Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...
பிரீமியம் ஸ்டோரி
News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...

செயற்கைகாலுக்கு பணம் தருவதில் அரசு மெத்தனம்!

சில துயரங்கள் அவ்வளவு எளிதில் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்கள் பலியாகி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ‘துப்பாக்கிச்சூட்டில் காலை இழந்த ஓர் இளைஞருக்கு செயற்கைக்கால் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு சொன்னது. ஆனால், அவருக்குச் செயற்கைக் கால் வாங்குவதற்கான தொகையைச் செலுத்துவதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் வலது காலில் தொடை வரையில் எடுக்கப்பட்டு, கடும் துயரத்தில் இருக்கிறார் இளைஞர் பிரின்ஸ்டன். அவரிடம் பேசினோம். ‘‘தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நூறு நாள்கள் இருந்தேன். அதன் பிறகு செயற்கைக் கால் பொருத்தி, நடக்கும் பயிற்சிக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் முப்பது நாள்கள் சிகிச்சையில் இருந்தேன். அங்கிருந்து தினமும் ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாமலை நகரில் உள்ள ‘ஓட்டோ போக்’ என்ற செயற்கைக்கால் பயிற்சி மையத்துக்குப் போய் செயற்கைக்கால் பொருத்தி நடைப்பயிற்சி செய்தேன். ஜெர்மனியிலிருந்து செயற்கைக்கால் வரவழைத்தனர். பாதம் மட்டும் சரியான அளவில் கிடைக்கவில்லை. இப்போது அந்த நிறுவனத்தினர், ‘பாதமும் வந்துடுச்சு, செயற்கைக் காலுடன் பொருத்தித் தயாரா வச்சிருக்கோம்’ என்று சொன்னார்கள். செப்டம்பர் 28-ம் தேதி திருச்சிக்குப் போனோம். ‘இந்தச் செயற்கைக் காலோட மொத்த மதிப்பு ரூ.7.40 லட்சம். அரசு சார்பில் ரூ.3.50 லட்சம்தான் கட்டியிருக்காங்க. மீதிப் பணத்தைக் கட்டினால்தான் கால் தரமுடியும்’ எனச் சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் தூத்துக்குடிக்கு வந்துட்டேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சூழலில், கருணை அடிப்படையில தூத்துக்குடியில எனக்குத் தலையாரி வேலைக்குப் பணி நியமன ஆணை கொடுத்தார்கள். தினமும் அம்மாவுடன் ஆட்டோவில் போய்வருகிறேன். தலையாரி வேலைன்னா தினமும் களப் பணி செய்யணும். நிறைய மக்களைத் தேடிப்போய் பார்க்கணும். அப்படியே செயற்கைக்காலை பொருத்தினாலும் அதை வெச்சிக்கிட்டு தினமும் பல கிலோ மீட்டர் நடக்க முடியுமா? டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். ஏதாச்சும் கிளார்க் வேலை போட்டுக்கொடுக்கச் சொல்லுங்க.

நான் சிகிச்சையில இருந்தப்போ ரஜினி சார் என் நிலைமையைப் பார்த்துக் கண் கலங்கினார். ‘சிகிச்சை முடிஞ்சதும் சென்னைக்கு வாங்க எல்லா உதவிகளும் செய்யுறேன்’னு சொல்லிட்டுப் போனார். இந்த நிலைமையில் அவரை எப்படிப் போய் பார்க்கிறதுன்னு தெரியலை. செயற்கைக்கால் பொருத்துறதுக்கு முன் சிலிக்கான் ரப்பர் சாக்ஸை, மூட்டுப்பகுதியில் மாட்டிட்டுத்தான் காலைப் பொருத்த வேண்டும். அதோட விலை மட்டுமே 35 ஆயிரம். இதுக்கெல்லாம் என்ன செய்யப்போறேன்னு தெரியலை. அரசுதான் உதவணும்...” என்கிறார் ஏக்கத்துடன்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...

பிரின்ஸ்டன் நிலை குறித்து அறிந்த ‘பச்சைத் தமிழகம்’ கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன், ராதாபுரம் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றிருக்கிறார். நம்மிடம் பேசிய சுப. உதயகுமாரான், ‘‘டிப்ளமோ படித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் பிளான்ட் ஆபரேட்டராகப் பணியாற்றிவந்த பிரின்ஸ்டன், மதிய உணவு சாப்பிட வெளியே வந்தபோது, துப்பாக்கிச்சூட்டில் குண்டடிபட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அரசு சார்பில் இன்னும் பணம் கொடுக்காததால், செயற்கைக்காலை செய்துவைத்திருக்கும் நிறுவனம் அதைத் தர மறுப்பதாகச் சொன்னார். அரசு தலையிட்டு அவருக்குத் தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்றார்.

திருச்சியில் உள்ள செயற்கைக்கால் பயிற்சி மையத்தின் மேலாளர் ரெக்ஸ், ‘‘பிரின்ஸ்டனுக்கு செயற்கைக் கால் வந்துவிட்டது. காசோலையை தமிழக அரசு அனுப்பிவைத்தால் உடனடியாக அவருக்குப் பொருத்துவோம்’’ என்றார். இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள ராதாபுரம் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை, ‘‘பிரின்ஸ்டனுக்குச் செயற்கைக்கால் பொருத்துவது தொடர்பான விவகாரம் எனது கவனத்துக்கு வந்ததும், மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசினேன். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்தத் தொகையை அளிக்க முன்வந்துள்ளது. விரைவில் அவருக்குச் செயற்கைக்கால் பொருத்தப்படும்’’ என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...

இதுபற்றி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டோம். ‘‘பிரின்ஸ்டனுக்கு செயற்கைக் காலுக்கான தொகையை அனுப்பிவிட்டோம்.அந்த நிறுவனத்தினர் கொட்டேஷன் அனுப்புவதில் தாமதம் செய்ததால் பணம் அனுப்பத் தாமதமாகி விட்டது. அவரால் அலைந்து திரிந்து வேலை செய்ய முடியாது என்பதைக் கவனத்தில் கொண்டு, தற்காலிகமாக அவருக்கு அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்து வேலைசெய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதற்காக அரசிடம் எடுத்துச் சொல்லி மாற்றுப் பணிக்கான ஆணை வழங்குமாறு பரிந்துரை செய்வோம்’’ என்றார் அக்கறையுடன்.

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்