Published:Updated:

விடுமுறை வேண்டாம்; ஈழ விடுதலை வேண்டும் - சேலம் மாணவர்கள் கோரிக்கை

சேலம்: 'இது விடுமுறைக்கான போராட்டம் அல்ல; ஈழ‌ விடுதலைக்கான போராட்டம். எனவே தமிழக அரசு உடனடியாக கல்லூரிகளை திறக்க வேண்டும்" சேலத்திலிருந்து மாணவர்கள் இப்படியும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஈழமக்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டங்கள் தொடர்வதால் கல்லூரிகளை திறக்கும் விஷயத்தில் இதோ அதோ என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்த 'தமிழீழ சுதந்திர சுவாசம்'  என்ற மாணவர் கூட்டமைப்பினர் சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து உணர்ச்சிப் பிழம்பாக பேசிய மாணவ பிரதிநிதிகள், ''மாணவர் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காகவே கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டிருக்கிறது தமிழக அரசு. நாங்கள் கேட்பது விடுமுறையும் அல்ல; இது விடுமுறைக்கான போராட்டமும் அல்ல. ஈழவிடுதலைக்கான போராட்டம்.

எனவே அரசும் கல்லூரி நிர்வாகங்களும் எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மாணவ சக்திகளை ஒன்று திரட்டுவதற்காக உடனடியாக கல்லூரிகளை திறக்க முன்வரவேண்டும். கல்லூரிகளை திறந்தால் அறவழி போராட்டங்கள் மூலம் ஈழ விடுதலையை பெற்றுத் தருவதோடு மட்டுமில்லாமல் கச்சத்தீவை மீட்கும் விவகாரத்திலும் மத்திய அரசை இறங்கி வரவைப்போம்" என்று கோரிக்கை வைத்தார்கள்.

வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம். விஜயகுமார்