Published:Updated:

கழுதையிடம் மனு.. பாடைகட்டி ஊர்வலம்.. - தொடரும் விவசாயிகளின் நூதனப் போராட்டம்

கழுதையிடம் மனு.. பாடைகட்டி ஊர்வலம்.. - தொடரும் விவசாயிகளின் நூதனப் போராட்டம்
கழுதையிடம் மனு.. பாடைகட்டி ஊர்வலம்.. - தொடரும் விவசாயிகளின் நூதனப் போராட்டம்

விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து திருப்பூர் விவசாயிகள் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக்கூறி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உயர்மின் கோபுர திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவதைப்போல நிலத்துக்கு அடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 

ஆனால் விவசாயிகளின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், மின் கோபுரங்கள் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகிறது அரசு. எனவே, தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசை கண்டித்தும், விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமையவிருப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடந்த சில நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 6 நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு நூதன முறையிலான போராட்டக் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அதன் ஒருபகுதியாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், கழுதையிடம் மனு அளிப்பது போலவும், மாதிரி  மின்கோபுரத்தை பாடையில் கட்டி சங்கு ஊதி ஊர்வலமாக எடுத்துச் சென்றும், வாயில் கறுப்பு துணி கட்டியும் மத்திய- மாநில அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.