Published:Updated:

`போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!’ - ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை முயற்சி

தினேஷ் ராமையா
`போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!’ - ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை முயற்சி
`போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!’ - ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை முயற்சி

சிரியாவில் நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததால், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Photo Credit: FB/Shahidsamroz


சிரியாவில், அப்பாவிப் பொதுமக்கள்மீது அந்நாட்டு அரசே தாக்குதல் நடத்திவருகிறது. கிழக்கு கௌட்டா நகரில் மட்டும் குழந்தைகள், பொதுமக்கள் என இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் செயல்பாடுகளுக்கு, உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. 

இந்த நிலையில், சிரியாவில் நடத்தப்படும்  தாக்குதலைக் கண்டித்து, போராட்டம் மற்றும் பேரணி நடத்த தெலங்கானாவின் வாராங்கல் நகர போலீஸாரிடம், 'முஸ்லிம் ஹக்குல போராட்ட சமிதி' என்ற அமைப்பு சார்பில் அனுமதி கோரப்பட்டது. அந்த அமைப்பின் கோரிக்கையை போலீஸார் நிராகரித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்த அமைப்பின் வாராங்கல் மாவட்டத் தலைவர் முகமது நயீம் ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுதொடர்பாக, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய நயீம், `சிரியாவில் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அமைதிப் பேரணி நடத்த முதலில் அனுமதி அளித்த போலீஸார், பின்னர் அந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்’ என்று பேசினார். அதைத் தொடர்ந்து, பாட்டில் ஒன்றில் இருந்த விஷத்தை அருந்தி, அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவரது உடல்நிலை தேறிவருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.