Published:Updated:

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வேண்டும்..! போராட்டத்தில் இறங்கிய மாட்டுவண்டித் தொழிலாளர்கள்

சி.ய.ஆனந்தகுமார்
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வேண்டும்..! போராட்டத்தில் இறங்கிய மாட்டுவண்டித் தொழிலாளர்கள்
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வேண்டும்..! போராட்டத்தில் இறங்கிய மாட்டுவண்டித் தொழிலாளர்கள்

திருச்சி காவிரி கொள்ளிடம் ஆறுகளில் உத்தமர் சீலி, திருவளர்ச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் மணல் குவாரிகளில், மணல் லாரிகள்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மணல் கொண்டுசெல்லப்படுவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தனியாக மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி,  சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தில் இணைந்த திருச்சி மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்டத் தலைவர் ராமர் தலைமையில், சங்க நிர்வாகிகள் சம்பத், சிவராஜன், சேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் திருச்சி சுப்பிரமணியபுரம் அருகேயுள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்காக மணல் குவாரி அமைப்பது தொடர்பாக ஆவேசமாகப் பேசினர். அப்போது அவர்கள், “திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி மணல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதைக் கருத்தில்கொண்டு, திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அமைத்து, மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்” என முழங்கினர்.

நம்மிடம் பேசிய மாட்டு வண்டித் தொழிலாளர்கள்,  “ காவிரி ஆற்றின் துணை ஆறான கோரையாறு  உள்ளிட்டவை மணல் கொள்ளையர்களால் சீரழிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீஸார், மதயானைப்பட்டி பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மற்றும் டாரஸ் லாரிகளை மடக்கியதில், கோரையாற்றில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு சென்ற 4 லாரிகள் பிடிபட்டன. ஒவ்வொரு லாரியிலும் தலா 6 யூனிட்டுக்கு மேல் மணல் இருந்தது. மணல் கடத்திச்சென்ற லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை. விசாரணையில் அந்த மணல் லாரிகள், தென்மாவட்டங்களான விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டுசெல்வது தெரியவந்தது. திருச்சியில் திருட்டுத்தனமாக அள்ளப்படும் மணல், தென்மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், பெங்களூரு, கேரளா போன்ற  பகுதிகளுக்கும் அனுப்பி, பல மடங்கு கூடுதல் விலைவைத்து விற்கப்படுவதும் தெரியவந்தது. அதையடுத்து, மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்று லாரிகளில் இஷ்டத்துக்கு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். இதைத் தடுக்க மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். குறிப்பாக கரூர் மாவட்டம் மாயனூர் முதல் கல்லணை வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மணல் அள்ளும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும். லாரிகளில் மணல் அள்ளும் மணல் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டுள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன் வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.