Published:Updated:

சிறப்புச் சட்டம் நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் - ஸ்டெர்லைட்எதிர்ப்பு இயக்கம்

தமிழக சட்டமன்றத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் ஆலையை தூத்துக்குடியை விட்டு அகற்றிடவும் வலியுறுத்தி சிறப்புச் சட்டம் இயற்றாவிட்டால், தமிழகம் திரும்பிப்பார்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சீல் வைத்து மூடியுள்ளது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஆலையை இயக்க அனுமதி அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை ஆதரித்து, ஆலையை விரைவில் திறக்க வேண்டும் என ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவருகின்றனர்.  மற்றொரு புறம், இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ளது. இக்கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் முதலமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பிவருகின்றனர். இந்நிலையில், இக்கூட்டத் தொடரில் சிறப்புச் சட்டம் இயற்றாவிட்டால், மிகப்பெரிய அளவில் போரட்டம் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு,                             “தூத்துக்குடியில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுத்து வருகிறது ஸ்டெர்லைட் ஆலை. இன்று, ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஜாதி, மதம், கட்சியைத் தாண்டி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற கருத்துதான் மக்களிடையே ஒத்த கருத்தாக உள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர், வரும் ஜனவரி 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தூத்துக்குடியை விட்டு அகற்றிட வலியுறுத்தியும், சிறப்புத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், கூட்டத் தொடரின் அடுத்த நாளான ஜனவரி 7-ம் தேதி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்தப் போராட்டம், தமிழகமே திரும்பிப்பார்க்கும் வகையில் இருக்கும்.  

சமூக வளைதளங்களில், குறிப்பாக வாட்ஸ் அப்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செய்தி பரப்பும் எதிர்ப்புக் குழுவினர்கள்மீது விசாரணை என்ற பெயரில் அவர்களின் குடும்ப விவரங்களை மூன்று பக்க அளவில் 30-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டதுடன், அவர்களது நெருங்கிய நண்பர்கள் ஐந்து பேரின் பெயர், முகவரி, தொடர்பு எண் போன்றவற்றைக் கேட்பதும் தனிமனித உரிமைகளில் தலையிடுவதாகும். குறிப்பாக, தூத்துக்குடியில் ஆலைக்கு எதிராக ஒரு அரங்கக்கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி  மறுப்பதும் தொடர்கதையாகிவருகிறது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், காவல்துறை ஸ்டெர்லைட் ஆலைத்தரப்புக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டுவருகிறது” என்றார்.