Published:Updated:

``அரசும் காவல்துறையும் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறார்கள்!" - செந்தில்பாலாஜி ஆவேசம்

துரை.வேம்பையன்
``அரசும் காவல்துறையும் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறார்கள்!" - செந்தில்பாலாஜி ஆவேசம்
``அரசும் காவல்துறையும் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறார்கள்!" - செந்தில்பாலாஜி ஆவேசம்

``தமிழக அரசும் காவல்துறையும் எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறார்கள். அவர்களின் தடையை சட்டப்படி சந்திப்பேன்" என்று அ.ம.மு.க கட்சியின் அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் நலதிட்டங்களை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து, நீதிமன்ற ஆணை பெற்று  நாளை உண்ணாவிரதப் போரட்டம் நடத்த இருந்தார் செந்தில் பாலாஜி. இதற்காக, இன்று க.பரமத்தி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்துக்காகப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, க.பரமத்தி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாவட்டக் காவல் உதவி கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் தடை விதித்தனர்.

இதனால், செந்தில்பாலாஜிக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் நிறைவில்,'உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவுக்கு எதிராகக் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்து, மனு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுள்ளது. எனவே வழக்கு முடிவுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்படும்' எனக் காவல் துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருந்தபோதும், 'இது தொடர்பாக எழுத்துபூர்வமான அறிக்கை அளிக்க வேண்டும்' என செந்தில்பாலாஜி தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்று அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அளித்த அறிக்கையை க.பரமத்தி காவல் ஆய்வாளர் குணசேகரன் செந்தில்பாலாஜியிடம் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட செந்தில்பாலாஜி, தனது கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.
 

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த நாங்கள் பெற்ற உத்தரவுக்கு எதிராகக் காவல் துறை சார்பில் அவசர அவசரமாக இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. ஆனால், எங்கள் போராட்டத்துக்குத் தடை விதிக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசும் காவல் துறையும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதேச்சதிகார போக்கில் செயல்படுகிறது. நீதிமன்ற உத்தரவை அவமதித்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று, அதே இடத்தில் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தப்படும். அதுவரை போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது" என்றார். செந்தில்பாலாஜிக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மூன்று மணி நேரம் அங்கே பரபரப்பு நிலவியது.