Published:Updated:

போலீஸை கண்டித்து ஸ்டேஷனுக்கு பூட்டு - வீராணம் விறு விறு

சேலம்: தப்புச் செய்தவர்களை போலீஸ் ஸ்டேஷன் லாக் அப்பில் வைப்பார்கள். ஆனால், வீராணம் மக்கள் போலீஸ் ஸ்டேஷனையே லாக் அப்பில் வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்!

சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும், இரு தரப்பிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி விடுவதாக நீண்ட நாட்களாகவே புகார் இருக்கிறது. இதைக் கண்டித்து  குடியுரிமை பாதுகாப்பு நடுவம் என்ற அமைப்பினர் பலமுறை எச்சரித்திருக்கிறார்கள். அப்படியும் அரிப்பு நிற்கவில்லை.

சமீபத்தில், கணவன் குடித்து விட்டு தினமும் அடிக்கிறார் என்று சொல்லி மனைவி புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரை காண்பித்து அந்த பெண்ணின் கணவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நிறைமாதமாக இருந்த‌ அந்த பெண்ணை  அடித்து துரத்தியதாம் வீராணத்தின் வீரமான‌ போலீஸ்!

##~~##
இந்த நிலையில் நேற்று, தாதம்பட்டி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் இரண்டு தரப்புக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்கள். இரு தரப்பிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கம் போல கட் டைப்பஞ்சாயத்து பேசி இருக்கிறது போலீஸ். இதைக் கண்டித்து, குடியுரிமை பாதுகாப்பு நடுவம் என்ற அமைப்பின் தலைவர் ஹரிபாபு உள்ளிட்ட நான்கு பேர் இன்று காலையில் போலீஸ் ஸ்டேஷனில் போய் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இதனால் அவர்களை பிடித்து லாக் அப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.
இந்தத் தகவல் ஊருக்குள் பரவியதை அடுத்து, கூட்டமாக திரண்டு வந்த முப்பத்துக்கும் மேற்பட்ட நபர்கள், போலீஸ் ஸ்டேஷனை இழுத்து மூடி பூட்டுப் போட்டிருக்கிறார்கள். இதையடுத்து, அந்த முப்பது பேரையும் கைது செய்துவிட்டது போலீஸ். ஹ‌ரிபாபு உள்ளிட்டவர்களை தனி இடத்தில் வைத்து போலீஸார் ஸ்பெஷல் டிரீட்மென்ட் கொடுப்பதாக தகவல் வருவதால் வீராணம் ஏரியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வீ.கே.ரமேஷ்