Published:Updated:

கோவையில் ராணுவ முகாமை முற்றுகையிட்ட மாணவர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே இராணுவ முகாமினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்,மறியல்,மத்திய அரசு அலுவலகம் முற்றுகை என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை சட்ட கல்லூரி மற்றும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 12 பேர் 8வது நாளாக மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களும் ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினை இன்று சட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேர் முற்றுகையிட்டனர்.முதன்மை பொது மேலாளர் ஷாஜகானின் அறைக்குள் நுழைந்த மாணவர்கள் கதவை உள்ளே பூட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது முதன்மை பொது மோளாரின் தனி அலுவலர் ராமசந்திரன் என்பவரை மாணவர்கள் சிறை பிடித்தனர்.

##~~##
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சாய்பாபா காலனி காவல்துறையினர் மாணவர்களை கைது செய்தனர். அப்போது மாணவர்களின் போராட்டத்தை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கொச்சைப்படுத்துவதாகவும் தங்கள் கோரிக்கையினை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதே போன்று கோவை நேரு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுக்கரையில் உள்ள 4வது பட்டாலியனான தம்பி டைகர்ஸ் இராணுவ முகாமினை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக இராணுவ முகாமிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களின் இராணுவ முகாம் முற்றுகை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ஜெ.ரவி