
கால தாமதமாக வந்த பயணிகள் ரயில்..! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

கால தாமதமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பலருக்கும் இந்த ரயில் மிக முக்கிய போக்குவரத்தாக திகழ்கிறது.
பாலக்காட்டில் இருந்து கிளம்பும் இந்த ரயில், கோவை வழியாக தினமும் காலை 9.15 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். ஆனால் சமீப நாட்களாக இந்த ரயில், தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வருவதால், தொழிலாளர்கள் பலருக்கும் வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பயணிகள் ஒன்றிணைத்து கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இன்றும் வழக்கம்போல காலதாமதமாக திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த பயணியர் ரயில், வஞ்சிபாளையம் என்ற ரயில் நிறுத்தத்தில் சிக்னல் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டதால், ரயிலில் பயணித்த பொதுமக்கள் அனைவரும் கடும் கோபத்தில் ஆழ்ந்தனர். மிகவும் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள், ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட துவங்கினர். இதைப் பார்த்த வஞ்சிபாளையம் ரயில் நிலைய ஊழியர்கள், முன்னெச்சரிக்கையாக சிகப்பு சிக்னலை எறியவிட்டனர். அதன்காரணமாக அவ்வழியே செல்லவிருந்த 3 - க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், "இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல், உரிய நேரத்தில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்" என்று உறுதியளிக்கப்பட்டதால், பயணிகளின் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மறியல் போராட்டத்தில், கோவை - திருப்பூர் ரயில் தடத்தில் இன்று பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.