Published:Updated:

`இலவச வீட்டுமனை அளந்து கொடுங்க; இல்லன்னா தீக்குளிப்போம்’ - மண்ணெண்ணெய்க் கேனுடன் மக்கள் மறியல்

`இலவச வீட்டுமனை அளந்து கொடுங்க; இல்லன்னா தீக்குளிப்போம்’ - மண்ணெண்ணெய்க் கேனுடன் மக்கள் மறியல்
`இலவச வீட்டுமனை அளந்து கொடுங்க; இல்லன்னா தீக்குளிப்போம்’ - மண்ணெண்ணெய்க் கேனுடன் மக்கள் மறியல்

ஆதிதிராவிட மக்களுக்கு 2007-ம் ஆண்டில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அளந்து தர வலியுறுத்தி மண்ணெண்ணெய்க் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
அரியலூர் மாவட்டம், ஆதிச்சனூர் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட இன மக்களுக்குக் கடந்த 2007-ம் ஆண்டு 61 வீட்டு மனைகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசால் வழங்கப்பட்ட இடத்தை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் எனப் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை மூலம் பயனாளிகளுக்கு வீட்டுமனை அளந்து கொடுக்கப்பட்டது. அப்போது அருகில் உள்ள நில உரிமையாளர்கள் எங்கள் இடத்தில் அளக்கக் கூடாது எனத் தகராறு செய்ததையடுத்து 21 பேருக்கு வீட்டுமனையை அளந்த வருவாய்த்துறையினர் மீதமுள்ள வீட்டுமனையை அளக்காமல் சென்றுவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிட இன மக்கள் விளாங்குடியிருந்து தா.பழூர் செல்லும் சாலையில் ஆதிச்சனூர் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் மண்ணெண்ணெய்க் கேனை பறிமுதல் செய்தனர். மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமாதானமடையாத மக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``நாங்கள் தினக்கூலிகள் வேலைக்குப் போய்ட்டு வந்தால்தான் ஒருவேளையே சாப்பாடு சாப்பிட முடியும். இந்தச் சூழ்நிலையில் அரசு இலவசமாகக் கொடுத்த நிலத்தை அளக்கவிடாமல் உள்ளூர் கட்சிக்காரர்கள் பிரச்னை செய்கிறார்கள். இதை அதிகாரிகளிடம் சொன்னால் காதில் வாங்குவதில்லை. அக்கட்சிகாரார்களை எதிர்த்துப் பேசினால் போலீஸ்காரர்களை வைத்து மிரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது, எங்களுடைய வீட்டு இடத்தை அளந்து பட்டா போட்டுக்கொடுத்தால்தான் பேங்கில் லோன் வாங்க முடியும். இவர்களின் அரசியல் சுயலாபத்துக்காக எங்கள் வாழ்க்கையில் விளையாடுவது சரியா'' என்று கொந்தளிக்கிறார்கள்.