Published:Updated:

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடையடைப்பு: பதற்றம்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடையடைப்பு: பதற்றம்
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடையடைப்பு: பதற்றம்

கோவை: இந்து முன்னணியினர் மீது தொடர்ந்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும், தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த 14ஆம் தேதி இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் (34) மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். தொடர்ந்து குன்னூர் பஸ் நிலையம் அருகே 16ஆம் தேதி இரவு இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்து முன்னணியினர் 3 பேர் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்து முன்னணி, இந்து மக்கள கட்சி (தமிழகம்)  உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

3 மாவட்டங்களிலும் மிக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. திருப்பூரில் பல பனியன் கம்பெனிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக இந்து முன்னணி பொதுச்செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், “இந்து இயக்கத்தினர் மீது தொடர்ந்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும், இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பந்த் நடந்து வருகிறது.  இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கடையடைப்பு போராட்டத்தையொட்டி, கோவை மாநகரம், கோவை புறநகர் மாவட்டம், திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள 2 ஆயிரம் போலீசாருடன் கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சன் ஆசிர்வாதம் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில், பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இந்தநிலையில், கடைகளை மூட வலியுறுத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கடைகளை அடைக்க வற்புறுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

##~~##
இது குறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில், “இன்று நடந்து வரும் கடையடைப்புப் போராட்டத்தால் மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் காவல்துறை கவனமாக உள்ளது. கோவை மாநகரில் கடையடைப்பை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வண்ணம் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமிக்க பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடையடைப்பை கட்டாயமாக வலியுறுத்தி மக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,”  என்றார்.
கடந்த 6ஆம் தேதி திருமண மண்டபத்தில் துவங்கிய மோதல் சம்பவம் துவங்கி, சாமி சிலை உடைப்பு, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல், இரு தரப்பினர் சாலை மறியல், அர்ஜுன் சம்பத் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தாக்குதல், கடையடைப்பு என நீளும் சம்பவக்களால் கோவையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த சம்பவங்கள் திட்டமிடப்பட்ட ஒன்று என இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளானர். இஸ்லாமிய அமைப்பினர் கூறுகையில், “இந்த சம்பவங்கள் எல்லாம் கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொதுக்கூட்டங்களில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றனர். அதேபோல் ‘வருமுன் காப்போம். இந்துக்களே உஷார்’ எனும் புத்தகம் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 1997ல் கலவரம் ஏற்படுத்திய எண்ணங்களை செய்து வருகிறார்கள். சில போலீஸ் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக உள்ளனர். 1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே, கோவையில் 1997 - 98ல் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. நரேந்திரமோடியை முன்னிறுத்தி பி.ஜே.பி. தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு திட்டமிட்டே இதுபோன்ற சூழலை ஏற்படுத்துகின்றனர். 1998ல் நடந்த பாதிப்பில் இருந்து இப்போது தான் மீண்டு வர துவங்கியுள்ளோம். மீண்டும் அது திரும்ப வேண்டாம். இதற்கு போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இரு பிரிவினர் மற்றும் அமைப்புகள் இடையே ஏற்படும் சிறு சிறு உரசல்கள், மோதல்கள் கூட பெரிய அளவிலான சட்டம் -ஒழுங்கு பிரச்னையை கிளப்பும் வித்தாக அமையும் என்பது கடந்த காலத்தில் போலீசார் கற்றுக்கொண்ட பாடம். எனவே ஆரம்ப நிலையிலேயே பிரச்னைக்கான அடிப்படை காரணிகளை கண்டறிந்து காவல்துறையினர் சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவையில் திரும்ப வேண்டியது அமைதி தானே தவிர வேறு எதுவும் அல்ல.
ச.ஜெ.ரவி