Published:Updated:

‘இனி டாஸ்மாக் இருக்கவே கூடாது!’ - டி.எஸ்.பி-யிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

‘இனி டாஸ்மாக் இருக்கவே கூடாது!’ - டி.எஸ்.பி-யிடம் கிராம மக்கள் வாக்குவாதம்
‘இனி டாஸ்மாக் இருக்கவே கூடாது!’ - டி.எஸ்.பி-யிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

‘‘போதைக் கும்பல் தகராறு செய்கிறது. டாஸ்மாக் கடையைத் திறக்கவே கூடாது’’ என்று போராட்டம் நடத்திய கிராமமக்கள் டி.எஸ்.பி-யிடம் வாக்குவாதம் செய்தனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தும்பேரி கூட்டுரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. இங்கு மதுக்குடிக்கும் கும்பல் போதையில் தகராறு செய்வதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பகுதி வழியாக ஆந்திர மாநிலம் குப்பத்துக்குச் செல்லலாம் என்பதால் வெளியூர் நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பள்ளி - கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், இளம்பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இவற்றின் காரணமாக டாஸ்மாக் கடை எங்கள் பகுதியில் இருக்கவே கூடாது என்று தும்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று மதியம் டாஸ்மாக் கடையைத் திறக்க ஊழியர்கள் வந்தனர். இதைக் கவனித்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவலறிந்த டி.எஸ்.பி முரளி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று கிராமமக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ‘எங்கள் பகுதியில் இனி டாஸ்மாக் கடை இருக்கவே கூடாது’ என்று கூறி டி.எஸ்.பி-யிடம் கிராமமக்கள் வாக்குவாதம் செய்தனர். எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் கடை இன்று திறக்கப்படவில்லை.