Published:Updated:

``ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்'' - திருமாவளவன் உறுதி!

``ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்'' - திருமாவளவன் உறுதி!
``ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்'' - திருமாவளவன் உறுதி!

``ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்'' - திருமாவளவன் உறுதி!

சிதம்பரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,  விவசாய சங்க கூட்டமைப்பு ரவீந்திரன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, மனித நேய ஜனநாயக கட்சி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது,  "ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தைப் பாலைவனமாக்கக்கூடிய வகையில் தொடர்ந்து மோடி அரசு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தை மட்டும் இல்லை, இந்தியாவையே பாதுகாக்கவேண்டிய நிலை உள்ளது. இதை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 10-ம் தேதி , "தேசம் காப்போம்" என்ற மாநாடு ஒன்றை திருச்சியில் நடத்த உள்ளோம். இதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் ராகுல் காந்தி  மற்றும் இடது சாரி தலைவர்களும், தோழமைக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல ஒட்டு மொத்த இந்தியாவையே பாதுகாக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கான அரசு அல்ல. அவர்கள் சொல்வது போல இந்துக்களுக்கான அரசும் அல்ல. இந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கானஅரசும் அல்ல. அவர்களுக்கு ஆதரவாக இருக்கிற தனியார் நிறுவனவங்களைப் பாதுகாப்பதற்கான அரசாக உள்ளது. அவர்களின் அரசியல் கோட்பாடுகளும்,  சமூக பொருளாராதரக் கொள்கைகளும், கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் நிலையே உள்ளது. இது கவலைக்குரியது. இன்னம் ஒரு முறை பி.ஜே.பி ஆட்சி இந்தியாவில் அமையுமானால், இந்த தேசத்தையும் மக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது. மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டப் பஞ்சாயத்துத் தலைவராக உள்ளார்.  

அவர், இந்த நாட்டின் பிரதமர் என்பதை விட, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் வேதாந்தா குழுமத்தைச் சார்ந்தவர்களுக்கும் மீடியேஷன் செய்யக்கூடிய வேலையைத்தான், ஒரு புரோக்கராகத்தான்  பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.  இவர் எதற்காக வெளிநாடு போகிறார் என்றால் இவர்களுக்காகத்தான். வேதாந்தா குழுமம் மோடி, அமித்ஷா  ஆகியோருக்கு நண்பர் என்ற வகையில் இந்தியாவில் 45 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்ட காயங்கள் இன்னும் ஆராத நிலையில், மீண்டும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஏன் வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.சி.சி-க்கு கிடைக்கவில்லை?  இதில் ஏராளமான ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன.

எனவே, வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கியதில் பெரும் ஊழல், முறைகேடு நடந்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து மோடி அரசு  விசாரணை நடத்துவதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமலுக்கு வந்தால், பல கிராமங்களை  அப்புறப்படுத்தும் நிலை ஏற்படும். நிலத்தடி  நீர் நஞ்சாகும், குடிக்க தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.  விவசாயம் பாதிக்கப்படும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு சிதம்பரம் பகுதியில் செயல்படுத்த உள்ள  ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி, தி.மு.க உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.
 

அடுத்த கட்டுரைக்கு