Published:Updated:

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்! (படங்கள்)

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)
10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்! (படங்கள்)

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழகத்தில் 10 நாளாக மாணவர்கள் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டம் சென்னையில் இன்றும் உத்வேகத்துடன் தொடர்ந்து நடைபெற்றது.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு என்ற அமைப்பில் இடம் பெற்றுள்ள 24 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இன்று மெரீனாவில் உள்ள காந்தி சிலை முன்பு கூடினார்கள். அவர்கள் தொடர்ந்து இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

அதன் பிறகு, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை பாடையில் ஏற்றி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட யாரையும் போராட்டத்தில் பங்கேற்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

திருவண்ணாமலையில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த 15 மாணவர்களை போலீஸார் தாம்பரத்தில் தடுத்து நிறுத்திய தகவல் கிடைத்ததால், அது இந்த மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறைக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டதுடன் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினர் அடையாறு பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சங்கு ஊதும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திலீபன் அரங்கில் கடந்த ஒன்பதாவது  நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழ் ஈழ விடுதலைக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் போராடிய இவர்களுக்கு ஆதரவாக நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்களை திரட்டிய கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் ஒன்று கூடினர். அங்கு ஈழ விடுதலைக்காகவும், ஐ.நா சபையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடர் முழக்கங்களை எழுப்பியபடி உள்ளனர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் மே-17, இயக்கம், தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினர்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இந்த போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய நல்லகண்ணு, போராட்டம் இப்போது சரியான திசையி்ல் செல்கிறது. கருணாநிதி சரியான நேரத்தில் உரிய முடிவு எடுத்திருந்தால் இலங்கையில் நிறைய உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். தற்போது மாணவர்களின் தன்எழுச்சியான போராட்டங்களை பார்த்து அரசியல் இலாபத்திற்காக மத்திய அரசில் இருந்து விலகி இருக்கிறார். மாணவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவ - மாணவிகள் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதையும், இலங்கை அரசு மீது சர்வதேச குழுவை கொண்டு போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை வண்ணார் பேட்டையில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது தவிர, நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களிலும் போராட்டம் வலுத்து வருகிறது. இன்று போலீஸாரின் அனுமதியுடன் மட்டும் 35 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அத்துடன் சில இடங்களில் தன் எழுச்சியும் பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி கலைந்து சென்றனர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

திருச்சி: திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் 250 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து காலை முதல் பேரணியாக சென்று திருச்சி கலெக்டர் ஆபிசில் முற்றுகையிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்  உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர் .பின்னர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

இலங்கை தமிழர் மீதான தாக்குதல் குறித்து சர்வதேச பொது விசாரணை நடத்த கோரியும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மண்டபத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாம் வளாக பகுதிக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள மாணவர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

ராமேஸ்வரம்: இதே போல் ராமேஸ்வரம் பேரூந்து நிலையத்தில் தீவு மாணவர் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தங்கச்சிமடத்திலும், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பும் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

மதுரை: மதுரையில் இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. இதுநாள் வரையில் சட்டக் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமே போராடிக் கொண்டிருந்தார்கள். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஓரிருவர் மட்டுமே இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

இன்று என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி, மதுரை அண்ணாநகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். 9 கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்தப் போராட்டத்தில், மதுரை கே.எல்.என்., தியாகராஜர், லதா மாதவன், வேலம்மாள் போன்ற என்ஜினீயரிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காரியாபட்டி சேது இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்களும் பங்கேற்றார்கள்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை என்பதால் அதை எதிர்க்கிறோம். இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் அல்ல, திட்டமிட்ட இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும். இந்திய அரசு, தனித்தமிழ் ஈழம் அமைக்க அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். சர்வதேச நாடுகள் அடங்கிய, விசாரணைக்குழு ஒன்றை அமைத்து இலங்கையில் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்குழுவில் எந்த ஆசிய நாடும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழக மீனவர்களைக் கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவில் இருந்து இலங்கை தூதரை வெளியேற்ற வேண்டும். இலங்கையுடனான ராஜ்ய உறவுகள் அனைத்தையும் இந்தியா துண்டிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தினர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

தமிழ் ஈழத்திற்கான தீர்வை மத்திய அரசு தராவிட்டால் அரசுக்கான எந்த வரியும் நாம் செலுத்தக் கூடாது என்றும் பொதுமக்களை மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இன்று ஒரு நாள் நடைபெறும் அடையாள உண்ணாவிரதத்தை நாளையும் நீட்டிப்பது பற்றி மாணவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, தமிழ் ஈழ விடுதலை மாணவர் இயக்கம் சார்பில் மதுரையில் உள்ள அனைத்து கல்லுரிகள் அடங்கிய மாணவர்களின் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் சுமார் 1500 மாணவர்கள் பங்கேற்றனர். தமுக்கம் தமிழன்னை சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், கோரிப்பாளையம், சிம்மக்கல், ரயில் நிலையம் வழியாகச் சென்றதால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

கோவை: தனித்தமிழ் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி விமான நிலையத்தை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவிநாசி சாலையில் இருந்து விமான நிலையம் நோக்கி ஓடிவந்த மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, காவல்துறையினர் மாணவர்களை தாக்கினர். இதனையடுத்து காவல்துறையினருக்கு எதிராக காவல்துறை வாகனத்தை மறித்து போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு, காவல்துறையினரை தள்ளிவிட்டு மீண்டும் விமானநிலையத்தை ஓடிச்சென்று முற்றுகையிட்டனர்.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

அப்போது மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் தாக்கியதாகவும், தமிழ்நாடு சிறப்பு காவல்பிரிவு போலீசார் தங்களது பெயர் பேட்ஜ்களை அகற்றிவிட்டு மாணவர்களை தாக்கியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து மாணவர்களை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கோவை மாநகர துணை கமிஷனர் சுந்தரவடிவேலு பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக அரைமணி நேரம் விமானநிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்ககெடுப்பு நடத்த வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகத்தை பாரதியார் பல்கலை கழக மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கோவையில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடந்த மாணவர் பேரணியில் பங்கேற்ற பாரதியார் பல்கலைகழக மாணவ - மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் இனப்படுகொலை நடத்திய ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றும் அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவிகள் 51 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக சுங்க அலுவலகம் அமைந்து இருந்த அடுக்குமாடி கட்டிட வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

திண்டுக்கல்: ஈழத் தமிழர்களை அழித்தொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ராஜபக்சேவை கண்டிக்கும் வகையிலும் திண்டுக்கல் அருகே நாய்களில் கழுத்தில் சிங்கள வெறியன் ராஜபக்சே என்று எழுதிய அட்டையை கட்டி தொங்கவிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கோவிலூரில் இன்று காலை சிங்கள இனவெறியன் ராஜபக்சே  என எழுதிய அட்டைகளுடன் ஐந்து நாய்கள் சுற்றி வந்தன. இந்த அட்டைகளை யார் கட்டி தொங்க விட்டனர் என உளவுத்துறை போலீசார்  விசாரித்து வருகின்றனர். அதே போல கோவிலூர் முழுக்க கடைகளில் பிரதமர் மன்மோகன்சிங்கையும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து கடந்த 18ஆம் தேதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் நடை பயணமாக சென்று சென்னையில் இருக்கும் இலங்கை தூதரகம் அருகில் போராட்டம் நடத்த இருந்தனர். அவர்களை தாம்பரம் அருகில் போலீசார் மறித்து நடைபயணத்திற்கு அனுமதி மறுத்து கைது செய்ய இருந்தனர். மாணவர்களின் நடை பயணத்திற்கு தடை விதிக்க கூடாது, அவர்களை கைது செய்ய கூடாது என்றும்  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அரசு கலைக் கல்லூரி, சண்முகா கல்லூரி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, அருணை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி, சன் கல்லூரி மற்றும் திருமலா பாலிடெக்னிக் மாணவர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக தாலுகா அலுவகலம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

போலீசாரின் கெடுபிடியால் மாணவர்கள் ஆங்காங்கே தனித் தனி குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினர் வழக்கறிஞர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத பந்தல் அருகே அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபடி இருந்தனர். ஒரு பிரிவினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஒரு பிரிவினர் மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவண்ணாமலைக்கு மதியம் 12 மணிக்கு வந்தபோது மறித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
 

10வது நாளாக பற்றி எரியும் தமிழகம்!  (படங்கள்)

தஞ்சாவூரில் 5 ஆயிரம் ரயில் நிலையத்தில் இருந்து சிவகங்கை பூங்கா நோக்கி பேரணியாக சென்றனர். பட்டுக்கோட்டையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டக்குழுவினர் பேரணி நடத்தினர்.

செய்திகள்: ஆண்டனிராஜ், இரா.மோகன், ஆர். குமரேசன், கோ.செந்தில்குமார், ஜோ.ஸ்டாலின், ச.ஜெ .ரவி, ச.பா.முத்துக்குமார்

படங்கள்: பொன்.காசிராஜன், எல்.ராஜேந்திரன்,  தி.விஜய், கே.குணசீலன், பா.கந்தகுமார், உ.பாண்டி, பா.காளிமுத்து, எஸ்.கேசவசுதன், வேங்கடராஜு, தீக் ஷித்