Published:Updated:

`அரசு கொடுத்த 2 சென்ட் நிலத்தையும் பறிச்சிட்டாங்க..!’ - தீக்குளிக்க முயன்ற கட்டடத் தொழிலாளி

இரா.மோகன்
`அரசு கொடுத்த 2 சென்ட் நிலத்தையும் பறிச்சிட்டாங்க..!’ -  தீக்குளிக்க முயன்ற கட்டடத் தொழிலாளி
`அரசு கொடுத்த 2 சென்ட் நிலத்தையும் பறிச்சிட்டாங்க..!’ - தீக்குளிக்க முயன்ற கட்டடத் தொழிலாளி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அலுவலக வளாகத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வருபவர் சண்முகம் மகன் சசிக்குமார். கட்டட கூலித்தொழிலாளியான இவரது வீட்டுக்கு அருகில் கடந்த 2000-ம் ஆண்டில் இவருக்கு அரசின் சார்பில் 2 சென்ட் நிலம் இலவச வீட்டுமனைக்காக வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் தலைமையில் வந்த சிலர் திடீரென சசிக்குமாரையும் அவரின் மனைவி பக்கிரியம்மாளையும் தாக்கி விட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வீட்டைச் சுற்றிலும் வேலி அமைத்துவிட்டுச் சென்றுவிட்டனராம்.

இது குறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் சசிக்குமார் புகார் அளித்தும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், இச்சம்பவத்தில் காயம் அடைந்த பக்கிரியம்மாள் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இன்று காலை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் செல்லக்குமார் தரப்பினர் வீடுகட்ட முயன்றுள்ளனர்.

இது குறித்தும் சசிக்குமார் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அப்போதும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சசிக்குமார், தனக்குரிய சொத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரியும் தன்னையும் தன் மனைவியையும் தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சசிக்குமார் ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் தீயணைப்பு வீரரும் அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை செய்துவிடாமல் தடுத்தனர். பின்னர், கேணிக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.