Published:Updated:

"தீபாவளிக்கு முன்பு போராட்டத்தை நிறுத்தவேண்டியது அரசுதான்!" - போக்குவரத்துத் தொழிலாளர்கள்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள், தீபாவளிக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடலாம்

"தீபாவளிக்கு முன்பு போராட்டத்தை நிறுத்தவேண்டியது அரசுதான்!" - போக்குவரத்துத் தொழிலாளர்கள்
"தீபாவளிக்கு முன்பு போராட்டத்தை நிறுத்தவேண்டியது அரசுதான்!" - போக்குவரத்துத் தொழிலாளர்கள்

தீபாவளிக்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால், துணிகள் எடுக்கவும், பட்டாசுகள் வாங்கவும் மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் தீபாவளிக்கு ஊருக்குச் செல்வதற்காக ரயில், ஆம்னி பஸ் உள்ளிட்டவற்றில் முன்பதிவு செய்துவருகின்றனர். இதுதவிர, தீபாவளிக்கு முதல் நாள் அன்று முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறவர்களும் அடக்கம். அவர்களுக்கு இப்போதே வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணம், தீபாவளி சமயத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதுதான். 

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டியும், பென்சன் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டியும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தொடர் போராட்டம், உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்டன. ஆனாலும், பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையைக் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, அதிரடியாக, பஸ் டிக்கெட்டை 60 சதவிகிதம் உயர்த்தி, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கச்சா எண்ணெய், டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வால்தான் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும், அதுவும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும் காரணம் சொல்லப்பட்டது. 

இதையடுத்து, தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள், தீபாவளிக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் போராட்டத்தில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, நவம்பர் 1-ம் தேதிமுதல் அவர்களுடைய போராட்டம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.  போக்குவரத்துத் தொழிலாளர்கள் தீபாவளி சமயத்தில் போராட்டத்தை அறிவித்தால், பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகக்கூடும். ஆகவே, அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ. மாநிலப் பொதுச் செயலாளரிடம் ஆறுமுக நயினார், "மொத்தம் உள்ள 22,000 பேருந்துகளில் 10,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகரப்பேருந்துகளாக உள்ளன. 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மலைப் பகுதிகளுக்குப் பயன்படுகின்றன. அரசு எல்லாப் பேருந்துகளையும் லாபநோக்குக்காகப் பயன்படுத்தவில்லை. கிராமப்புறங்களில் வரும் வருமானமே 4,000 ரூபாய்தான். ஆனால், அவற்றைப் பராமரிக்கும் செலவு 8,000 ரூபாய்க்கு மேல். ஒரு கி.மீ தூரத்துக்குப் பேருந்தை இயக்குவதற்கு 42 ரூபாய் செலவாகிறது. ஆனால், அதற்கான வரவு 32 ரூபாய்தான். இந்த வருவாய் இழப்புகளைச்  சரிசெய்ய... அரசு, தொழிலாளர்களின் பணத்தை எடுத்துப் பயன்படுத்தியுள்ளது. இதுவரை 7,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்த இழப்பைச்  சரிசெய்ய பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் சுமார் 30 லட்சம் பயணியர்களை இழந்துள்ளோம். நாங்கள் தீபாவளியை முன்னிட்டு வேலைநிறுத்தத்தை அறிவிக்கவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தீபாவளிக்கு முன்பு  தடுத்து நிறுத்தும் பொறுப்பு அரசின் கையில்தான் உள்ளது" என்றார்.

இதுகுறித்து பயணிகள், "ஏற்கெனவே அரசாங்கம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு பலரும் பேருந்தில் பயணிப்பதில்லை. ரயில்களிலேயே செல்கின்றனர். ஏதாவது, அவசரத்துக்குச் செல்பவர்கள் மட்டுமே பேருந்தில் பயணிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் நாள்தோறும் உயரும் பெட்ரோல், டீசலினால் அரசாங்கம் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. மேலும், சாதாரண பேருந்துகளையும் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக மாற்றிவிட்டது. இந்த நிலையில், தீபாவளி நேரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அது மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, இந்த விஷயத்தில் அரசாங்கம் விரைவாகத் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும்" என்றனர்.

தொழிலாளர்கள் பிரச்னையை அரசாங்கம் கவனத்தில்கொள்ளாதது ஏனோ?