Published:Updated:

`போராட்ட மேடையில் தற்கொலை காட்சி’ - திருப்பூர் விவசாயிகளின் நூதனப் போராட்டம்

`போராட்ட மேடையில் தற்கொலை காட்சி’ - திருப்பூர் விவசாயிகளின் நூதனப் போராட்டம்
`போராட்ட மேடையில் தற்கொலை காட்சி’ - திருப்பூர் விவசாயிகளின் நூதனப் போராட்டம்

விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து திருப்பூர் விவசாயிகள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், மேடையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதுபோல போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

`போராட்ட மேடையில் தற்கொலை காட்சி’ - திருப்பூர் விவசாயிகளின் நூதனப் போராட்டம்

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக்கூறி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த உயர்மின் கோபுர திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவதைப்போல நிலத்துக்கு அடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், மின் கோபுரங்கள் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது அரசு. எனவே, தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசை கண்டித்தும், விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமையவிருப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடந்த டிசம்பர் 17-ம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்கள்.

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் கடந்த 9 நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் துவக்கத்தில் காத்திருப்புப் போராட்டமாக துவங்கினாலும், தற்போது தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. கடந்த 9 நாள்களாக தினமும் ஒவ்வொரு வடிவில் நூதனமான முறையில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டக் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள்.

கழுதையிடம் மனு அளிப்பது, மாதிரி உயர் மின்கோபுரத்தைப் பாடையில் கட்டி சங்கு ஊதி ஊர்வலமாக எடுத்துச் செல்வது, தென்னை மரங்களுக்கு ஒப்பாரி வைப்பது என பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயிகள், இன்று போராட்ட மேடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதுபோல காட்சிகளை அமைத்து மத்திய மாநில அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் உயர்மின் கோபுர திட்டத்தை ரத்து செய்யும் வரை இப்போராட்டம் கொழுந்துவிட்டு எரியும் என்பதையும் தீர்க்கமாக தெரிவித்திருக்கிறார்கள் விவசாயிகள்.