Published:Updated:

ஸ்டெர்லைட் போராட்டங்களுக்குத் தடை - சென்னை போலீஸ் சொன்ன காரணங்கள் தெரியுமா?

ஸ்டெர்லைட் போராட்டங்களுக்குத் தடை - சென்னை போலீஸ் சொன்ன காரணங்கள் தெரியுமா?
ஸ்டெர்லைட் போராட்டங்களுக்குத் தடை - சென்னை போலீஸ் சொன்ன காரணங்கள் தெரியுமா?

போலீஸாரின் மனிதவுரிமைமீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து திருச்சி, விருத்தாசலம், கடலூர் உட்பட பல ஊர்களில் போராட்டம் நடந்துவருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைகளைக் கண்டித்தும் விமர்சித்தும் பொதுநல அமைப்புகள் சார்பில் நெடுமாறன், தொல்.திருமாவளவன் ஆகிய தலைவர்கள் பங்கேற்கவிருந்த போராட்டங்களுக்கு சென்னை மாநகர போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மாசுபாட்டால் பாதிப்பையடுத்து அந்த ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த மாதம் 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் கண்டனப் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் பங்கேற்ற மக்கள் மீது போலீஸ்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேரும், தாக்குதலில் படுகாயமடைந்து 2 பேரும் கொல்லப்பட்டனர். ஒரே நாள் சம்பவத்தில் 230-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவுசெய்த காவல்துறை, ஸ்டெர்லைட் பாதிப்பால் பாதிக்கப்பட்டு போராடிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்ட நேரங்களில் தேடுதலில் ஈடுபட்டுவருகிறது. அப்போதும் மற்ற சமயங்களிலும் தேசிய மனித உரிமை ஆணையம் வகுத்துள்ள அடிப்படை மனிதவுரிமைகளுக்கு எதிராக போலீஸார் நடந்துகொள்கின்றனர் என்பது பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் அமைப்புகளின் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. 

போலீஸாரின் மனிதவுரிமைமீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து திருச்சி, விருத்தாசலம், கடலூர் உட்பட பல ஊர்களில் போராட்டம் நடந்துவருகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டநடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமையைக் கண்டித்து, சென்னையில் ஜூன் 28-ம் தேதி வியாழனன்று வள்ளுவர் கோட்டம் அருகில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன், திக தலைவர் கலி.பூங்குன்றன், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கோவை இராமகிருஷ்ணன், எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், தியாகு உட்பட பலர் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் நடக்கவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர போலீஸ் ஆணையரிடம் கடந்த 19-ம் தேதியன்று அனுமதி கேட்கப்பட்டது. மாநகர போலீஸ் தரப்பில், 21-ம் தேதியன்று மாலையில், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் கனல் என்பவரிடம், காரணம் கேட்கும் குறிப்பாணை தரப்பட்டது.

அதில், “மனுதாரரின் கோரிக்கையான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்தப்பட்டுவரும்நிலையில், மனுதாரர் அனுமதிகோருவது உகந்ததாக இல்லை. பொதுமக்களின் நலனிலும் சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் அனுமதிமறுக்கக்கூடாது?”என்று கேட்டு, மறுநாள் காலையில் விளக்கமளிக்குமாறும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாணைக்கு பதிலளிக்கும்வகையில், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில், “அரசின் எந்த ஒரு திட்டத்தையும் ஆதரித்தோ மறுத்தோ பேசுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் கருத்துரிமையை வழங்கியிருக்கிறது. அதை மறுக்கும்வகையில் குறிப்பாணை இருக்கிறது. ஜனநாயகரீதியில் அரசுக்கும் மக்களுக்கும் கருத்துகளை எடுத்துக்கூறுவதற்கு அரசமைப்புச் சட்டம் ஜனநாயக உரிமையை வழங்கியுள்ளது. இதை கருத்துப்பரப்பல், பேச்சு, கூட்டம்கூட்டும் உரிமை ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தும்விதமாகவே இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைப் பொறுத்தவரை அரசின் பார்வை, அணுகுமுறை குறித்து உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் போன்ற தனிநபர்கள், சமூக இயக்கங்களின் கருத்துகள் மாறுபட்டவையாக உள்ளன. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதிக்காதவகையில் சட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. 

அதையடுத்து, போலீஸின் சார்பில் 23-ம் தேதி இரவு 7 மணிக்கு, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிமறுத்து கடிதம் அளிக்கப்பட்டது. அதில்,” ஒரு பிரச்னை குறித்து அரசு தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு அப்பகுதியில் அமைதி நிலவி வரும் நிலையில், அப்பிரச்னை குறித்து மீண்டும் மீண்டும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் ஏற்படப்போகும் நன்மை ஏதும் இல்லை” என்றும், சில நீதிமன்ற உத்தரவுகளின்படியும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இதே பிரச்னையையொட்டி வள்ளுவர்கோட்டத்தில் கடந்த 3-ம் தேதியன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட்ட பல தலைவர்கள் பங்கேற்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கும் போலீஸ் தரப்பில் நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாக அனுமதி மறுக்கப்பட்டது. 

போலீஸின் அனுமதி மறுப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இரு வழக்குகளையும் ஒருசேர விசாரிக்கவுள்ளதாக நீதிபதி ராஜா கூறியுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு