Published:Updated:

`அவசரம் அவசரமா ஜப்தி பண்ணப் பாக்குறாங்க!’ - அறநிலையத் துறைக்கு எதிராகக் கரூரில் போராட்டம்

`அவசரம் அவசரமா ஜப்தி பண்ணப் பாக்குறாங்க!’ - அறநிலையத் துறைக்கு எதிராகக் கரூரில் போராட்டம்
`அவசரம் அவசரமா ஜப்தி பண்ணப் பாக்குறாங்க!’ - அறநிலையத் துறைக்கு எதிராகக் கரூரில் போராட்டம்

கரூர் நகர மையத்தில் உள்ள சோழர்கால கோயிலான கல்யாண பதிபதீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள 11 வீடுகளை ஜப்தி செய்ய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணைய அதிகாரிகள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கால அவகாசம் கேட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால், ஜப்தி செய்து சீல் வைப்பதை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தோம். ``கரூர் நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது மிகவும் பழமைவாய்ந்த கல்யாண பசுபதீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் மூன்று ஏக்கர் 24 சென்ட் ஆகும். இந்தக் கோயிலைச் சுற்றி ஆறு ஏக்கர் நிலத்தில் 200 வீடுகள் மற்றும் பல்வேறு வியாபார ஸ்தலங்களும் உள்ளன. இந்நிலையில், பசுபதீஸ்வரர் கோயில் சார்பில் இந்த ஆறு ஏக்கர் நிலமும் கோயிலுக்குச் சொந்தமானது என்று அந்த ஆறு ஏக்கர் நிலத்தில் வசிக்கும் 11 பேர் மீது மட்டும் இடத்தைக் காலி பண்ணச் சொல்லி வழக்கு தொடுக்கப்பட்டது. திருச்சி உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை என்று நடைபெற்ற வழக்கில்,கோயிலுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், அந்த 11 பேரும், `200 வீடுகளும் ஏகப்பட்ட கடைகளும் அவங்க சொல்ற இடத்துல இருக்கு. ஆனால், எங்க 11 பேரை மட்டும் கிளப்பப் பார்க்கிறார்கள். அந்த இடமே கோயிலுக்குச் சொந்தமானது இல்லை. கோயில் இருக்கும் இடம், நாங்க குடியிருக்கும் இடம்னு மொத்தம் 10 ஏக்கர் 48 சென்ட் இடமும் 1880 வரை 825 சி  சர்வே எண்ணின்படி அரசு புறம்போக்கு (தோப்பு) நிலமாக இருந்திருக்கு. 

அதை 10.10.1890-ல் வருவாய்த்துறை ஆணைப்படி, 'இந்த நிலம் அரசு புறம்போக்கு எனவும், அந்த நிலத்தை தேவஸ்தானத்துக்குக் கொடுத்து, கோரிய இனாம்தாரர்களுக்கு வழங்கும்படி ஆணையிடப்பட்டது. அதனால், தேவஸ்தானம் இந்த ஆறு ஏக்கரையும் விருப்பப்பட்டவர்களுக்கு 1942 வரை விற்பனை செய்திருக்கிறார்கள். அந்த வகையில்தான் எல்லோரும்போல நாங்க 11 பேரும் அவங்கங்க இடத்தைக் காசு கொடுத்து வாங்கினோம். இந்த இடத்தைக் கோயில் நிர்வாகம் வாங்கவே இல்லை. அதேபோல், கோயில் இருப்பதே அரசு புறம்போக்கு இடத்தில்தான். 1963-ல் வருவாய்த்துறை உதவி நிலவரித் திட்ட அலுவலர் விசாரணை பண்ணி எல்லோருக்கும் பட்டா கொடுத்துட்டார். இந்த ஆதாரங்களை திரட்டுவதற்குள் கோயிலுக்கு சார்பா தீர்ப்பாயிட்டு. ஆனா, நாங்க இந்த ஆதாரங்களைக் கொண்டு உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சீராய்வு மனு போட்டுள்ளோம். வரும் மூன்றாம் தேதி அது விசாரணைக்கு வருது. இதற்கிடையில், சேலத்தைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்னு போட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வந்திருச்சு. பொதுவா சொன்ன அந்தத் தீர்ப்பை எங்க 11 பேர்களுக்கு மட்டும் எடுத்துக்கொண்ட கோயில் நிர்வாகம், `ஏழு நாள்களுக்குள் இடத்தைக் காலி பண்ண வேண்டும். இல்லைன்னா, இடங்களை ஜப்தி பண்ணி சீல் வைப்போம்’னு 11 பேர் வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டினாங்க. 

பொதுவாகவும் ஃப்ளெக்ஸ் வச்சு எச்சரிக்கை செஞ்சாங்க. அதன்படிதான், சீராய்வு மனுமீதான விசாரணை 3-ம் தேதி வரும் நிலையில், அவசரம் அவசரமாக சீல் வைக்க பார்க்கிறாங்க. எந்த முன்னறிவிப்பும் இன்றி, இப்படி ஜப்தி பண்ண வந்திருக்காங்க’’ என்று குமுறினார்கள். அதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, `முதல்ல 11 பேர் வீடுகளைக் காலி பண்ணிட்டு, தொடர்ந்து 200 குடியிருப்புகளையும், வியாபார ஸ்தலங்களையும், இனாம் நிலமாக இருந்து வாங்கப்பட்ட கரூர் நகரம் முழுவதும் உள்ள 2,000 ஏக்கர் நிலத்தையும் இப்படிப் பிடுங்கும் நிலை வரும்" என்றபடி மக்களைத் திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ஆனால், இன்று மதியம் அந்த 11 வீடுகளையும் ஜப்தி செய்து சீல் வைக்க திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி தலைமையிலான அதிகாரிகள் வந்தனர். முதலில் வேலுச்சாமி என்பவரது வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தார். அதையொட்டி பாதுகாப்புக்காகப் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படை வீரர்களும் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

ஆனால், முதல் வீட்டை சீல் வைத்தவுடன் அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். அவர்களில் சிலர், ``இந்த அநியாயத்தைத் தடுத்து நீயே தட்டிக் கேளு’’ என்றபடி ஈஸ்வரன் கோயிலில் கடவுளிடம் மனு கொடுத்தனர். ``மேற்கொண்டு சீல் வைக்கக் கூடாது. 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருது. அதுவரை ஜப்தி பண்ணுவதை தள்ளி வைக்கணும்’’ என்று வாக்குவாதம் செய்தனர். காவல்துறை அவர்களை சமாதானம் பண்ணப் பார்த்தது. முடியவில்லை. இதனால், கல்யாணி மேற்கொண்டு வீடுகளை ஜப்தி பண்ணி சீல் வைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ஆனால், மக்கள் கலையாமல் அங்கேயே அமர்ந்ததால், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்கள் நடமாட்டம் மிகுந்த பசுபதீஸ்வரர் கோயிலைச் சுற்றி உள்ள வீடுகளை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.