Published:Updated:

``என்.எல்.சி நிறுவனத்துக்கு ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம்’’ - அன்புமணி ஆவேசம்!

``என்.எல்.சி நிறுவனத்துக்கு ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம்’’ - அன்புமணி ஆவேசம்!
``என்.எல்.சி நிறுவனத்துக்கு ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம்’’ - அன்புமணி ஆவேசம்!

நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க 26 கிராமங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ம.க-வினர் மற்றும் 26 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.``என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க விவசாய நிலங்களை எடுக்க முடிவு செய்துள்ளது. 12,122 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார்கள். இதைப் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. எங்களைப் பொறுத்தவரை, இது வளர்ச்சித் திட்டம் கிடையாது. கிட்டத்தட்ட 40 கிராமங்களை அப்புறப்படுத்தி அதில் வாழும் சுமார் 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து மூன்றாவது சுரங்கம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. கடந்த ஆண்டு என்.எல்.சி நிறுவனத்துக்கு லாபம் மட்டும் 3,200 கோடி. இதில் இந்த
மாவட்டத்துக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்த ஒரு பயனும் இல்லை. நிலம் கொடுத்தவர்கள் 8,000 பேருக்கு வேலை
தரவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10,000 பேர் பணி நிரந்தரம் செய்யவில்லை.

சுரங்கங்களில் இருந்து அதிக அளவில் நிலத்தடி நீரை வெளியேற்றி நிலக்கரி எடுத்து தனியார் அனல் மின் நிலையங்களுக்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதாளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. தற்பொழுது நிலம் கையகப்படுத்த உள்ள இடம் பொன் விளையும் பூமி. இதை எடுக்க நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. என்.எல்.சி நிறுவனம் மின்சாரம் தயாரிக்க சோலார் போன்ற மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடையாது.

எங்கள் பகுதியை மாசுபடுத்துகிறது, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கின்றது போன்ற பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்தி எங்களுக்குப் பயன் இல்லாத என்.எல்.சி நிறுவனம் எங்களுக்குத் தேவை இல்லை. இந்த நிறுவனத்தை மூட வேண்டும். என்.எல்.சி நிறுவனத்துக்கு ஒரு பிடி மண்ணைக்கூட தரமாட்டோம். விவசாயம்தான் வேண்டும். விவசாயத்தை அழித்து ஒரு திட்டம் எங்களுக்குத் தேவை இல்லை. தமிழ்நாட்டில் ஒரு பலவீனமான அரசு இருப்பதால், இங்கு எந்த திட்டம் வேண்டுமானாலும் திணிக்க முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது எதிர்த்தார், அதனால் கொண்டுவர முடியவில்லை. என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும், அப்படி மீறி நிர்பந்தப்படுத்தினால் எந்தவிதமான போராட்டங்களையும் நடத்துவோம்'' என்றார்.