Published:Updated:

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

உயர்த்தப்பட்ட கூலி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி  வட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

உயர்த்தப்பட்ட கூலி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கத்தினர், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தார், விளாத்திகுளம், எட்டயபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், குருவிகுளம், திருவேங்கடம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டித் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இத்தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவற்றில் 90% தொழிலாளர்கள் பெண்கள்தான். பெரும்பாலும் இத்தொழில் இயந்திரமயமாகிவிட்ட நிலையில், தீக்குச்சிகளைப் பெட்டிகளில் அடைக்கும் வேலை மட்டுமே கையால் செய்து வருகின்றனர்.

தீக்குச்சிகளைத் தீப்பெட்டிகளில் அடைக்க, 160 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு வில்லைக்குக் கூலியாக ரூ.5 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இவர்களுக்குக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை என தீப்பெட்டித் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி, கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பகுதியில் இயங்கி வரும்  தீப்பெட்டி தொழிலாளர்கள், குறைந்த பட்ச கூலி உயர்வு கேட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 20 சதவிகிதம் கூலியை உயர்த்தி, அதாவது ஏற்கெனவே வாங்கி வந்தக் கூலியில் இருந்து, 1 ரூபாய் அதிகமாக வழங்கிட, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தைக் கைவிட்டு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். உயர்த்தப்பட்ட கூலி, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சில தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், இன்னும்  பழைய கூலித் தொகையையே வழங்கி வருவதாகவும், உயர்த்தப்பட்ட கூலி வழங்கிட வலியுறுத்தி தீப்பெட்டித் தொழிலாளர்கள் அவ்வப்போது, போராட்டமும் அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.

இந்நிலையில், கோவில்பட்டி  அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள், உயர்த்தப்பட்ட கூலியை வழங்க வேண்டும், பி.எப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சட்ட உரிமைகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில், தீப்பெட்டித் தொழிலாளர்களுடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அவர்களிடம் வட்டாட்சியர் பரமசிவம் பேச்சுவார்த்தை நடத்தி, உயர்த்தப்பட்ட கூலி வழங்கிட உற்பத்தியாளர்களிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து தீப்பெட்டித் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.