Published:Updated:

`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு!

`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு!
`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு!

”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த 13 பேரின் உயிர் மீது அக்கறை இருப்பது உண்மை என்றால் ஆலையை மூட வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்” என வலியுறுத்தி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ததுடன் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடர்ந்து இயங்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீடியாக்களில் தெரிவித்துள்ளனர். ஆலைக்கு சாதகமான பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர், பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்தும், சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ், “ ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. ஆலை மூடப்பட்டதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை மட்டுமே போதும்.

இந்த அரசாணையை எதிர்த்து ஆலைத்தரப்பு, உலகத்தில் எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் ஆலையை மீண்டும் திறக்க முடியாது என இங்குள்ள அமைச்சர் (கடம்பூர் ராஜூ) அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால், இன்று என்ன ஆனது? ஆலையை மீண்டும் திறக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. முதலமைச்சர், அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு? சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் நிறைவேற்றிட வலியுறுத்தி பலமுறை கூறப்பட்டும் அரசு காதில் வாங்கவே இல்லை.

இந்த ஆலைக்கு எதிராக கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற மக்கள் பேரணியில் 13 அப்பாவிகள் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமக உயிரிழந்தார்கள். இந்த 13 பேர் உயிரின்  மீது இந்த அரசிற்கு அக்கறை இருப்பது உண்மை என்றால், இனியும் தாமதிக்காமல் சட்டமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். ஆலை அகற்றப்படும் வரை எதிராக அ.ம.மு.க., அறவழிப் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும்  தொடரும். அடுத்தகட்டமாக பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.” என்றார்.  ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி இல்லாத போது ஆர்ப்பாட்டம் நடத்திய நேரத்தில் போலீஸார் வந்ததால் சில நிமிடங்களில் முடிவடைந்தது ஆர்ப்பாட்டம்.