Published:Updated:

கூட்டுறவு தேர்தல் முறைகேடு: நடுரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர் போராட்டம்

கூட்டுறவு தேர்தல் முறைகேடு: நடுரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர் போராட்டம்
கூட்டுறவு தேர்தல் முறைகேடு: நடுரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் நடந்த முறைகேட்டை கண்டித்து நடுரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தியூர் அடுத்த அந்தியூர் காலனி பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. 600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கத் தேர்தலை முன்னிட்டு இச்சங்க உறுப்பினர்களில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கள்ளிமடை குட்டை பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் வெங்கிடுபதி, அ.தி.மு.க.வினரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டினார்.

இதையடுத்து, கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதன் பேரில், 25 மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கடந்த 15ஆம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நாளில் தேர்தல் அதிகாரி சங்கத்துக்கு வரவில்லை. 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை இறுதி வேட்பாளர் பட்டியலும் ஓட்டப்படவில்லை.

##~~##
இதையடுத்து, நேற்று காலை பால் உற்பத்தியாளர் ஒன்று திரண்டு, இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். அதுவரை சங்கத்துக்கு பால் ஊற்றுவதில்லை எனக்கூறி, மலைகருப்பசாமி கோயிலில் இருந்து அந்தியூர் செல்லும் மெயின் ரோட்டில் கேன்களில் இருந்த பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த அந்தியூர் போலீசார் அங்கு வந்து பேச்சு நடத்தினர். இதில் நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் பேசி சங்க உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த அதிகாரிகளை வரவழைப்பதாக போலீசார் கூறினர்.
அதிகாரி வரும் வரை சங்க வளாகத்தில் காத்திருப்பதாக கூறி, பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலை கூட்டுறவு சங்க வளாகத்தில் அமர்ந்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து, பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.