Published:Updated:

`போலீஸ் கெடுபிடி;லாரிகள் பறிமுதல்' - ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டம்!

`போலீஸ் கெடுபிடி;லாரிகள் பறிமுதல்' - ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டம்!
`போலீஸ் கெடுபிடி;லாரிகள் பறிமுதல்' - ஓட்டுநர்கள் உண்ணாவிரத போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் மணல் லாரி ஓட்டுநர்கள் அரை நிர்வாணத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மலேசிய மணல் விற்பனை அதிகரிக்கவே லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபும் பகுதிகளில் உள்ள ஆறுகளில் திருட்டு மணல் எடுப்பவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவல்துறையின் கெடுபிடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணல் கொள்ளை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் இருந்து எம் சாண்ட் ஏற்றிவந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காவல்துறை கெடுபிடியும் குறைந்தது. இதையடுத்து மீண்டும்  காவல் துறையினரின் கெடுபிடி அதிகரித்ததால், இன்று ஆத்தூர் சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநர்கள் அரைநிர்வாண கோலத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை எந்தவித வழக்கும் பதிவுசெய்யவில்லை. அந்தந்த மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள மணல் அனுமதிச் சீட்டின் அடிப்படையில் முறையாக மணல் கொண்டு செல்கிறோம். பல மாவட்டங்களைத் தாண்டி காஞ்சிபுரம் மாவட்டம் வரும்போது மட்டும் லாரிகளை மடக்கி பறிமுதல் செய்கிறார்கள். இதற்குக் காவல்துறை சார்பில் சரியான விளக்கம் அளிப்பது இல்லை. மலேசியமணல் விற்பனையை அதிகரிப்பதற்காக அரசியல் புள்ளிகள் சிலரின் வற்புறுத்தலால் காவல்துறையினர் லாரிகளை பறிமுதல் செய்கிறார்கள்” என லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள்.