Published:Updated:

`இழப்பீடும் இல்லை சரியான வேலைவாய்ப்பும் இல்லை’ - என்.எல்.சி-க்கு எதிராகப் பொங்கும் வேல்முருகன்

`இழப்பீடும் இல்லை சரியான வேலைவாய்ப்பும் இல்லை’ - என்.எல்.சி-க்கு எதிராகப் பொங்கும் வேல்முருகன்
`இழப்பீடும் இல்லை சரியான வேலைவாய்ப்பும் இல்லை’ - என்.எல்.சி-க்கு எதிராகப் பொங்கும் வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``என்.எல்.சி ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்போ, கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளோ எதையும் இதுவரை முறையாக வழங்கவில்லை. அப்படியிருக்க, 3-வது சுரங்கத்துக்கென இப்போது நிலம் எடுப்பதை என்.எல்.சி கைவிட வேண்டும். தமிழக அரசு அதற்குத் துணைபோகாது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 24-ம் தேதியன்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  

நெய்வேலி அனல் மின்  திட்டத்துக்காக சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் -2 என ஏற்கெனவே 3 நிலக்கரிச் சுரங்கங்களை என்.எல்.சி அமைத்துள்ளது. இதற்காக 45 ஊர்களில் நிலங்களை அது கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்குரிய இழப்பீட்டை இன்றுவரை சரிவர வழங்கவில்லை. அறிவித்தபடி நிலத்தின் உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. நிலம் எடுத்த அந்தக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி, மின்சாரம், பள்ளி, கல்லூரி என எதையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இப்போது 3-வது சுரங்கம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது என்.எல்.சி. இதற்காக 24 ஊர்களில் 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு செயலில் இறங்கியுள்ளது என்.எல்.சி.

அந்த நிலங்கள் அனைத்துமே விளைநிலங்களாகும். விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளவையாகும். ஏற்கெனவே உள்ள 3 சுரங்கங்களின் நிலக்கரியே என்.எல்.சி-யின் தேவைக்கு அதிகமாகும். அந்த உபரி நிலக்கரியைப் பிற நிறுவனங்களுக்கு விற்று பெரும் பண லாபம் சம்பாதித்துவருகிறது.

மேலும், முந்தைய 3 சுரங்கங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் மேல் உபரி நிலம் உள்ளது. இந்த நிலங்களை இதுவரை பயன்படுத்தவில்லை. அப்படியிருக்க 3-வது சுரங்கத்துக்கென நிலம் கையகப்படுத்துவது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.தேவைக்கும் அதிகமான நிலம் இருக்கும்போது, மீண்டும் நிலம் கையகப்படுத்துவது என்பது கார்ப்பொரேட்டுகள் வேலையாகவே மோடியின் இந்தியாவில் ஆக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் என்.எல்.சி-யும் செய்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இதில் கடலூர் மாவட்ட நிர்வாகம் என்.எல்.சி-க்குத் துணைபோவது நன்றாகத் தெரிகிறது. இது தமிழக அரசுக்குத் தெரியுமா தெரியாதா என்பதைத் தமிழக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக இந்த நிலம் கையகப்படுத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே. என்.எல்.சி-யைப் பொறுத்தவரை, ஏற்கெனவே கையகப்படுத்திய  நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு  வேலைவாய்ப்போ, கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளோ எதையும் இதுவரை முறையாக வழங்காதது மட்டுமல்ல; தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் தமிழகத்தைக் குறிப்பாக கடலூர் மாவட்டத்தைத் தாக்கியபோதெல்லாம் துரும்பைக் கூட கிள்ளிப்போட்டதில்லை என்.எல்.சி நிர்வாகம்.

இப்போது கஜா புயல் பாதிப்புக்கும் கூட அதன் பங்களிப்பு எதுவுமில்லை. எனவேதான் சொல்கிறோம்; விரிவாக்கம் என்ற பெயரில் 3வது சுரங்கத்துக்கென நிலம் எடுப்பதை என்.எல்.சி கைவிட வேண்டும் தமிழக அரசு அதற்குத் துணைபோகாது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் காரியத்துக்கு தமிழக அரசு ஒருபோதும் துணைபோகக்கூடாது. இதை வலியுறுத்தி வரும் 24-ம் தேதியன்று விருத்தாசலம் கோட்டாட்சியர்  அலுவலகம் முன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.