. பெரியார் ஒரு பொது மனிதர். ஒரு குழு, பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளராகப் பார்க்கிறது. இன்னொரு குழு, பெரியாரைச் சாதி எதிர்ப்பாளராகப் பார்க்கிறது. இன்னொன்று, பெரியாரைப் பெண் உரிமைகளைப் பேசியவராகவே பார்க்கிறது. ஆனால், பெரியார் மனிதத்தைப் பேசினார். உண்மையாகவே மனித உரிமைகளைப் பேசியவர்தான் பெரியார். அவரை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுருக்க முடியாது. சுருங்கும் அளவுக்கு அவரும் இல்லை. அதையெல்லாம் மீறி அவர் வெளியே வருவார். ரொம்ப அடம்பிடிக்கும் தாத்தா அல்லவா அவர்!'

அடுத்த கட்டுரைக்கு