Published:Updated:

" 'ஐயா, துரை' என்றே அழைக்க வேண்டும்" - தொடரும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சோகம்!

" 'ஐயா, துரை' என்றே அழைக்க வேண்டும்" - தொடரும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சோகம்!
News
" 'ஐயா, துரை' என்றே அழைக்க வேண்டும்" - தொடரும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சோகம்!

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வால்பாறை நகராட்சிக்குப் பொருள்களை வாங்கிச் செல்ல வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என பொதுக் கழிப்பிட வசதியைக்கூட செய்து தரவில்லை என்பது இயலாமையின் உச்சம். 

சில்லென்ற கிளைமேட், திரும்பிய பக்கம் எல்லாம் தேயிலைத் தோட்டங்கள், தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் நகராட்சிகளில் ஒன்று..,இப்படி வால்பாறைக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.  இவ்வளவு இருந்தும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேல் மக்கள் வசித்து வந்த வால்பாறையில், தற்போது 48 ஆயிரம் பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். ஆனால், அவர்களும் உரிய நிலம், சொந்த வீடு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். 

வால்பாறை சி.ஐ.டி.யூ பகுதிச் செயலாளர் பரமசிவம், "2002-ம் ஆண்டில் இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் 

தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். முறையான தினக்கூலி இல்லாததால், முக்கால்வாசி பேர் இங்கிருந்து இடம்பெயர்ந்து விட்டனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 2002 ஏப்ரல், மே மாதங்களில் 76.85 ரூபாய் தினக்கூலிக்குப் பதிலாக, 72 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. தினக்கூலியில் இருந்து  4 ரூபாய் 85  பைசா  குறைக்கப்பட்டதால், சில தொழிற்சங்கங்கள் சார்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 'தொழிற்சங்க உறுப்பினர்களுக்கான சந்தாவை தொழிலாளியிடமிருந்து பிடித்துக் கொடுக்க மாட்டோம்' என்று தேயிலைத் தோட்ட அதிபர்கள் மிரட்டினார்கள். ஆனால், அவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாத சில தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் நிலுவைத் தொகையை, 2002-ம் ஆண்டு ஜனவரி முதல், 2004-ம் ஆண்டு டிசம்பர்வரை கணக்கிட்டு, ஒரு நாளுக்கு 4.85 ரூபாய் வீதம், 939 நாள்களுக்கு ரூ.4,554.15 பைசா வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், 'தொழிற்சங்கங்களோடு இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும்' என்று தேயிலை அதிபர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏழு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில், சி.ஐ.டி.யூ தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் தோட்ட அதிபர்களோடு கைகோத்துவிட்டனர். தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூபாய் 4,554.15-க்குப் பதிலாக, 1,400 ரூபாய் கொடுத்தாலே போதும். வழக்கின் செலவுத் தொகையை ஏற்றுக்கொள்தல், உறுப்பினர் சந்தா தொகையைத் தொழிலாளர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளனர்.  பஞ்சப்படி உயர்வும், தொழிலாளர் நலச் சட்டத்தில் உள்ள கொள்கைகளின்படி பின்பற்றப்படவில்லை. 2008-ம் ஆண்டுக்குப் பிறகுதான் தொழிலாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் 350 ரூபாய் (தினக்கூலி), வால்பாறை தொழிலாளர்களுக்கும் கிடைக்குமா என்பது கனவாகவே இருக்கிறது" என்றார் ஆதங்கத்துடன்.

வால்பாறையில் கடந்த இரண்டு மாதங்களாகப் பருவமழை அதிகளவு பெய்ததால், தேயிலை கொழுந்து அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் தொழிலாளர்கள் காலை 8 மணி முதல், மாலை 7 மணி வரை வன விலங்குகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.  "8 மணி நேர வேலை என்பது எங்களுக்குக் கானல் நீர்தான். பல தேயிலைத் தோட்டங்களில், இன்றைக்கும் 'ஐயா, சாமி , துரை' என்றுதான் மேனேஜர்களை நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் அழைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு மேனேஜர்கள் அதிக மன உளைச்சல்களை ஏற்படுத்தி விடுவார்கள்" என்று  தொழிலாளர்கள் சிலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

"தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமாக  வீடு, நிலம் கிடையாது. முகாமில் இருக்கும் அகதிகளைப்போல நிர்வாகம் கொடுக்கும் வீடுகளில் வாழ்ந்து வருகிறோம். இங்கு மருத்துவம், கல்வி, மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள், நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை. வனத்தையொட்டி இருக்கும் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் யானை, சிறுத்தை, காட்டெருமை, பாம்புகள்  அடிக்கடி நுழைகின்றன. வேலைக்காகவும், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்காகவும் அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கின்றோம்" என்று கண்ணீர் வடிக்கிறார் மாரியம்மாள் என்ற தொழிலாளி.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வால்பாறை நகராட்சிக்குப் பொருள்களை வாங்கிச் செல்ல வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என பொதுக் கழிப்பிட வசதியைக்கூட செய்து தரவில்லை என்பது இயலாமையின் உச்சம். 

இதுதொடர்பாக வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவைத் தொடர்பு கொண்டபோது, "சில தொழிற்சங்கங்கள் கையெழுத்துப் போட்டுவிட்டதால் வந்த பிரச்னை இது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகளை நான் நன்கு அறிவேன். அவர்களின் பிரச்னைகளைத் தொடர்ந்து மேலிடத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய தீர்வு கிடைக்க முயற்சி செய்து வருகிறேன்" என்றார்.

வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்ட அதிபர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வால்பாறையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் நினைப்பதுதான் நடக்கும். தேயிலைத் தொழிலாளர்கள் உயிரிழந்தாலும், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே புதைத்து உரமாக்கி விடுகின்றனர்.