Published:Updated:

`வன விலங்குகள் தொல்லை; ரியல் எஸ்டேட்டுக்கு ஆதாயம்!' - அரசின் நடவடிக்கையால் பொங்கும் மக்கள்

`வன விலங்குகள் தொல்லை; ரியல் எஸ்டேட்டுக்கு ஆதாயம்!' - அரசின் நடவடிக்கையால் பொங்கும் மக்கள்
`வன விலங்குகள் தொல்லை; ரியல் எஸ்டேட்டுக்கு ஆதாயம்!' - அரசின் நடவடிக்கையால் பொங்கும் மக்கள்

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகரின் மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பாக கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம்,  கடையநல்லூர் தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கென தனியாக கட்டடம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. அதனால் தாலுகா அலுவலகத்துக்காகப் புதிதாக நிரந்தரக் கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தாலுகா அலுவலகம் ஊருக்குள் அமைந்தால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் முடிவாக உள்ளது.

ஆனால், புதிய கட்டடத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வன விலங்குகள் தொல்லை இருக்கும் இடத்திலும் ஆள் அரவம் இல்லாத பகுதியிலும் அலுவலகம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் சார்பாக மாவட்ட நிர்வாகத்துக்குப் பலமுறை மனு அளித்தும் அதைக் கேட்காமல் ஊருக்கு வெளியில் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். 

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வான முகமது அபுபக்கர் ஏற்கெனவே கலெக்டரிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார் அத்துடன், தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வுக்காக வந்திருந்த சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், ``புதிய தாலுகாவாக கடையநல்லூர் அறிவிக்கப்பட்டு மெயின்ரோட்டில் உள்ள வேலாண்மைத்துறை கட்டடத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடத்தை, 3 பேரூராட்சி 2 நகராட்சி, 25 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியான இடத்தில் கட்ட வேண்டும்.

ஆனால், போதுமான பேருந்து வசதியோ சாலைவசதியோ இல்லாத வனவிலங்குகள் நடமாடும் இடத்தில் சமூகவனக் காட்டை கரட்டுப் புறம்போக்கு எனத் திருத்தி கடந்த 13-ம் தேதி இரவு 7 மணிக்கு அவசரமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் ரியல் எஸ்டேட் தொழிலை வளர்ப்பதற்காக இப்படி அவசரமாகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

நகரின் மையப் பகுதியான போக்குவரத்துக்கு வசதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ள 7 ஏக்கர் அளவுள்ள அரசு புறம்போக்கு இடம் அல்லது அட்டக்குளம் அருகில் உள்ள பால்ஊரணியின் மேற்பகுதியில் புதிய கட்டடத்தைக் கட்டலாம். தற்போது செயல்பட்டு வரக்கூடிய வேளாண்மைத் துறை வளாகத்துக்குப் பின் பகுதியில்கூட நிரந்தரக் கட்டடத்தைக் கட்ட முடியும். அதனால் அதற்குப் பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்’’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடப்பதால் அதிருப்தியடைந்த பல்வேறு அமைப்பினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் சார்பாக இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடையநல்லூரில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டுள்ளன. தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மாலையில் மணிக்கூண்டு அருகே கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.