Published:Updated:

`எங்களைச் சீண்டினால் போராட்டம் வெடிக்கும்!’ - மாநகராட்சிக் கூட்டத்தில் கொந்தளித்த வியாபாரிகள்!

`எங்களைச் சீண்டினால் போராட்டம் வெடிக்கும்!’ - மாநகராட்சிக் கூட்டத்தில் கொந்தளித்த வியாபாரிகள்!
`எங்களைச் சீண்டினால் போராட்டம் வெடிக்கும்!’ - மாநகராட்சிக் கூட்டத்தில் கொந்தளித்த வியாபாரிகள்!

``விரிவாக்கம் என்ற பெயரில் ஒரே குடையின் கீழ் ஊசி முதல் பெரிய பொருள் வரை கிடைக்கும் 600 கடைகள் கொண்ட மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்டப்படும் என்ற திட்டத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் வியாபாரிகளின் போராட்டம் வெடிக்கும்” என தூத்துக்குடி மாநாகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வ.உ.சி. தினசரி சந்தையில் உள்ள கடைகளை இடித்துவிட்டு, நவீன முறையில் தனியார் பங்களிப்பில் ரூ.30.80 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்கத்தினர், ஹோட்டல்கள் சங்கத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் பேசுகையில், ``1920-ல் சிறிய அளவிலான கடைகளுடன் துவக்கப்பட்டது இச்சந்தை. தொடர்ந்து கடைகளின் எண்ணிக்கையும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் பெருகியது. தற்போது 601 கடைகளும், தலைச்சுமையாக 200-க்கும் மேற்பட்டவைகளும் உள்ளன. இந்தச் சந்தையை நம்பி வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள், கைவண்டி, ஆட்டோ, வேன் ஒட்டுனர்கள், தலைச்சுமை தொழிலாளர்கள் என  சுமார் 8,000 குடும்பங்கள் உள்ளன.

காய்கறிகள், பழங்கள், கீரைகள், தேங்காய், இலை, ஆடு, கோழி இறைச்சி வகைகள், பழைய துணிகள், புதிய துணிகள், பேன்ஸி பொருள்கள், பனை பொருள்கள், மண்பாண்டங்கள், செல்லப்பிராணிகள், பழைய இரும்பு பொருள்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் உதிரிபாகங்கள், கடல் தொழில்சார் பொருள்கள், உணவகங்கள், பூக்கடைகள், பேக்கரிகள் என ஊசி முதல் பர்னிச்சர் பொருள்கள் வரை அனைத்துப் பொருள்களையும் இந்தச் சந்தைக்கு வந்தால்  ஒரே இடத்தில் வாங்கி விடலாம். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துவருகிறது.

இந்த நிலையில், தற்போது இந்தக் கடைகளை இடித்துவிட்டு ரூ.30.80 கோடி மதிப்பீட்டில் நவீன வணிக வளாகம் கட்ட மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பு கூறுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சந்தையில் உள்ள கடைகள் கூரைக் கடைகளாக இருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலான கடைகள் எரிந்து சாம்பலாயின. ``சொந்தப் பணத்தின் மூலம் அவரவர் வாடகை கடையைக் கட்டிக்கொள்ளலாம்” என்று, அப்போதைய நகராட்சி நிர்வாகம் அளித்த அனுமதியின்படி அவரவர் சொந்தப் பணத்தை வைத்துக் கடைகளை கட்டினோம். அத்துடன், சந்தைப் பகுதியில் உள்ள ரோடுகளை உயர்த்தியதால் மழைக் காலங்களிலும் தண்ணீர் கட்டாத சூழலே இன்று வரைக்கும் உள்ளது.

இந்த நிலையில், கடைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்போகிறோம்னு சொன்னா, நாங்க என்ன செய்வோம்? இந்தச் சந்தை இருக்கும் பகுதி கடற்கரையில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் உள்ளது. இது `சுனாமிப் பகுதி' என வரையறுக்கப்பட்ட பகுதியாகும். அரசின் விதிகளின்படி இந்தப்பகுதியில் அதிக உயரக் கட்டடம் கட்ட முடியாது எனும்போது வணிக வளாகத்தைக் கட்ட எப்படி திட்டமிட முடிந்தது. வியாபாரிகள், பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்தும் கடைகள் அப்புறப்படுத்தப்படக் கூடாது என்பதுதான்” என்றனர்.

சில விவசாயிகளோ, ``தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அறிவிக்கும் திட்டமே ஏற்கெனவே நிறைவேற்றப்படாத நிலையில், புதிய வணிகவளாகத் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும். தூத்துக்குடியில் தற்போது வரை நிலைமை சீராகவில்லை. இந்த நிலையில், வியாபாரிகளை வஞ்சிக்கும் திட்டம் தேவையா? எம்.பி., தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இந்தத் திட்டத்தை செயல்பட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் வியாபாரிகள் சங்கங்கள், அவர்களின் உறவினர்கள் என மொத்தம் சுமார் 1 லட்சம் பேர் வரும் தேர்தலைப் புறக்கணிப்போம். ஸ்டெர்லைட் பிரச்னையை விடவும், வியாபாரிகளைச் சீண்டினால் போராட்டம் பூதாகரமாக வெடிக்கும்.” எனவும் மிரட்டும் தொனியில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த கருத்துகளையும் பதிவு செய்த ஆணையர் அமைதியாகச் சென்றார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரச்னை முடியாத நிலையில் வியாபாரிகள் போராட்டம் துவங்கும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.