Published:Updated:

பாமக போராட்டம் ரத்து : ராமதாஸ் அறிவிப்பு

சென்னை, மார்ச்.10,2011

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொண்டு திங்கட்கிழமை நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன.

இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பாமகவும், தமிழக மாணவர் சங்கமும் அறிவித்திருந்தன.

எனினும் நாடு முழுவதிற்குமான பொது நுழைவுத் தேர்வு இந்த கல்வியாண்டில் தமிழகத்துக்கு பொருந்தாது என்றும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் முயற்சிக்கு உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கத்தினை ஏற்றுக்கொண்டு மாணவர் சங்கம் அறிவித்திருந்த போராட்டமும், பாமக அறிவித்திருந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது," என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு