Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலைக்காகப் போராடிய மக்களின் தற்போதைய நிலை என்ன?

ஸ்டெர்லைட் ஆலைக்காகப் போராடிய மக்களின் தற்போதைய நிலை என்ன?
ஸ்டெர்லைட் ஆலைக்காகப் போராடிய மக்களின் தற்போதைய நிலை என்ன?

ஸ்டெர்லைட் பிரச்னை இன்றளவும் முடிவுக்கு வந்தபாடில்லை. கடந்த மே 22-ம் தேதி தமிழகத்துக்குக் கறுப்பு தினம். ஆம்... தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நடத்திய அமைதிப் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆலை மூடப்படுவதற்காகத் தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் எனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். ஆலை மறுபடி திறக்கப்படும் என்கிற அறிவிப்பு தூத்துக்குடி மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. உத்தரவு வந்ததை அடுத்து, அந்த மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்மிடையே பேசுவதற்கே தயங்குகிறார்கள். அங்கே இப்போது சூழல் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, தூத்துக்குடியிலுள்ள பெண் ஒருவரிடம் பேசினோம்.

``என்னம்மா சொல்லச் சொல்றீங்க... பதிமூணு உசுரை அநியாயமாப் பறிகொடுத்துட்டு உட்கார்ந்துருக்கோம். அந்த ஆலையைத் திறக்கக்கூடாதுனுதானே அம்புட்டு உசுரு போச்சு? கொஞ்சமாச்சும் மனிதாபிமானம் வேண்டாமாம்மா? அவங்களுக்கு கல்மனசுதான்போல. அவங்க மனசாட்சி கூடவா அவங்களை உறுத்தாது? அந்த ஆலையைத் திறக்கலாம்னு தீர்ப்பு சொன்னவங்க குடும்பத்துல யாரையாச்சும்  இப்படி சுட்டுக் கொன்னுருந்தா இந்த மாதிரியான தீர்ப்புதான் கொடுப்பாங்களா? தீர்ப்பு வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே போலீஸ்காரங்க ஊர்க்குள்ள புகுந்துட்டாங்க. யாராச்சும் ரெண்டு, மூணு பேர் சேர்ந்து நின்னா உடனே கைது பண்ணிக் கூட்டிட்டுப் போயிடுறாங்க. தீர்ப்பு வந்த அன்னைக்கு ஊருக்குள்ளே மின்சாரம் தடை பண்ணியிருந்தாங்க. 

வெளியில யார்கூடவும் பேசுறதுக்கே பயமா இருக்கு. நாங்க என்ன தீவிரவாதிகளா? எங்களுக்கு ஏன் இப்படியான தண்டனைன்னு தெரியல. மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிற ஆலையைத்தானே மூடச் சொல்றோம்? மக்களைக் காப்பாத்துறதுக்கு போலீஸ்காரங்களா, இல்லை கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாக்க போலீஸான்னே தெரியலம்மா. சத்தியமா ஊர்மக்கள் யார் முகத்துலேயும் துளிகூட சந்தோஷமில்ல. எல்லோரும் கொதிச்சுப் போய் கிடக்குறோம். 

மனுச உசுரோட மதிப்பு இவ்வளவுதானா? உண்மையைச் சொல்லணும்னா எங்க வீட்டுல சோறுகூட பொங்கல. எல்லோரும் அழுதுட்டே இருக்கோம். கண்டிப்பா அந்த ஆலையைத் திறக்கவிட மாட்டோம். மறுபடியும் போராட மக்கள் தயாராதான் இருக்காங்க. இதனால எத்தனை உசுருங்களை அவங்க கொல்லுவாங்கன்னு பார்ப்போம். எங்க உசுரைக் கொடுத்தாச்சும் எங்க தலைமுறையைக் காப்பாத்துறது எங்களோட கடமை'' - கலக்கமும் கவலையுமாகத் தேய்கிறது அவரின் குரல்.