Published:Updated:

"ரத யாத்திரை... தமிழக அரசின் ஜனநாயகப் படுகொலை!" கொதிக்கும் அரசியல் களம்

"ரத யாத்திரை... தமிழக அரசின்  ஜனநாயகப் படுகொலை!" கொதிக்கும் அரசியல் களம்
"ரத யாத்திரை... தமிழக அரசின் ஜனநாயகப் படுகொலை!" கொதிக்கும் அரசியல் களம்

இந்துத்துவா கொள்கையைப் பிரசாரம் செய்யும் வி.எச்.பி அமைப்பின் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நெல்லை மாவட்ட ஆட்சியர் விதித்த 144 தடை உத்தரவை மீறி, செங்கோட்டையில் போராட்டம் நடத்திய சீமான் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். 

பாபர் மசூதி இடிப்பு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலையைக் கொய்வேன் என மிரட்டல் விடுத்தது, சூலத்தின் மூன்று கூர்முனைகள் பகுத்தறிவாளர்களைக் கொல்வதற்குத்தான் எனப் பேசியது போன்றவற்றால் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் மீண்டும் இப்போது ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் கடந்த 13-ம் தேதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த யாத்திரை, நேற்று கேரளத்திலிருந்து தமிழகத்துக்குப் புறப்பட்டது. இன்று காலை தமிழகத்தின் செங்கோட்டைக்குள் ரதம் நுழைவது என அறிவிக்கப்பட்டநிலையில், தமிழகத்துக்குள் இந்த ரத யாத்திரையால் சமய நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று முக்கியக் கட்சிகள் அடங்கிய 'காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு' என்ற கூட்டியக்கம் எதிர்ப் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நேற்று காலை 8 மணிக்கு செங்கோட்டையில் வைகோ, திருமாவளவன், சீமான், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதே சமயம், போராட்டம் நடத்தவிருந்த அமைப்புகளின் தலைவர்களுடன் போலீஸ் துறையின் சார்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. 

நெல்லையில் போராட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரிகள் கூற, போராட்டக் கூட்டமைப்பினர் அதை ஏற்கவில்லை. செங்கோட்டை அருகிலுள்ள புளியரையில் போராட்டம் நடத்தியே தீருவோம் எனப் போராட்டக்குழுவினர் உறுதிபடக் கூறிவிட்டனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்து, 23-ம் தேதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

செங்கோட்டைக்குச் செல்வதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்பட பல மாவட்டங்களிலிருந்து பேருந்துகளிலும் தனிப்பட்ட வாகனங்களிலும் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் முதல்நாள் மாலையிலிருந்தே போகத் தொடங்கினர். மதுரை ஆரப்பாளையத்திலிருந்து தனி வாகனத்தில் புறப்பட்ட தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஆரப்பாளையம் மதி திரையரங்கம் அருகில் போலீஸார் கைது செய்தனர்.  நாகை திருவள்ளுவன் தலைமையிலான தமிழ்ப் புலிகள் அமைப்பினரும் இன்னொரு பிரிவாகக் கைது செய்யப்பட்டனர். ஆதித்தமிழர் பேரவையின் செல்வம், ஜானகி, சாதி ஒழிப்பு முன்னணியின் தெய்வம்மாள், பிரகாசம் உட்பட மேலும் ஒரு குழுவினரும் கைது செய்யப்பட்டனர். 

வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரை, திருவில்லிபுத்தூரிலிருந்தே போலீஸார் தீவிர வாகன சோதனை செய்தும் ஏராளமான வாகனங்களைத் திருப்பியனுப்பியபடியும் இருந்தனர். இதனால் தனி வாகனங்களில் சென்றவர்கள், அங்கிருந்து இறங்கி பேருந்துகளில் செங்கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால், தென்காசியிலேயே ஆங்காங்கே போலீஸார் ஏறி குழுவாகச் செல்பவர்களை இறக்கிவிட்டு தடுப்புக்காவலில் எடுத்தனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால், ரத யாத்திரைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகத் தனித்தனி வாகனங்களில் சென்றவர்களும் தடுக்கப்பட்டதால் பேருந்துகளில் சென்றனர். அவர்களையும்  போலீஸார் இறக்கிவிட்டனர். ரத யாத்திரைக்கு ஆதரவானவர்கள் என்பதை உறுதிசெய்த பின்னர், அவர்களைப் பிடிக்காமல் விட்டுவிட்டனர். 

தென்காசியில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்குக் கைது செய்யப்பட்டவர்கள், மாலை 5 மணி வரையில் ரயிலடிக்கு அருகிலுள்ள ஜெகநாதன் அரங்கத்தில் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர். 

நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை ஆணை இருந்தபோதும், தடையை மீறி குற்றாலம் வழியாக செங்கோட்டைக்குச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகில் பேரணியாகச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.  அதற்கு முன்னர், அங்கு திரண்டிருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர், த.மு.மு.க., எஸ்டிபிஐ கட்சி உட்பட பல அமைப்பினரும் தடையை மீறி மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். 

முன்னதாக, மதுரையிலிருந்து காலையில் போராட்டத்துக்குப் புறப்பட்ட வி.சி.க. தலைவர் திருமாவளவனை விருதுநகர் மாவட்ட எல்லையில் போலீஸார் கைது செய்தனர். அவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை, வாடிப்பட்டியில் திருமண அரங்கு ஒன்றில் வைத்தனர். 

நேற்று இரவு சென்னையிலிருந்து தொடர்வண்டியில் கிளம்ப முயன்ற வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேசு ஆகியோர் உட்பட ஒரு குழுவினரை போலீஸார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தனர். 

தென்காசியில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச்செயலர் கு.இராமகிருஷ்ணன் ஆகியோரையும் மற்ற நான்கு பேரையும் நேற்று இரவு நெல்லை போலீஸார் தடுப்புக்காவலில் வைத்தனர். 

கைது செய்யப்பட்ட போராட்ட இயக்கத்தினரை விடுதலை செய்யக் கோரி, மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் செய்தனர்.  இவ்வளவு எதிர்ப்புக்கிடையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரை வாகனம் மிக வேகமாக ஓட்டிச்செல்லப்பட்டது.