Published:Updated:

இரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்?

இரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
இரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்?

அடுத்த போராட்டக்களம் திருப்பூர்

“எங்க கிராமத்துப் பக்கம் வெளியூர்க்காரங்க அடிக்கடி வந்தாங்க. விசாரிச்சப்போ, ‘நாங்க காலேஜ் ஸ்டூடன்ட்ஸ். நில ஆராய்ச்சிக்காக வந்திருக்கோம்’னு சொன்னாங்க. திடீர்னு ஒருநாள் பொக்லைன் வந்துச்சு. நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்யப்போறதா சொன்னாங்க. சந்தேகம் வந்து அவங்களைத் தோண்டித்துருவி விசாரிச்சோம். உடனே, ‘நாங்க மத்திய அரசோட இரும்புத் தாது நிறுவனத்தைச் சேர்ந்தவங்க. இங்கே இரும்புத் தாது எடுக்குறது சம்பந்தமா ஆய்வு செய்றோம்’னு சொன்னாங்க. இங்கிருந்து எங்களைத் துரத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு...’’ என்று கதறுகிறார்கள் பூசாரிவலசு கிராமத்தினர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் உள்ளது பூசாரிவலசு கிராமம். இங்குள்ள திருமண்கரடு பகுதியில் இரும்புத்தாது எடுப்பது தொடர்பான ஆய்வை, குதிரேமுக் இரும்புத் தாது கம்பெனி (கே.ஐ.ஓ.சி.எல்) என்ற மத்திய அரசு நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வுக்கு மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் மினரல் எக்ஸ்ஃப்ளோரேஷன் டிரஸ்ட் (என்.எம்.இ.டி) இவர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இரும்புத் தாது இருப்பு குறித்து ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. நிலத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் இவர்கள் இருந்தபோதுதான், ஊர் மக்களுக்கு விஷயம் தெரியவந்தது. அதையடுத்து ஓலப்பாளையம், பச்சாகவுண்டன் வலசு, ரெட்டி வலசு, அனுமந்தபுரம், மொட்டக்காட்டுப் புதூர் உள்படச் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் போராட்டத்துக்குத் தயாராகிவிட்டனர்.

இரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்?

‘‘இந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம், விவசாயம்தான். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், கீழ்பவானி திட்டம் ஆகியவை மூலமா வர்ற சொற்பத் தண்ணீரில்தான் விவசாயம் நடக்கிறது. இரும்புத் தாது சுரங்கத்துக்காக எங்கள் கிராமங்களைக் காலி செய்தால், ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரம் இழந்து வீதிக்கு வருவார்கள். எந்தவித அறிவிப்புமின்றி எங்கள் நிலங்களுக்குள் புகுந்து ஆய்வு நடத்தியவர்கள், இப்போது இரும்புத் தாது எடுப்பதற்காகக் குழிதோண்டப் போகிறோம் என்கிறார்கள். எங்களின் வாழ்வாதாரத்தைக் காவுவாங்க நினைக்கும் இந்தத் திட்டத்தைப் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து முறியடிப்போம்’’ என்கிறார் வெள்ளக்கோவில் ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ்.

‘‘செம்மறி ஆடு மேய்க்கிறதும், விவசாயக் கூலி வேலையும்தான் எங்க கிராமத்துல பல பேருக்கு வருமானத்தைக் கொடுக்குது. ஆனா, அந்த அதிகாரிங்க வந்துட்டுப் போனதுல இருந்தே எங்களுக்கு மனசு சரியில்ல. ஊரைவிட்டு எங்களைத் துரத்திடு வாங்களோனு பயமா இருக்கு’’ என்றார், பச்சாகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்?

ஓலப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன், ‘‘ஏற்கெனவே இங்குள்ள தனியார் கான்க்ரீட் தொழிற்சாலையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரும்புத் தாது எடுக்க 3,000 அடி ஆழத்தில் ஆழ்துளைக் குழிகள் அமைக்கப்போவதாகவும், இதற்காகச் சுற்றுவட்டாரத்தில் 100 சதுர கி.மீ பரப்பளவில் நிலத்தை எடுக்கவிருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால், இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் அதலபாதாளத்துக்குப் போய்விடாதா? மண்வளம் மொத்தமாகப் பாதிக்கப்படாதா? இப்பகுதியில் இயங்கும் கோழிப் பண்ணைகள், தேங்காய் பருப்பு உலர் களங்கள், விசைத்தறிக் கூடங்கள் போன்ற தொழில்களின் நிலை என்ன ஆவது? அவற்றை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களின் வாழ்வாதாரம் என்ன ஆவது?” என்று குமுறினார்.

இதுகுறித்து காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ-வான தனியரசு, சட்டசபையில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சட்டம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘குதிரேமுக் நிறுவனம், 2017-ம் ஆண்டே இந்த ஆய்வுக்காக அனுமதி கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கும் கடிதம் அளித்தது. தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்காத நிலையில், மாவட்ட நிர்வாகத்துக்கே தெரியாமல் அந்த நிறுவனம் அங்கு ஆய்வுப் பணிகளை நடத்தியுள்ளது. விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு கனிம நிறுவனத்துக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது’’ என்று கூறியுள்ளார். ஆனால், ‘வரும் டிசம்பர் மாதம் முதல் இப்பகுதியில் இரும்புத் தாது எடுக்கும் பணிகளை முழுவீச்சில் தொடங்கப்போகிறோம்’ என்று அதிகாரி கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனராம்.

இரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்?

இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் கேட்டதற்கு, “குதிரேமுக் ஓர் அரசு நிறுவனம் என்பதால், தங்களுக்கு ஒதுக்கப்படும் ஆராய்ச்சி நிதியை வைத்து, முதல்கட்ட ஆய்வு செய்துள்ளனர். அந்தப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டி, தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்தான், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்பார்கள். டிசம்பரில் திட்டம் தொடங்கப்போவதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது’’ என்றார்.

குதிரேமுக் இரும்புத் தாது கம்பெனியில் விசாரித்தோம். ‘‘சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலிருந்து, இந்தியாவில் இரும்புத் தாது உள்ள இடங்கள் பட்டியலில் திருமண்கரடு உள்ளது. இது, வழக்கமாகச் செய்யப்படும் ஆய்வுதான். இங்கிருக்கும் இரும்புத் தாது உயர்தரமானது அல்ல. எனவே, இப்போது இங்கு சுரங்கம் அமைக்கும் திட்டம் இல்லை’’ என்றனர்

இந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கு, ஆட்சியாளர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தின் அடுத்த போராட்டக்களமாக திருப்பூர் மாறும் சூழல் ஏற்படும்.

- தி.ஜெயபிரகாஷ்