Published:Updated:

தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம் - கடலூரில் இரண்டு பெண் அதிகாரிகள் கைது

தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம் - கடலூரில் இரண்டு பெண் அதிகாரிகள் கைது
தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம் - கடலூரில் இரண்டு பெண் அதிகாரிகள் கைது

கடலூர் மாவட்டத்தில் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் இரண்டு இடங்களில் லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் முதுநகர் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹவுஸ் அகமது (65). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். ஹவுஸ் அகமது தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம், ரூ. 50,000 உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்குக் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறையின் விரிவாக்க அலுவலர் ரூ. 3,000 பணம் கேட்டுள்ளார். இது குறித்து ஹவுஸ் அகமது கடலூரில் உள்ள கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் பி.முட்லூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் ஹமீது என்பவரும் தன் மகளுக்குத் திருமண உதவித்தொகை கேட்டு பரங்கிப்பேட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரிடமும் ரூ. 3,000 சமூக நல விரிவாக்க அலுவலர் லஞ்சம் கேட்டுள்ளார். அவரும் கடலூர் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி தேவநாதன் மேற்பார்வையில் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவலர்கள் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவலர்கள் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இன்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடலூரில் புகார் கொடுத்த ஹவுஸ் அகமதுவிடம் ரூ. 3,000 லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தெய்வநாயகி (58) என்பவரைக் கைது செய்தனர். இதேபோல் பரங்கிப்பேட்டையில் புகார் கொடுத்த ஷேக்ஹமீதுவிடம் ரூ. 3,000 லஞ்சம் பெற்ற பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பானுமதி (58) என்பரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடலூரில் ஒரே நாளில் 2 அதிகாரிகள் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
.