Published:Updated:

``கடனைக் கட்டுவதற்கு கால அவகாசம் கொடுங்கள்" - ஆலங்குடியில் வங்கியை முற்றுகையிட்ட பெண்கள்

``கடனைக் கட்டுவதற்கு கால அவகாசம் கொடுங்கள்" - ஆலங்குடியில் வங்கியை முற்றுகையிட்ட பெண்கள்
``கடனைக் கட்டுவதற்கு கால அவகாசம் கொடுங்கள்" - ஆலங்குடியில் வங்கியை முற்றுகையிட்ட பெண்கள்

கடனைக் கட்டவில்லை என்பதால், வங்கிக் கணக்கை முடக்கி வைத்த வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலங்குடியில் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயங்கி வரும் வங்கியில், இந்தப் பகுதி சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கடன் பெற்றுள்ளனர். தற்போது கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு, பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, போதுமான வருமானம் இல்லாததால், தாங்கள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களின் நிலை தெரிந்தும் வங்கி நிர்வாகம் சார்பில், கடனை உடனடியாகக் கட்ட வலியுறுத்தித் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கடனைச் சரியாக கட்டாதவர்களின் வங்கி கணக்குகள்
அனைத்தும் முடக்கி வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள், வேலை செய்தும் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வந்த நிவாரணப் பணத்தை எடுக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால், கொதிப்படைந்த பெண்கள் ஒன்று திரண்டு வந்து வங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். வங்கிக் கடன்களை கட்டுவதற்கு 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர். தொடர்ந்து வங்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அனைவரின் வங்கிக் கணக்கும் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என வங்கி நிர்வாகம் உறுதி அளித்ததால், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். வங்கி முற்றுகை போராட்டத்தால், ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.